search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    2-வது டி20: விராட் கோலி முதன்முறையாக ‘டக்’;  31 ரன்னுக்குள் 4 விக்கெட்டை இழந்து திணறல்
    X

    2-வது டி20: விராட் கோலி முதன்முறையாக ‘டக்’; 31 ரன்னுக்குள் 4 விக்கெட்டை இழந்து திணறல்

    கவுகாத்தியில் நடைபெற்று வரும் 2-வது டி20 கிரிக்கெட் போட்டியில் விராட் கோலி முதன்முறையாக டக்அவுட்டை பதிவு செய்துள்ளார். 4 விக்கெட்டை இழந்து இந்தியா திணறல்.
    இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி இன்றிரவு 7 மணிக்கு அஸ்ஸாம் மாநிலம் கவுகாத்தி மைதானத்தில் தொடங்கியது. கவுகாத்தியில் நடைபெறும் முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டி என்பதால் ரசிகர்களின் கூட்டம் அலைமோதியது.

    டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் வார்னர் பீல்டிங் தேர்வு செய்தார். அந்த அணியில் டேன் கிறிஸ்டியன் நீக்கப்பட்டு ஸ்டாய்னிஸ் சேர்க்கப்பட்டார். இந்திய அணியில் மாற்றம் ஏதும் செய்யவில்லை.

    ஆடுகளம் பேட்டிங்கிற்கு அதிக அளவில் ஒத்துழைக்கும் என்று கூறப்பட்டது. ஆடுகளத்தின் தன்மை எப்படி இருக்கும் என்று தெரியாத நிலையில் ரோகித் சர்மா, தவான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.

    முதல் ஓவரை பெரேன்டர்ஃப் வீசினார். முதல் பந்தை ரோகித் சர்மா பவுண்டரிக்கு விரட்டினார். இதனால் இந்தியா அதிக ரன்கள் குவிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 2-வது பந்தில் ரன்ஏதும் எடுக்காத ரோகித் 3-வது பந்தில் எல்.பி.டபிள்.யூ. ஆனார். அடுத்து வந்த விராட் கோலி கடைசி பந்தில் பெரேன்டர்ஃபிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். பெரேன்டர்ஃப் முதல் ஓவரில் 8 ரன்கள் விட்டுக்கொடுத்து இரண்டு முக்கிய விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.



    2 பந்துகளை சந்தித்த கேப்டன் விராட் கோலி டக்அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். டி20 கிரிக்கெட் போட்டியில் கோலியின் 52-வது போட்டி இதுவாகும். இதுவரை விராட் கோலி டக்அவுட் ஆனது கிடையாது. முதன்முறையாக விராட் கோலி டி20 கிரிக்கெட்டில் டக்அவுட்டை பதிவு செய்தார்.

    அடுத்து வந்த மணீஷ் பாண்டே 8 ரன்னில் ஆட்டம் இழந்தார். மற்றொரு தொடக்க வீரர் தவான் 2 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். இதனால் இந்தியா 4.3 ஓவரில் 27 ரன்கள் எடுப்பதற்குள் 4 முக்கிய விக்கெட்டுக்களை இழந்தது. நான்கு விக்கெட்டுக்களையும் பெரேன்டர்ஃப்தான் வீழ்த்தினார்.

    5-வது விக்கெட்டுக்கு கேதர் ஜாதவ் உடன் டோனி ஜோடி சேர்ந்துள்ளார். 5 ஓவர்கள் முடிவில் இந்தியா 4 விக்கெட் இழப்பிற்கு 31 ரன்கள் எடுத்துள்ளது.
    Next Story
    ×