search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இலங்கைக்கு எதிராக இந்தியாவின் அதிரடி தொடருமா?: இன்று 2-வது 20 ஓவர் போட்டி
    X

    இலங்கைக்கு எதிராக இந்தியாவின் அதிரடி தொடருமா?: இன்று 2-வது 20 ஓவர் போட்டி

    இந்தியா- இலங்கை மோதும் 2-வது 20 ஓவர் ஆட்டம் மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் இன்று இரவு 7 மணிக்கு நடக்கிறது.

    இந்தூர்:

    இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கிலும், ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கிலும் இந்தியா கைப்பற்றி இருந்தது.

    இந்தியா-இலங்கை இடையேயான மூன்று 20 ஓவர் தொடரில் கட்டாக்கில் நேற்று முன்தினம் நடந்த முதல் ஆட்டத்தில் இந்தியா 93 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதனால் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

    இரு அணிகள் மோதும் 2-வது 20 ஓவர் ஆட்டம் மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் இன்று இரவு 7 மணிக்கு நடக்கிறது. இந்த ஆட்டத்திலும் வென்று இந்திய அணி தொடரை கைப்பற்றுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சமபலத்துடன் திகழும் இந்திய அணி தனது அதிரடியை நீடித்துக் கொள்ளும் ஆர்வத்தில் உள்ளது.

    பேட்டிங்கில் கேப்டன் ரோகித்சர்மா, முன்னாள் கேப்டன் டோனி, ராகுல், மனிஷ் பாண்டே ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். ஹர்த்திக் பாண்ட்யாவுக்கு தனது திறமையை வெளிப்படுத்த வாய்ப்பு கிடைக்கவில்லை. அதே நேரத்தில் அவர் வேகப்பந்தில் சிறப்பான நிலையில் உள்ளார்.

    சுழற்பந்து வீரர்களான யசுவேந்திர சஹால், குல்தீப் யாதவ் அணியின் முதுகெலும்பாக திகழ்கிறார்கள். இலங்கை பேட்ஸ்மேன்களுக்கு இருவரும் தொடர்ந்து சவாலாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் மாற்றம் இருக்காது. ஒருவேளை மாற்றம் இருந்தால் ஜெயதேவ் உனகட்டுக்கு பதிலாக பசவி தம்பி தேர்வு செய்யப்படலாம்.

    டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை இழந்ததால் 20 ஓவர் தொடரை இழக்காமல் இருக்க இலங்கை வீரர்கள் வெற்றிக்காக கடுமையாக போராடுவார்கள். முதல் போட்டியில் ஏற்பட்ட மோசமான தோல்விக்கு அந்த அணி பதிலடி கொடுக்கும் ஆர்வத்தில் உள்ளது. இலங்கை அணி தனது பேட்டிங்கை மேம்படுத்திக் கொள்ள முயற்சிக்கும். இந்தியாவின் சுழற்பந்தை சமாளிக்க கடுமையாக போராடுவார்கள்.

    இரு அணிகளும் இன்று மோதுவது 13-வது 20 ஓவர் போட்டியாகும். இதுவரை நடந்த 12 போட்டியில் இந்தியா 8-ல், இலங்கை 4-ல் வெற்றி பெற்றுள்ளன.

    இரு அணியிலும் 11 பேர் கொண்ட லெவனில் இடம் பெறலாம் என்று எதிர்பார்க்கப்படும் வீரர்கள் வருமாறு:-

    இந்தியா: ரோகித்சர்மா (கேப்டன்), லோகேஷ் ராகுல், ஷிரேயாஸ் அய்யர், தினேஷ் கார்த்திக், மனிஷ் பாண்டே, டோனி, ஹர்த்திக் பாண்ட்யா, குல்தீப் யாதவ், பசலிதம்பி அல்து ஜெய்தேவ் உனட்கட், பும்ரா, யசுவேந்திரா சஹால்.

    இலங்கை: திசாரா பெரைரா (கேப்டன்), டிக்வெலா, உபுல்தரங்கா, குஷால் பெரைரா, மேத்யூஸ், சமரவிக்ரமா, குணரத்னே, தாசுன், ‌ஷனகா, அகிலா தனஞ்செயா, சமீரா, நுவன்பிரதிப்.

    இந்த ஆட்டம் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் தூர்தர்சனில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

    Next Story
    ×