search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    6-வது ஒருநாள் போட்டியில் தென்ஆப்பிரிக்காவை 204 ரன்னுக்குள் கட்டுப்படுத்தியது இந்தியா
    X

    6-வது ஒருநாள் போட்டியில் தென்ஆப்பிரிக்காவை 204 ரன்னுக்குள் கட்டுப்படுத்தியது இந்தியா

    சுழற்பந்து வீச்சாளர்கள் மற்றும் ஷர்துல் தாகூர் பந்து வீச்சால் 6-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தென்ஆப்பிரிக்கா 204 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. #SAvIND
    இந்தியா - தென்ஆப்பிரிக்கா இடையிலான 6-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி செஞ்சூரியனில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பந்து வீச்சை தேர்வு செய்தார். இந்த அணியில் புவனேஸ்வர் குமார் நீக்கப்பட்டு ஷர்துல் தாகூர் சேர்க்கப்பட்டார். தென்ஆப்பிரிக்கா அணியில் நான்கு மாற்றங்கள் செய்யப்பட்டது. ஷம்சி, ரபாடா, டுமினி, மில்லர் ஆகியோர் நீக்கப்பட்டு சோண்டோ, பெஹார்டியன், மோரிஸ், இம்ரான் தஹிர் ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.

    மார்கிராம், அம்லா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். தென்ஆப்பிரிக்கா அணி 23 ரன்களுக்குள் முதல் விக்கெட்டை இழந்தது. அம்லா 10 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து டி வில்லியர்ஸ் களம் இறங்கினார். மார்கிராம் 30 பந்தில் 24 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். இந்த இரண்டு விக்கெட்டுக்களையும் ஷர்துல் தாகூர் வீழ்த்தினார்.

    4-வது மற்றும் ஐந்தாவது போட்டியில் ஏமாற்றம் அளித்த டி வில்லியர்ஸ் இந்த போட்டியில் ரசிகர்களை குஷி படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 3-வது வீரராக களம் இறங்கிய அவர் 30 ரன்கள் எடுத்திருந்த நிலையில் சாஹல் பந்தில் ஸ்டம்பை பறிகொடுத்தார். அவர் 34 பந்தில் 4 பவுண்டரியுடன் இந்த ரன்னை எடுத்தார்.



    டி வில்லியர்ஸ் அவுட்டான பின்னர் தென்ஆப்பிரிக்கா அணி திணற ஆரம்பித்தது. 4-வது வீரராக களம் இறங்கிய சோண்டோ மட்டும் தாக்குப்பிடித்து அரைசதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 74 பந்தில் 3 பவுண்டரி, 2 சிக்சருடன் 54 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    அதன்பின் வந்த கிளாசன் (22), பெஹார்டியன் (1), கிறிஸ் மோரிஸ் (4) அடுத்தடுத்து ஆட்டமிழக்க தென்ஆப்பிரிக்கா 151 ரன்கள் எடுப்பதற்குள் 7 விக்கெட்டுக்களை இழந்தது. 8-வது விக்கெட்டுக்கு பெலுக்வாயோ உடன் மோர்னே மோர்கல் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 36 ரன்கள் சேர்த்தது. மோர்கல் 19 பந்தில் 2 சிக்சருடன் 20 ரன்கள் எடுத்து ஹர்திக் பாண்டியா பந்தில் ஆட்டமிழந்தார்.



    9-வது விக்கெட்டுக்கு பெலுக்வாயோ உடன் இம்ரான் தஹிர் ஜோடி சேர்ந்தார். தாஹிர் 2 ரன்கள் எடுத்த நிலையில் பும்ரா பந்தில் ஆட்டமிழந்தார். கடைசி விக்கெட்டுக்கு பெலுக்வாயோ உடன் நிகிடி ஜோடி சேர்ந்தார். பெலுக்வாயோ 42 பந்தில் தலா இரண்டு பவுண்டரி, 2 சிக்சருடன் 34 ரன்கள் எடுத்து கடைசி விக்கெட்டாக ஆட்டமிழக்க தென்ஆப்பிரிக்கா 46.5 ஓவரில் 204 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.

    இந்திய அணி தரப்பில் ஷர்துல் தாகூர் 4 விக்கெட்டும், பும்ரா மற்றும் சாஹல் ஆகியோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள். #SAvIND #INDvSA
    Next Story
    ×