search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரஞ்சி டிராபி இறுதிப் போட்டி: 2-வது நாள் ஆட்ட முடிவில் விதர்பா 206/4; டெல்லி 295
    X

    ரஞ்சி டிராபி இறுதிப் போட்டி: 2-வது நாள் ஆட்ட முடிவில் விதர்பா 206/4; டெல்லி 295

    ரஞ்சி டிராபி இறுதிப் போட்டியில் விதர்பா அணியின் குர்பானி ஹாட்ரிக் விக்கெட்டால் டெல்லி அணி 295 ரன்னில் ஆல்அவுட் ஆனது. விதர்பா 4 விக்கெட் இழப்பிற்கு 206 ரன்கள் எடுத்துள்ளது. #RanjiTrophyFinal
    இந்தியாவின் முதல்தர கிரிக்கெட் தொடரான ரஞ்சி டிராபியின் 2017-18 சீசனின் இறுதிப் போட்டி இந்தூரில் நேற்று தொடங்கியது. இதில் டெல்லி - விதர்பா அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.

    டாஸ் வென்ற விதர்பா அணி பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி டெல்லி முதல் இன்னிங்சை தொடங்கியது. சண்டேலா (0), காம்பீர் (15), ரிஷப் பந்த் (21), ராணா (21) சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க டெல்லி அணி 99 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுக்களை இழந்து திணறியது. ஐந்தாவது விக்கெட்டுக்கு ஷோரே உடன் ஹிமாத் சிங் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பாக விளையாடி டெல்லி அணியை சரிவில் இருந்து மீட்டது.

    ஹிமாத் சிங் 66 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்க, த்ருவ் ஷோரே அபாரமாக விளையாடி சதம் அடித்தார். த்ருவ் ஷோரே சதத்தால் டெல்லி அணி நேற்றைய முதல் நாள் ஆட்ட முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 271 ரன்கள் எடுத்தது. ஷோரே 123 ரன்களுடனும், விகாஸ் மிஸ்ரா 5 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

    இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. மிஸ்ரா நிலைத்து நின்று விளையாட, ஷோரே அதிரடியாக விளையாடினார். விதர்பா அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ராஜ்னீஷ் குர்பானி ஹாட்ரிக் விக்கெட் (மிஸ்ரா-6, சாய்னி-0, த்ருவ் ஷோரே-145) வீழ்த்த டெல்லி 102.5 ஓவரில் 295 சேர்த்து ஆல்அவுட் ஆனது. விதர்பா அணி சார்பில் குர்பானி அதிகபட்சமாக 6 விக்கெட் வீழ்த்தினார்.



    பின்னர் விதர்பா அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. பைஸ் பாசல், சஞ்சய் ராமசாமி ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இருவரும் நிதானமாக ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். அணியின் ஸ்கோர் 96 ரன்னாக இருக்கும்போது சஞ்சய் ராமசாமி ஆட்டம் இழந்தார். மறுமுனையில் விளையாடிய பைஸ் பாசல் 67 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    3-வது வீரராக களம் இறங்கிய வாசிம் ஜாபர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த, அடுத்து வந்த கணேஷ் சதிஷ், வாங்கடே முறையா 12 மற்றும் 28 ரன்னில் ஆட்டமிழந்தனர்.

    வாசிம் ஜாபர் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார். அவரது அரைசதத்தால் விதர்பா அணி 2-வது நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 206 ரன்கள் எடுத்துள்ளது.

    தற்போது வரை விதர்பா அணி 89 ரன்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது. கைவசம் 6 விக்கெட்டுக்கள் உள்ளது. வாசிம் ஜாபர் 61 ரன்களுடன் களத்தில் உள்ளார். நாளைய 3-வது நாள் ஆட்டத்தில் வாசிம் ஜாபர் சிறப்பாக விளையாடினால் விதர்பா அணி முதல் இன்னிங்சில் முன்னிலை வகிக்க வாய்ப்புள்ளது.

    ரஞ்சி டிராபி வரலாற்றில் முதன்முறையாக விதர்பா அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. இந்த போட்டியில் அந்த அணி வெற்றி பெற்றால் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய முதல் தொடரிலேயே கோப்பையை வென்ற அணி என்ற சாதனைப் படைக்கும்.
    Next Story
    ×