search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஹர்திக் பாண்டியா அதிரடியால் நம்பிக்கையில் இந்தியா: தேனீர் இடைவேளை வரை 185-7
    X

    ஹர்திக் பாண்டியா அதிரடியால் நம்பிக்கையில் இந்தியா: தேனீர் இடைவேளை வரை 185-7

    பாண்டியாவின் அதிரடி ஆட்டத்தால் இந்தியா 2-வது நாள் தேனீர் இடைவேளை வரை 7 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்கள் எடுத்துள்ளது. #SAvIND #HardikPandya
    இந்தியா - தென்ஆப்பிரிக்கா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கேப் டவுனில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா அணி பேட்டிங் தேர்வு செய்தது. புவனேஸ்வர் குமாரின் அபார பந்து வீச்சால் தென்ஆப்பிரிக்கா 12 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுக்களை இழந்து திணறியது. அதன்பின் வந்த டி வில்லியர்ஸ் (65), டு பிளிசிஸ் (62), டி காக் (43) ஆகியோர் சிறப்பாக விளையாட 286 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது. புவனேஸ்வர் குமார் நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

    பின்னர் இந்தியா முதல் இன்னிங்சை தொடங்கியது. தென்ஆப்பிரிக்காவின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 27 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டை இழந்தது. முரளி விஜய் 1 ரன்னிலும், தவான் 16 ரன்னிலும், விராட் கோலி 4 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    4-வது விக்கெட்டுக்கு புஜாரா உடன் ரோகித் சர்மா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நேற்றைய முதல்நாள் ஆட்ட முடிவில் மேலும் விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டது. புஜாரா 5 ரன்னுடனும், ரோகித் சர்மா கணக்கை துவக்காமலும் களத்தில் இருந்தனர். இந்தியா 3 விக்கெட் இழப்பிற்கு 28 ரன்கள் எடுத்திருந்தது.

    இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. புஜாரா மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் நிதானமாக விளையாடினார்கள். இறுதியில் ரபாடா வீசிய 29-வது ஓவரில் ரோகித் சர்மா 11 ரன்கள் எடுத்த நிலையில் எல்.பி.டபிள்யூ ஆகி ஆட்டமிழந்தார். ரோகித் சர்மா 59 பந்துகளை சந்தித்தார். புஜாரா-ரோகித் சர்மா ஜோடி 20.1 ஓவர்கள் தாக்குப்பிடித்து 30 ரன்கள் சேர்த்தது. அடுத்து அஸ்வின் களம் இறங்கினார்.  மதிய உணவு இடைவேளை வரை இந்தியா 4 விக்கெட் இழப்பிற்கு 76 ரன்கள் எடுத்தது. புஜாரா 26 ரன்களுடனும், அஸ்வின் 12 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.



    மதிய உணவு இடைவேளை முடிந்து ஆட்டம் தொடங்கியதும் இந்தியாவிற்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. பிலாண்டர் வீசிய முதல் பந்தில் புஜாரா டு பிளிசிஸிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். அடுத்து ஹர்திக் பாண்டியா களம் இறங்கினார். அவர் தான் சந்தித்த முதல் பந்தை பவுண்டரிக்கு விராட்டினார்.

    புஜாரா அவுட்டாகிய அதிர்ச்சி மறைவதற்குள் பிலாண்டர் வீசிய அடுத்த ஓவரில் அஸ்வின் 12 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சஹா ரன்ஏதும் எடுக்காமல் ஸ்டெயின் பந்தில் எல்.பி.டபிள்யூ ஆனார். இதனால் இந்தியா 92 ரன்கள் எடுப்பதற்குள் 7 விக்கெட்டை இழந்தது திணறியது.

    8-வது விக்கெட்டுக்கு ஹர்திக் பாண்டியா உடன் புவனேஸ்வர் குமார் ஜோடி சேர்ந்தார். புவனேஸ்வர் குமாரை வைத்துக் கொண்டு ஹர்திக் பாண்டியா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் இந்தியாவின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. புவனேஸ்குமாரால் ரன் அடிக்க இயலவில்லை என்றாலும் அதிகவேக பந்து வீச்சை நேர்த்தியாக எதிர்கொண்டு ஒருமுனையில் விக்கெட்டை பாதுகாத்துக் கொண்டார்.



    46 பந்தில் 10 பவுண்டரியுடன் ஹர்திக் பாண்டியா அரைசதத்தை பதிவு செய்தார். ஹர்திக் பாண்டியாவின் அதிரடியால் இந்தியா 2-வது நாள் தேனீர் இடைவேளை வரை 61 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்கள் எடுத்துள்ளது. ஹர்திக் பாண்டியா 81 ரன்னுடனும், புவனேஸ்வர் குமார் 24 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

    தற்போது வரை இந்தியா 101 ரன்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது. தேனீர் இடைவேளைக்குப் பிறகு ஹர்திக் பாண்டியா 10 ஓவர்கள் தாக்குப்பிடித்துவிட்டால் ஆட்டம் பரபரப்பானதாகிவிடும். #SAvIND #HardikPandya #INDvSA
    Next Story
    ×