search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டி20 போட்டியில் இரட்டை சதம் என்பது மிகவும் அதிகப்படியான விஷயம்: ரோகித்
    X

    டி20 போட்டியில் இரட்டை சதம் என்பது மிகவும் அதிகப்படியான விஷயம்: ரோகித்

    டி20 கிரிக்கெட் போட்டியில் இரட்டை சதம் என்பது மிகவும் அதிகப்படியான விஷயம் என்று 35 பந்தில் சதம் அடித்த ரோகித் சர்மா கருத்து தெரிவித்துள்ளார்.
    இந்தூரில் நேற்று நடைபெற்ற 2-வது டி20 லீக் போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 260 ரன் குவித்தது. கேப்டன் ரோகித் சர்மா அதிரடியாக விளையாடி 35 பந்தில் சதம் அடித்தார். அவர் 43 பந்தில் 12 பவுண்டரி, 10 சிக்சருடன் 118 ரன்னும், லோகேஷ் ராகுல் 49 பந்தில் 89 ரன்னும் (5 பவுண்டரி, 8 சிக்சர்) எடுத்தனர்.

    பின்னர் விளையாடிய இலங்கை அணி 17.2 ஓவர்களில் 172 ரன்னில் சுருண்டது. இதனால் இந்தியா 88 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. குசால் பெரைரா 37 பந்தில் 77 ரன்னும் (4 பவுண்டரி, 7 சிக்சர்), உபுல்தரங்கா 29 பந்தில் 47 ரன்னும் (3 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர். சாஹல் 4 விக்கெட்டும், குல்தீப் யாதவ் 3 விக்கெட்டும் எடுத்தனர்.

    இந்த வெற்றி மூலம் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. கட்டாக்கில் நடந்த முதல் ஆட்டத்தில் 93 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது. டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கிலும், ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கிலும் ஏற்கனவே இந்தியா கைப்பற்றி இருந்தது. இதன்மூலம் இலங்கைக்கு எதிரான 3 வடிவிலான தொடரையும் வென்று முத்திரை பதித்தது.

    இந்த வெற்றி குறித்து இந்திய அணி கேப்டன் ரோகித்சர்மா நிருபர்களிடம் கூறியதாவது:-

    இந்த ஆட்டத்தில் நாங்கள் சிறப்பாக செயல்பட்டோம். ஆடுகளம் (பிட்ச்) பேட்டிங்குக்கு சாதகமாக இருந்தது. இதனால் என்னால் எளிதாக அடித்து ஆட முடிந்தது. நான் எப்போதும் போல் ஒரே மாதிரியான பேட்டிங்கை தான் பின்பற்றுகிறேன். அதை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்றே நினைக்கிறேன்.



    இந்த ஆட்டத்தில் நான் இரட்டை சதம் (200 ரன்) அடிக்க வேண்டும் என்று நினைத்தீர்களா? என்று கேட்கிறீர்கள். இது கொஞ்சம் அதிகப்படியான கேள்விதான். நான் உண்மையில் 200 ரன் அடிக்க வேண்டும் என்று நினைக்கவில்லை. ஆனால் எவ்வளவு ரன்களை குவிக்க முடியுமோ? அவ்வளவு குவிக்க வேண்டும் என்று நினைத்து ஆடினேன். அதற்கு பலன் கிடைத்தது.

    அதேபோல இலங்கை அணியும் சரியான சவாலை கொடுத்தது. அவர்களும் இலக்கை நோக்கி சரியாகவே தொடங்கினார்கள். குல்தீப் யாதவ்தான் ஆட்டத்தின் போக்கை மாற்றினார். இதேபோல சாஹலும் சிறப்பாக செயல்பட்டு விக்கெட்டை வீழ்த்தினார். ராகுலின் பேட்டிங்கும் அபாரமாக இருந்தது. நான் எதிர்முனையில் இருந்து அவரது ஆட்டத்தை ரசித்தேன். இந்த வெற்றிகளால் தென்ஆப்பிரிக்கா பயணத்தில் சிறப்பாக விளையாட இயலும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இலங்கைக்கு எதிராக 3 விதமான தொடர்களையும் வென்றுள்ளதால் நம்பிக்கை அதிகரித்துள்ளது.

    கேப்டன் பதவியில் சிறப்பாக செயல்பட்டது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. 20 ஓவர் போட்டியில் என்னுடன் தொடக்க வீரராக யார் ஆடுவதை (ராகுல் அல்லது தவான்) விரும்புகிறீர்கள் என்று கேட்கிறீர்கள். இது கேப்டன் விராட் கோலியிடம் கேட்க வேண்டியது. அடுத்த தொடருக்கு நான் கேப்டன் இல்லை. இருவருமே சிறந்த பேட்ஸ்மேன்கள்தான். தவான் தற்போது அணியில் இல்லை. ராகுல் அடுத்த ஆட்டத்தில் ஆடுவார்.

    இவ்வாறு ரோகித்சர்மா கூறியுள்ளார்.

    இந்தியா- இலங்கை அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் ஆட்டம் மும்பையில் நாளை நடக்கிறது.
    Next Story
    ×