search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா - தென்ஆப்பிரிக்கா இன்று பலப்பரீட்சை
    X

    முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா - தென்ஆப்பிரிக்கா இன்று பலப்பரீட்சை

    இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதும் முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி டர்பனில் இன்று நடக்கிறது. #SAvIND #INDvSA #Durban
    டர்பன்:

    விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை 1-2 என்ற கணக்கில் பறிகொடுத்த இந்திய அணி அடுத்ததாக 6 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது.

    இதன்படி இந்தியா-தென்ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி டர்பனில் உள்ள கிங்ஸ்மீட் ஸ்டேடியத்தில் இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது. இதற்காக இரு அணி வீரர்களும் நேற்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.

    இங்கிலாந்தில் நடக்கும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு இன்னும் 14 மாதங்களே உள்ள நிலையில், அதற்கு தயார்படுத்திக்கொள்வதற்கு இந்த தொடர் நல்ல தொடக்கமாகும். பேட்டிங்கில் சில வரிசைக்கு பொருத்தமான வீரர் யார்? என்பதை அடையாளம் காண்பதற்கும் இந்த தொடர் உதவிகரமாக இருக்கும்.

    டெஸ்ட் தொடரை இழந்ததால் அதற்கு பழிதீர்க்கும் வகையில் இந்திய அணி வீரர்கள் விளையாட வேண்டும் என்று ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்க்கிறார்கள். ஷிகர் தவான், ரோகித் சர்மா, கேப்டன் கோலி, விக்கெட் கீப்பர் டோனி ஆகியோரைத் தான் இந்திய அணி மலைபோல் நம்பி இருக்கிறது. இவர்களின் பேட் பேசுவதை பொறுத்தே இந்திய அணியின் ஸ்கோரும் வலுப்பெறும்.

    தென்ஆப்பிரிக்க மண்ணில் இந்திய அணி ஒரு நாள் தொடரை ஒரு போதும் வென்றதில்லை. 1992-ம் ஆண்டு 2-5 என்ற கணக்கிலும், 2006-ம் ஆண்டு 0-4 என்ற கணக்கிலும், 2011-ம் ஆண்டு 2-3 என்ற கணக்கிலும், 2013-ம் ஆண்டு 0-2 என்ற கணக்கிலும் இந்திய அணி தோற்று இருக்கிறது. இவற்றுக்கு எல்லாம் வட்டியும், முதலுமாக பதிலடி கொடுக்க அருமையான சந்தர்ப்பம் கனிந்துள்ளது. டெஸ்ட் கிரிக்கெட் போன்று ஆடுகளம் வேகப்பந்து வீச்சின் சொர்க்கபுரியாக மட்டும் இருக்காது. பேட்டிங்குக்கும் ஒத்துழைக்கும்.

    தென்ஆப்பிரிக்க அணியை பொறுத்தவரை சொந்த மண்ணில் இந்தியாவிடம் தொடரை இழந்ததில்லை என்ற பெருமையை தக்கவைத்துக்கொள்வதில் மும்முரமாக இருப்பார்கள். அதிரடி வீரர் டிவில்லியர்ஸ் காயத்தால் விலகியது அந்த அணிக்கு சற்று பாதிப்பு தான் என்றாலும் திறமையான வீரர்களுக்கு அந்த அணியில் பஞ்சமில்லை.

    அம்லா, கேப்டன் பிளிஸ்சிஸ், டுமினி, மில்லர், கிறிஸ் மோரிஸ், டி காக், ரபடா ஆகியோர் நல்ல நிலையில் இருக்கிறார்கள். அதனால் தொடரில் பரபரப்புக்கு குறைவிருக்காது. டிவில்லியர்சுக்கு பதிலாக மார்க்ராம் களம் இறங்குவார் என்று கேப்டன் பாப் டு பிளிஸ்சிஸ் கூறியுள்ளார்.

    ஒரு நாள் போட்டி அணிகளின் தரவரிசையில் தற்போது தென்ஆப்பிரிக்கா 120 புள்ளிகளுடன் முதலிடத்திலும், இந்தியா 119 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும் உள்ளன. இந்திய அணி 4-2 அல்லது அதை விட சிறந்த நிலையில் தொடரை கைப்பற்றினால், மீண்டும் நம்பர் ஒன் இடத்துக்கு முன்னேறலாம். தென்ஆப்பிரிக்க அணி தொடரை 3-3 என்ற கணக்கில் முடித்தாலே நம்பர் ஒன் இடத்தை தக்கவைத்துக் கொள்ள முடியும். அதே சமயம் இந்திய அணி 1-5 அல்லது 0-6 என்ற கணக்கில் மோசமாக தோற்றால் 3-வது இடத்துக்கு தள்ளப்படும்.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    இந்தியா: ஷிகர் தவான், ரோகித் சர்மா, விராட் கோலி (கேப்டன்), ரஹானே அல்லது மனிஷ் பாண்டே, கேதர் ஜாதவ், டோனி, ஹர்திக் பாண்ட்யா, குல்தீப் யாதவ் அல்லது யுஸ்வேந்திர சாஹல், புவனேஷ்வர்குமார், பும்ரா, முகமது ஷமி அல்லது ஷர்துல் தாகூர்.

    தென்ஆப்பிரிக்கா: குயின்டான் டி காக், அம்லா, பிளிஸ்சிஸ் (கேப்டன்), மார்க்ராம், டேவிட் மில்லர், டுமினி, கிறிஸ் மோரிஸ், பெலக்வாயோ, ரபடா, இம்ரான் தாஹிர், மோர்னே மோர்கல்.

    இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை சோனி டென்1, சோனி டென்3 சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன. 
    Next Story
    ×