search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    3-வது டி20: நியூசிலாந்தை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது பாகிஸ்தான்
    X

    3-வது டி20: நியூசிலாந்தை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது பாகிஸ்தான்

    நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் 18 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றதோடு தொடரையும் 2-1 என கைப்பற்றியது. #NZvPAK #MohammadAmir #ShadabKhan

    வெல்லிங்டன்:

    நியூசிலாந்து - பாகிஸ்தான் இடையிலான முன்று போட்டிகள் கொண்ட டி-20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே நடைபெற்று முடிந்த 2 போட்டிகளில் இரு அணிகளும் ஒரு போட்டியில் வென்றுள்ள நிலையில், இன்று 3-வது டி-20 போட்டி நடைபெற்றது.

    டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது. தொடக்க வீரர்களாக பகர் சமான், அகமது ஷெசாத் ஆகியோர் களம் இறங்கினார்கள். 19 ரன் எடுத்த நிலையில் அகமது ஷெசாத் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த பாபர் ஆசம் 18 ரன்னில் வெளியேறினார்.



    3-வது விக்கெட்டுக்கு பகர் சமான் உடன் சர்பராஸ் அகமது ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி பாகிஸ்தானை சரிவில் இருந்து மீட்டது. பகர் சமான் 46 ரன்னிலும், சர்பராஸ் அகமது 29 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர்.

    அடுத்து வந்த ஹாரிஸ் சொகைல் 20 ரன்னும், உமர் அமின் 21 ரன்னும் எடுக்க பாகிஸ்தான் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் சேர்த்தது. நியூசிலாந்து அணி சார்பில் இஷ் சோடி, மிட்செல் சாந்தர் தலா 2 விக்கெட்டும், டிரெண்ட் போல்ட், கொலின் டி கிராண்ட்ஹோம் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    பின்னர் 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து களம் இறங்கியது. மார்ட்டின் கப்திலும், கேன் வில்லியம்சனும்  தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். மார்ட்டின் கப்தில் நிதானமாக விளையாட, வில்லியம்சன் 9 ரன்னில் ஆட்டமிழந்தார். அதைத்தொடர்ந்து களமிறங்கிய அனரு கிட்சென் 16 ரன்னில் ஆட்டமிழந்தார். 

    கப்தில் 59 ரன்னில் பெவிலியன் திரும்பினார். அதன்பின் வந்த டாம் புரூஸ் 22 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ராஸ் டெய்லர் 25 ரன்னில் ஆட்டமிழக்க நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 18 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது. மிட்செல் சாந்தர் 24 ரன்களுடன் களத்தில் இருந்தார். பாகிஸ்தான் அணி பந்துவீச்சில் ஷதப் கான் 2 விக்கெட்களும், ஆமிர் யமின், ரும்மான் ரயீஸ், பகிம் அஷ்ரப், மொகமது ஆமிர் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.



    பாகிஸ்தான் அணியின் ஷதப் கான் ஆட்டநாயகனாகவும், மொகமது ஆமிர் தொடர்நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டனர். இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணி 2-1 என டி-20 தொடரை வென்றதோடு, சர்வதேச டி-20 தரவரிசையில் முதல் இடத்திற்கு முன்னேறியது.  #NZvPAK #MohammadAmir #ShadabKhan
    Next Story
    ×