search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    6-வது ஒருநாள் போட்டியில் கோலியின் அதிரடி சதத்தால் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
    X

    6-வது ஒருநாள் போட்டியில் கோலியின் அதிரடி சதத்தால் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி

    தென்ஆப்ரிக்காவுக்கு எதிரான 6-வது ஒருநாள் போட்டியில் விராட் கோலியின் அதிரடி சதத்தால் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. #SAvIND #INDvSA
    செஞ்சூரியன்:

    இந்தியா - தென்ஆப்பிரிக்கா இடையிலான 6-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி செஞ்சூரியனில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பந்து வீச்சை தேர்வு செய்தார்.

    மார்கிராம், அம்லா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். தென்ஆப்பிரிக்கா அணி 23 ரன்களுக்குள் முதல் விக்கெட்டை இழந்தது. அம்லா 10 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து டி வில்லியர்ஸ் களம் இறங்கினார். மார்கிராம் 30 பந்தில் 24 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். இந்த இரண்டு விக்கெட்டுக்களையும் ஷர்துல் தாகூர் வீழ்த்தினார்.

    3-வது வீரராக களம் இறங்கிய டி வில்லியர்ஸ் 30 ரன்கள் எடுத்திருந்த நிலையில் சஹால் பந்தில் ஸ்டம்பை பறிகொடுத்தார். அதன் பின்னர் தென்ஆப்பிரிக்கா அணி திணற ஆரம்பித்தது. 4-வது வீரராக களம் இறங்கிய சோண்டோ மட்டும் தாக்குப்பிடித்து அரைசதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 74 பந்தில் 3 பவுண்டரி, 2 சிக்சருடன் 54 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    அதன்பின் வந்த கிளாசன் (22), பெஹார்டியன் (1), கிறிஸ் மோரிஸ் (4) அடுத்தடுத்து ஆட்டமிழக்க தென்ஆப்பிரிக்கா 151 ரன்கள் எடுப்பதற்குள் 7 விக்கெட்டுக்களை இழந்தது. 8-வது விக்கெட்டுக்கு பெலுக்வாயோ உடன் மோர்னே மோர்கல் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 36 ரன்கள் சேர்த்தது. மோர்கல் 19 பந்தில் 2 சிக்சருடன் 20 ரன்கள் எடுத்து ஹர்திக் பாண்டியா பந்தில் ஆட்டமிழந்தார்.



    9-வது விக்கெட்டுக்கு பெலுக்வாயோ உடன் இம்ரான் தஹிர் ஜோடி சேர்ந்தார். தாஹிர் 2 ரன்கள் எடுத்த நிலையில் பும்ரா பந்தில் ஆட்டமிழந்தார். கடைசி விக்கெட்டுக்கு பெலுக்வாயோ உடன் நிகிடி ஜோடி சேர்ந்தார். பெலுக்வாயோ 42 பந்தில் தலா இரண்டு பவுண்டரி, 2 சிக்சருடன் 34 ரன்கள் எடுத்து கடைசி விக்கெட்டாக ஆட்டமிழக்க தென்ஆப்பிரிக்கா 46.5 ஓவரில் 204 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இந்திய அணி தரப்பில் ஷர்துல் தாகூர் 4 விக்கெட்டும், பும்ரா மற்றும் சாஹல் ஆகியோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    அதைத்தொடர்ந்து 205 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷிகர் தவானும், ரோகித் சர்மாவும் களமிறங்கினர். ரோகித் சர்மா 15 ரன்கள் எடுத்திருந்த நிலையில் நிகிடி பந்தில் ஆட்டமிழந்தார். அதன்பின் தவானுடன், கோலி ஜோடி சேர்ந்தார். தவான் நிதானமாக விளையாட, கோலி அதிரடியாக விளையாடி ரன்குவித்தார்.

    தவான் 18 ரன்கள் எடுத்திருந்த நிலையில் நிகிடி பந்தில் ஆட்டமிழந்தார். அதன்பின் ரகானே களமிறங்கினார். சிறப்பாக விளையாடிய கோலி அரைசதம் அடித்தார். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய அவர் 82 பந்துகளில் சதம் அடித்தார். இதில் 17 பவுண்டரிகள் அடங்கும். இது சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அவரது 35-வது சதமாகும். மேலும் இந்த ஒருநாள் தொடரில் அவரது மூன்றாவது சதமாகும்.



    இந்திய அணி 32.1 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 206 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. விராட் கோலி 129 ரன்களுடனும், ரகானே 34 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். தென்ஆப்ரிக்கா அணி பந்துவீச்சில் நிகிடி 2 விக்கெட்கள் வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் ஆறு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 5-1 என இந்திய அணி கைப்பற்றியது.

    இந்திய அணியின் விராட் கோலி ஆட்டநாயகன் விருதையும், தொடர்நாயகன் விருதையும் தட்டிச்சென்றார். அடுத்ததாக இந்தியா - தென்ஆப்ரிக்கா அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் நடக்கிறது. முதல் டி20 போட்டி 18-ம் தேதி நடைபெற உள்ளது. #SAvIND #INDvSA
    Next Story
    ×