search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராசியில்லாத மழை நேற்று தென்ஆப்பிரிக்காவிற்கு அதிர்ஷ்டமாக மாறியது
    X

    ராசியில்லாத மழை நேற்று தென்ஆப்பிரிக்காவிற்கு அதிர்ஷ்டமாக மாறியது

    ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்ற 4-வது ஒருநாள் போட்டியில் மழை குறுக்கீட்டதால் குறுகிய ஓவர் இலக்கில் தென்ஆப்பிரிக்கா வெற்றி வாகை சூடியது. #SAvIND #PINKODI
    இந்தியா - தென்ஆப்பிரிக்கா இடையிலான 4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஜோகன்னஸ்பர்க் வாண்டரர்ஸ் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. மார்பக புற்றுநோய் விழிப்புணர்விற்காக தென்ஆப்பிரிக்கா வீரர்கள் நேற்று பிங்க் கலர் ஜெர்சி அணிந்து விளையடினார்கள். இந்த மைதானத்தில் இவர்கள் இந்த ஜெர்சியில் விளையாடும்போது தோல்வியை சந்தித்ததே கிடையாது.

    டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த இந்தியா 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 289 ரன்கள் எடுத்திருந்தது. 290 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்ஆப்பிரிக்கா களம் இறங்கியது. தென்ஆப்பிரிக்கா அணி 7.2 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 43 ரன்கள் எடுத்திருக்கும்போது மழை குறுக்கீட்டது. அப்போது 22 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மார்கிராம் ஆட்டமிழந்தார். அம்லா 22 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

    மழை மற்றும் மின்னல் காரணமாக நீண்ட நேரமாக ஆட்டம் தடைபட்டது. இதனால் டக்வொர்த் லீவிஸ் விதிப்படி 28 ஓவரில் 202 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு மாற்றி அமைக்கப்பட்டது.

    ஏற்கனவே 7.3 ஓவர்கள் விளையாடியதால் 20.3 ஓவரில் 159 ரன்கள் தேவை என்ற இலக்கில் தென்ஆப்பிரிக்கா களம் இறங்கியது. இது ஒருவகையில் 20 ஓவர் போட்டி போன்றதாகும். 123 பந்தில் 159 ரன்கள் என்பது எளிதான இலக்குதான். டி வில்லியர்சஸ் (26), டேவிட் மில்லர் (39), கிளாசன் (43 அவுட் இல்லை), பெலுக்வாயோ (23 அவுட் இல்லை) ஆகியோரின் ஆட்டத்தால் தென்ஆப்பிரிக்கா 25.3 ஓவரில் 207 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் தொடரை இழக்காமல் தக்க வைத்துள்ளது.



    பொதுவாகவே மழை என்றாலே தென்ஆப்பிரிக்கா அணிக்கு அலர்ஜி. 1992-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் சிட்னியில் நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்துக்கு எதிராக தென்ஆப்பிரிக்கா சேஸிங் செய்யும்போது, 13 பந்தில் 22 ரன்கள் தேவை என்ற நிலையில் மழை குறுக்கீட்டது. இதனால் 7 பந்திற்கு 22 ரன்கள் அடிக்க வேண்டும் என்று கூறப்பட்ட நிலையில், பின்னர் 1 பந்தில் 22 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற இலக்கு மாற்றி அமைக்கப்பட்டது. இதனால் அரையிறுதியோடு தென்ஆப்பிரிக்கா வெளியேற நேரிட்டது. மழை மட்டும் வராமல் இருந்திருந்தால் தென்ஆப்பிரிக்கா வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருக்கும்.

    கடந்த 2015-ம் ஆண்டு உலகக்கோப்பையில் நியூசிலாந்தை எதிர்த்து தென்ஆப்பிரிக்கா அரையிறுதியில் விளையாடியது. இந்த போட்டியில் தென்ஆப்பிரிக்கா சிறப்பாக விளையாடிக் கொண்டிருக்கும்போது திடீரென மழை பெய்தது. இதனால் தென்ஆப்பிரிக்கா இன்னிங்ஸ் உடனடியாக முடிவுக்கு வந்தது. பின்னர் நியூசிலாந்து அதை சேஸிங் செய்து விட்டது. மழை வராமல் இருந்திருந்தால் டி வில்லியர்ஸ், டேவிட் மில்லர் சிறப்பாக விளையாடி 300 ரன்களுக்கு மேல் குவித்திருப்பார்கள்.

    இதனால் மழை என்றாலே தென்ஆப்பிரிக்காவிற்கு ஆகாது. அவர்கள் வெற்றியை பறித்துவிடும் என்ற பார்வை உண்டு. ஆனால் ராசியில்லாத மழை நேற்று அவர்களுக்கு அதிர்ஷ்டமாக மாறிவிட்டது.



    நேற்று மழை வராமல் இருந்திருந்தால் தென்ஆப்பிரிக்கா 50 ஓவர்கள் விளையாடியிருக்கும். அப்படி விளையாடினால் சேஸிங் செய்ய கடினமான நிலை ஏற்பட்டிருக்கும். இந்தியா பேட்டிங் செய்யும்போது மின்னல் காரணமாக ஆட்டம் தடைபட்டதால் இந்தியாவின் ஸ்கோர் குறைந்தது. தென்ஆப்பிரிக்காவிற்கு 20 ஓவர் போட்டி போல் அமைந்துவிட்டது.

    இந்த போட்டியில் தென்ஆப்பிரிக்கா தோற்றிருந்தால் முதன்முறையாக சொந்த மண்ணில் இந்தியாவிற்கு எதிராக தொடரை இழந்திருக்கும். அதேபோல் பிங்க் ஜெர்சியில் முதல் தோல்வியை பதவி செய்திருக்கும். இந்த இரண்டையும் மழை காப்பாற்றி ராசியாக மாறிவிட்டது. #SAvIND #PINKODI
    Next Story
    ×