search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கடைசி ஒருநாள் போட்டியிலும் வெல்ல இந்தியா ஆர்வம்: தென்ஆப்பிரிக்காவுடன் நாளை மோதல்
    X

    கடைசி ஒருநாள் போட்டியிலும் வெல்ல இந்தியா ஆர்வம்: தென்ஆப்பிரிக்காவுடன் நாளை மோதல்

    இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 6-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி செஞ்சூரியனில் நாளை நடக்கிறது. இந்த போட்டியிலும் வெல்ல இந்திய அணி ஆர்வமாக உள்ளது. #SAvIND #INDvSA
    செஞ்சூரியன்:

    வீராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

    6 ஆட்டம் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் டர்பனில் நடந்த முதல் போட்டியில் 6 விக்கெட்டிலும், செஞ்சூரியனில் 2-வது போட்டியில் 9 விக்கெட்டிலும், கேப்டவுனில் நடந்த 3-வது போட்டியில் 124 ரன் வித்தியாசத்திலும், போர்ட் எலிசபெத்தில் நடந்த போட்டியில் 73 ரன் வித்தியாசத்திலும் இந்தியா வெற்றி பெற்றது.

    ஜோகன்ஸ்பர்க்கில் நடந்த 4-வது ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா 5 விக்கெட்டில் வென்றது. தற்போது இந்தியா 4-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி இருக்கிறது.

    இரு அணிகள் மோதும் 6-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி செஞ்சூரியனில் நாளை நடக்கிறது. இப்போட்டி இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு தொடங்குகிறது.

    நாளைய போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை 5-1 என்ற கணக்கில் கைப்பற்ற இந்தியா ஆர்வமாக உள்ளது. பேட்டிங்கில் ரோகித்சர்மா, தவான், வீராட்கோலி ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர்.

    இந்த தொடரில் 4 சதம் அடிக்கப்பட்டு உள்ளது. இதை இந்திய வீரர்களே அடித்து உள்ளனர். மிடில் ஆர்டர் வரிசையில் ரகானே, ஸ்ரேயால் அய்யர் ஆகியோர் உள்ளனர். பந்துவீச்சில் சுழற்பந்து வீரர்கள் குல்தீப் யாதவ்- சஹால் ஜோடி அசத்தி வருகிறது. இதுவரை இவர்கள் இணைந்து 30 விக்கெட் கைப்பற்றி உள்ளனர். இந்திய அணி வலுவாக இருப்பதால் நாளைய போட்டியிலும் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    சொந்த மண்ணில் தொடரை இழந்ததால் தென்ஆப்பிரிக்கா கடும் நெருக்கடியில் உள்ளது. இதனால் கடைசி போட்டியில் வெற்றி பெற முயற்சிக்கும். ஆனால் அம்லாவை தவிர மற்ற வீரர்கள் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை.

    இந்தியாவின் சுழற்பந்து வீச்சுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் திணறி வருகிறார்கள். மேலும் பந்துவீச்சிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஆனால் தென்ஆப்பிரிக்கா வெற்றி பெற கடுமையாக போராட வேண்டியது இருக்கும்.
    Next Story
    ×