search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5-வது ஒருநாள் போட்டி: 12 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி
    X

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5-வது ஒருநாள் போட்டி: 12 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி

    பெர்த்தில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5-வது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. #AUSvENG #PerthODI

    பெர்த்:

    ஆஸ்திரேலியா சென்றுள்ள இங்கிலாந்து அணி ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் மூன்று ஒருநாள் போட்டிகளிலும் வென்ற இங்கிலாந்து அணி தொடரை ஏற்கனவே கைப்பற்றிவிட்டது. அடிலெய்டில் நடந்த நான்காவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றது. இந்நிலையில், ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகள் மோதிய 5-வது மற்றும் கடைசி போட்டி இன்று பெர்த் நகரில் நடைபெற்றது.

    முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜேசன் ராயும், ஜானி பேர்ஸ்டோவும் களமிறங்கினர். இருவரும் இணைந்து இங்கிலாந்து அணிக்கு நல்ல தொடக்கம் கொடுத்தனர். ராய் 49 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார். அதன்பின் அலெக்ஸ் ஹேல்ஸ் களமிறங்கினார். பேர்ஸ்டோ 44 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஸ்டார்க் வேகத்தில் ஸ்டெம்புகள் சிதற ஆட்டமிழந்தார். அதன்பின் ஜோ ரூட் களமிறங்கினார். ஹேல்ஸ் 35 ரன்களில் ஆட்டமிழந்தார்.



    ஜோ ரூட் ஒருமுனையில் நிலைத்து நின்று ஆட எதிர்முனையில் வந்தவர்கள் ஆஸ்திரேலியாவின் அபார பந்து வீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறினர். பட்லர் மட்டும் 21 ரன்கள் எடுத்தார். ரூட் அரைசதம் அடித்தார். மற்றவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். ரூட்டும் 62 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இங்கிலாந்து அணி 47.4 ஓவருக்கு 259 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. ஆஸ்திரேலியா அணியின் பந்துவீச்சில் அண்ட்ரூ டை 5 விக்கெட்களும், மிச்செல் மார்ஷ் 2 விக்கெட்களும், ஸ்டார்க், ஆடம் சாம்பா தலா மூன்று விக்கெட்களும் வீழ்த்தினர்.

    அதைத்தொடர்ந்து 260 ரன்கள் என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டேவிட் வார்னர் மற்றும் டிராவிஸ் ஹெட் களமிறங்கினர். வார்னர் 15 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து டிராவிஸ் ஹெட் 22 ரன்னில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து மார்கஸ் ஸ்டாயின்ஸ் களமிறங்கினார். அதன்பின் இறங்கிய ஸ்டீவன் ஸ்மித் 12 ரன்களிலும், மிச்செல் மார்ஷ் 13 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதைத்தொடர்ந்து ஸ்டாயின்சுடன் மேக்ஸ்வெல் ஜோடி சேர்ந்தார்.  



    இந்த ஜோடி நிதானமாக ஆடி ரன் சேர்த்தது. ஸ்டாயின்ஸ் அரைசதம் அடித்தார். அவர் 87 ரன்களில் ஆட்டமிழந்தார். மேக்ஸ்வெல் 34 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் வந்த டிம் பெய்ன்னும் 34  ரன்கள் எடுத்து அவுட் ஆனார். ஆஸ்திரேலியா அணி 48.2 ஓவர்களில் 247 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன்மூலம் 12 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இங்கிலாந்து அணி பந்துவீச்சில் டாம் குர்ரன் 5 விக்கெட்களும், மோயின் அலி 3 விக்கெட்களும், அடில் ரஷித் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இங்கிலாந்து அணியின் டாம் குர்ரன் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். 



    ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 4-1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி வென்றது. இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் தொடர்நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். #AUSvENG #PerthODI
    Next Story
    ×