search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சேப்பாக் சூப்பர் கில்லீஸ் கேப்டன் சதீஷ், கோவை கிங்ஸ் கேப்டன் முரளிவிஜய்.
    X
    சேப்பாக் சூப்பர் கில்லீஸ் கேப்டன் சதீஷ், கோவை கிங்ஸ் கேப்டன் முரளிவிஜய்.

    டி.என்.பி.எல். கிரிக்கெட்: சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி கோவை கிங்சுடன் இன்று பலப்பரீட்சை

    டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் இறுதிப்போட்டிக்கான 2-வது தகுதி சுற்றில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, கோவை கிங்சை இன்று (வெள்ளிக்கிழமை) எதிர்கொள்கிறது.
    நெல்லை :

    8 அணிகள் பங்கேற்ற 2-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டித் தொடர் ‘கிளைமாக்ஸ்’ கட்டத்தை நெருங்கியுள்ளது. ஒரு ஆட்டத்தில் கூட தோற்காத நடப்பு சாம்பியனான தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணி ஏற்கனவே இறுதிப்போட்டிக்கு முன்னேறி விட்டது.

    இறுதிசுற்றை எட்டும் மற்றொரு அணி எது? என்பதை நிர்ணயிக்கும் 2-வது தகுதி சுற்று ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீசும், கோவை கிங்சும் இன்றிரவு கோதாவில் இறங்குகின்றன. இந்த ஆட்டம் நெல்லையில் அரங்கேறுகிறது.

    லீக் சுற்றில் 6 வெற்றிகளை குவித்து அசத்திய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் தூத்துக்குடியிடம் 114 ரன்களில் சுருண்டு தோல்வியை தழுவியது. இருப்பினும் கிடைத்துள்ள இந்த 2-வது அரிய வாய்ப்பை கச்சிதமாக பயன்படுத்திக்கொள்ள தீவிர முனைப்பு காட்டுவார்கள்.

    கில்லீஸ் அணிக்கு தொடக்கம் சீராக இல்லை. கோபிநாத்தும் (7 ஆட்டத்தில் 189 ரன்) தலைவன் சற்குணமும் (8 ஆட்டத்தில் 180 ரன்) நிலைத்து நின்று நல்ல பார்ட்னர்ஷிப் கொடுக்க வேண்டியது அவசியமாகும். மிடில் வரிசையில் சசிதேவ்-அந்தோணி தாஸ் ஜோடி தான் அணியை தாங்கிப்பிடிக்கிறது. குறிப்பாக அந்தோணி தாஸ் இதுவரை 15 சிக்சருடன் 173 ரன்கள் எடுத்திருக்கிறார். இவர்களோடு மற்றவர்களும் பொறுப்பை உணர்ந்து ஆட வேண்டும். வசந்த் சரவணன், கேப்டன் சதீஷ் ஆகியோரிடம் இருந்து இன்னும் அதிரடி வெளியாகவில்லை.

    இதே போல் கேட்ச்சுகளை தவற விடுவதும், முக்கியமான தருணத்தில் அவசரகதியில் ஷாட்டுகளை அடித்து விக்கெட்டுகளை இழப்பதும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இது போன்ற குறைகளை களைந்து முழு திறமையை வெளிப்படுத்தும் பட்சத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீசை அசைப்பது கடினம். பந்து வீச்சில் சிக்கனத்தை காட்டும் சுழற்பந்து வீச்சாளர்கள் சாய் கிஷோர் (13 விக்கெட்), அலெக்சாண்டர் (7 விக்கெட்) நம்பிக்கை தருகிறார்கள்.



    சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி ஏற்கனவே லீக் ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் கோவை கிங்சை தோற்கடித்து இருப்பதால் கூடுதல் நம்பிக்கையுடன் களம் இறங்கும்.

    தொடக்கத்தில் தடுமாறிய கோவை கிங்ஸ் அணி, கடைசி கட்டத்தில் எழுச்சி கண்டது. காயத்தில் இருந்து குணமடைந்து கேப்டன் முரளிவிஜய் வருகை தந்ததும் புத்துணர்ச்சி பெற்ற அந்த அணி கடைசி மூன்று ஆட்டங்களிலும் வெற்றி வாகை சூடியது. குறிப்பாக வெளியேற்றுதல் சுற்றில் காரைக்குடி காளை நிர்ணயித்த 194 ரன்கள் இலக்கை 19 ஓவர்களில் எட்டிப்பிடித்து வியக்க வைத்தது. இதில் விக்கெட் கீப்பர் ரோகித் 46 பந்துகளில் சதம் விளாசி சாதனை படைத்தார்.

    ரோகித், முரளிவிஜய், சூர்யபிரகாஷ், அனிருத் சீத்தா ராம் ஆகியோர் அந்த அணியின் பேட்டிங் தூண்களாக இருக்கிறார்கள். கோவை கிங்சும், சேப்பாக் சூப்பர் கில்லீசுக்கு நிகராக வலுவாக காணப்படுவதால் யாருடைய கை ஓங்கும் என்பதை எளிதில் கணிக்க இயலாது. என்றாலும் குறிப்பிட்ட நாளில் எந்த அணி நெருக்கடியை திறம்பட சமாளிக்கிறதோ அவர்களுக்கு வெற்றி வாய்ப்பு கிட்டும்.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    சேப்பாக் சூப்பர் கில்லீஸ்: கோபிநாத், தலைவன் சற்குணம், கார்த்திக், வசந்த் சரவணன், சசிதேவ், அந்தோணி தாஸ், ஆர்.சதீஷ் (கேப்டன்), யோ மகேஷ், தமிழ்குமரன், சாய் கிஷோர், அலெக்சாண்டர்.

    கோவை கிங்ஸ்: முரளிவிஜய் (கேப்டன்), சூர்யபிரகாஷ், அனிருத் சீத்தாராம், ரோகித், அக்‌ஷய் சீனிவாசன், ஹரிஷ்குமார், முகமது, சிவகுமார், விக்னேஷ், அருண், தாமரை கண்ணன்.
    Next Story
    ×