search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆஸ்திரேலியாவுடனான 2-வது ஒருநாள் போட்டி: 4 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி
    X

    ஆஸ்திரேலியாவுடனான 2-வது ஒருநாள் போட்டி: 4 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி

    ஆஸ்திரேலியாவுடனான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. #AUSvsENG #ENGvsAUS #BrisbaneODI

    பிரிஸ்பேன்:

    ஆஸ்திரேலியா சென்றுள்ள இங்கிலாந்து அணி முதலில் ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடியது. இந்த தொடரை ஆஸ்திரேலியா அணி 4-0 என கைப்பற்றியது. அதைத்தொடர்ந்து இரு அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் தொடங்கியது. முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.

    இன்று இரண்டாவது ஒருநாள் போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங் தேர்வு செய்தது. ஆஸ்திரேலியா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஆரோன் பிஞ்ச், டேவிட் வார்னர் களமிறங்கினர். வார்னர் 35 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மோயின் அலி பந்தில் ஆட்டமிழந்தார். ஸ்மித் 18 ரன்களிலும், அவரைத்தொடர்ந்து களமிறங்கிய டிராவிஸ் ஹெட் 7 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். 

    அதன்பின் பிஞ்ச்-உடன் மிச்செல் மார்ஷ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிதானமாக ஆடி ரன்குவித்தது. பிஞ்ச் அரைசதம் கடந்தார். மிச்செல் மார்ஷ் 36 ரன்களில் ஆட்டமிழந்தார். பிஞ்ச் சதம் அடித்தார். இது இத்தொடரில் அவர் அடிக்கும் இரண்டாவது சதமாகும். முதல் போட்டியிலும் பிஞ்ச் சதம் அடித்தார். அவர் 106 ரன்களில் பிளங்கீட் பந்தில் ஆட்டமிழந்தார். மார்கஸ் ஸ்டாயின்ஸ் 4 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அலெக்ஸ் கேரி 27 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரன் அவுட் ஆனார்.



    ஆஸ்திரேலியா அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 270 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து அணி பந்துவீச்சில் அடில் ரஷித், ஜோ ரூட் தலா 2 விக்கெட்களும், லியாம் பிளங்கீட், மோயின் அலி, கிறிஸ் வோக்ஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 271 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களமிறங்கியது. ஜேசன் ராய், ஜானி பேர்ஸ்டோவ் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். ராய் 2 ரன்களில் ஆட்டமிழந்தார். அதைத்தொடர்ந்து அலெக்ஸ் ஹேல்ஸ் களமிறங்கினார். இருவரும் அரைசதம் அடித்தனர். அணியின் ஸ்கோர் 119 ஆக இருக்கும்போது, ஹேல்ஸ் 57 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து பேர்ஸ்டோவ் 60 ரன்களில் அவுட்டானார். அப்போது இங்கிலாந்து அணி 129 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்தது.

    அதன்பின்னர் களமிறங்கிய ஜோ ரூட் விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டார். எதிர்முனையில் களமிறங்கிய 21 ரன்களிலும், ஜோஸ் பட்லர் 42 ரன்களிலும், மோயின் அலி 1 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். 



    அதன்பின் ஜோ ரூட் - கிறிஸ் வோக்ஸ் ஜோடி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர். இறுதியில், இங்கிலாந்து அணி 44.2 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 274 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஜோ ரூட் 46 ரன்களுடனும், கிறிஸ் வோக்ஸ் 39 ரன்களுடனும் அவுட்டாகாமல் இருந்தனர். ஆஸ்திரேலிய அணி சார்பில் ஸ்டார்க் 4 விக்கெட்டுகளும், ரிச்சர்ட்சன் 2 விக்கெட்டையும் கைப்பற்றினர். இதன்மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 2-0 என்ற கணக்கில் இங்கிலாந்து முன்னிலை வகிக்கிறது. #AUSvsENG #ENGvsAUS #BrisbaneODI
    Next Story
    ×