search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்ட்: இங்கிலாந்து அணி அபார வெற்றி
    X

    தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்ட்: இங்கிலாந்து அணி அபார வெற்றி

    மான்செஸ்டரில் நடைபெற்ற இங்கிலாந்து-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 177 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
    மான்செஸ்டர்:

    இங்கிலாந்து-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் நடந்தது. இதில் முதல் இன்னிங்சில் முறையே இங்கிலாந்து 362 ரன்களும், தென்ஆப்பிரிக்கா 226 ரன்களும் எடுத்தன. 136 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி 3-வது நாள் ஆட்ட நேரம் முடிவில் 8 விக்கெட்டுக்கு 224 ரன்கள் எடுத்து இருந்தது. மொயீன் அலி 67 ரன்னுடனும், ஸ்டூவர்ட் பிராட் ரன் எதுவும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர்.



    நேற்று 4-வது நாள் ஆட்டம் நடந்தது. தொடர்ந்து ஆடிய ஸ்டூவர்ட் பிராட் 5 ரன்னிலும், அடுத்து களம் கண்ட ஜேம்ஸ் ஆண்டர்சன் 2 ரன்னிலும் விரைவில் ஆட்டம் இழந்தனர். இதனால் இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்சில் 69.1 ஓவர்களில் 243 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. மொயீன் அலி 75 ரன்னுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார். தென்ஆப்பிரிக்க அணி தரப்பில் மோர்னே மோர்கல் 4 விக்கெட்டும், ஆலிவர் 3 விக்கெட்டும், ரபடா 2 விக்கெட்டும், மகராஜ் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    பின்னர் 380 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் ஆடிய தென்ஆப்பிரிக்க அணியின் விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் சரிந்தன. ஹசிம் அம்லா (83 ரன்கள்), டுபிளிஸ்சிஸ் (61 ரன்கள்) ஆகியோர் மட்டுமே நிலைத்து நின்று ஆடினார்கள். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினார்கள். தென் ஆப்பிரிக்க அணி 2-வது இன்னிங்சில் 62.5 ஓவர்களில் 202 ரன்னில் ஆட்டம் இழந்தது. இதனால் இங்கிலாந்து அணி 177 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இங்கிலாந்து அணி தரப்பில் மொயீன் அலி 5 விக்கெட்டும், ஜேம்ஸ் ஆண்டர்சன் 3 விக்கெட்டும், ஸ்டூவர்ட் பிராட், ரோலண்ட் ஜோன்ஸ் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள். இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி டெஸ்ட் தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

    Next Story
    ×