search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்திய கிரிக்கெட் அணியின் மானேஜராக சுனில் சுப்ரமணியன் நியமனம்
    X

    இந்திய கிரிக்கெட் அணியின் மானேஜராக சுனில் சுப்ரமணியன் நியமனம்

    இந்திய கிரிக்கெட் அணியின் மானேஜராக சுனில் சுப்ரமணியன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் அஸ்வினின் சிறுவயது பயிற்சியாளராவார்.
    இந்திய சீனியர் கிரிக்கெட் அணிக்கு பிரத்யேக மானேஜர் கிடையாது. இந்தியாவில் விளையாடும்போது மாநில கிரிக்கெட் சங்கத்தின் பிரதிநிதியில் ஒருவர் மானேஜராக செயல்படுவார். வெளிநாட்டின் சுற்றுப் பயணத்தின்போது மாநில் சங்கங்களில் இருந்து ஒரு பிரதிநிதியை அனுப்புவார்கள்.

    சமீபத்தில் இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடும்போது விராட் கோலிக்கும், கும்ப்ளேவிற்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

    இதுகுறித்து மானேஜர் விளக்கம் அளிக்கையில் இவருக்கும் இடையில் எந்த பிரச்சினையும் ஏற்பட்டதாக தெரியவில்லை என்று அறிக்கை அளித்திருந்தார். இது உச்சநீதிமன்றத்தால் நியமனம் செய்யப்பட்ட வினோத் ராய் தலைமையிலான நிர்வாகக்குழுவிற்கு திருப்தி அளிக்கவில்லை. மேலும் மானேஜர் பிசிசிஐ நிர்வாகிகளுக்கு சாதகமாக இருப்பார் என்று எண்ணியது.

    இதனால் ஒரு வருடத்திற்கு நிரந்தரமாக மானேஜரை நியமனம் செய்ய விரும்பியது. இதுகுறித்து பிசிசிஐ இணைய தளத்தில் விளம்பரம் செய்யப்பட்டது.

    இந்நிலையில் தமிழ்நாட்டிற்காக விளையாடிய முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் சுனில் சுப்ரமணியன் இன்று மானேஜராக நியமிக்கப்பட்டுள்ளார். பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில் இதை தெரிவித்துள்ளது.



    இந்திய அணி தற்போது இலங்கையில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. காலேயில் நடைபெற்ற முதல் டெஸ்ட் முடிந்துவிட்டது. 2-வது டெஸ்ட் ஆகஸ்ட் 3-ந்தேதி கொழும்பில் நடக்கிறது. இந்த டெஸ்டிற்கு முன் சுனில் சுப்ரமணியன் அணியுடன் இணைவார்.

    தமிழ்நாடு மற்றும் அசாம் அணிகளுக்காக விளையாடியுள்ள சுனில் சுப்பிரமணியன் 74 முதல்தர போட்டிகளில் விளையாடி 285 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார். ரஞ்சி டிராபி தொடருக்கான தமிழ்நாடு அணியின் கேப்டனாக இருந்துள்ளார்.

    இந்தியாவின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான அஸ்வினின் சிறுவயது பயிற்சியாளராக சுனில் சுப்ரமணியன் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×