search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இன்றைய ஆட்டம் மூலம் 10 ஆயிரம் என்ற மைல்கல்லை டோனி எட்டுவாரா?
    X

    இன்றைய ஆட்டம் மூலம் 10 ஆயிரம் என்ற மைல்கல்லை டோனி எட்டுவாரா?

    தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் 46 ரன்கள் எடுத்து 10 ஆயிரம் என்ற மைல்கல்லை டோனி எட்டுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #SAvIND #MSDhoni
    இந்திய கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை இந்தியா 1-2 என்ற கணக்கில் இழந்த நிலையில், தற்போது நடைபெற்று வரும் 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா 3-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

    இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 5-வது ஒருநாள் போட்டி போர்ட் எலிசபெத்தில் இன்று நடக்கிறது. இந்தப் போட்டியில் வென்று முதல் முறையாக தென்ஆப்பிரிக்கா மண்ணில் தொடரை கைப்பற்றி புதிய வரலாறு படைக்கும் ஆர்வத்துடன் இந்திய அணி களம் இறங்க இருக்கிறது.

    இந்திய அணியின் முன்னாள் கேப்டனான டோனி இன்றைய ஆட்டத்தில் 10 ஆயிரம் ரன்னை எடுத்து சாதனை படைப்பாரா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.

    36 வயதான அவர் 316 ஒருநாள் போட்டியில் 271 இன்னிங்சில் விளையாடி 9,954 ரன் எடுத்துள்ளார். சராசரி 51.57 ஆகும். அதிகபட்சமாக 183 ரன் குவித்துள்ளார். 10 சதமும், 67 அரை சதமும் அடித்துள்ளார். 10 ஆயிரம் ரன்னை எடுக்க டோனிக்கு இன்னும் 46 ரன்னே தேவை. 10 ஆயிரம் ரன்னை எடுக்கும் 4-வது இந்தியர் மற்றும் சர்வதேச அளவில் 12-வது வீரர் என்ற பெருமையை அவர் பெறுவார்.



    தெண்டுல்கர் (18,426 ரன்), கங்குலி (11,363), டிராவிட் (10,889) ஆகிய இந்திய வீரர்களே 10 ஆயிரம் ரன்னுக்கு மேல் எடுத்து உள்ளனர். 50 சராசரிக்கு மேல் வைத்து 10 ஆயிரம் ரன்னை எடுத்த முதல் வீரர் என்ற சாதனையை படைக்க இருக்கிறார் டோனி.

    இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி 6 ரன் எடுத்தால் அசாருதீனை முந்துவார். அசாருதீன் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 1109 ரன் எடுத்து உள்ளார். கோலி 24 ஆட்டத்தில் 1104 ரன் எடுத்துள்ளார்.
    மேலும் சுழற்பந்து வீரர்களான சாஹல், குல்தீப் யாதவ் ஆகியோர் ஒரு விக்கெட் எடுத்தால் புதிய சாதனை படைப்பார்கள். #SAvIND #MSDhoni
    Next Story
    ×