search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெண்கள் உலகக் கோப்பை: மராட்டிய வீராங்கனைகளுக்கு தலா ரூ. 50 லட்சம் - அரசு அறிவிப்பு
    X

    பெண்கள் உலகக் கோப்பை: மராட்டிய வீராங்கனைகளுக்கு தலா ரூ. 50 லட்சம் - அரசு அறிவிப்பு

    பெண்கள் உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பிடித்த மராட்டிய வீராங்கனைகளுக்கு தலா ரூ. 50 லட்சம் வழங்கப்படும் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
    இங்கிலாந்தில் நடைபெற்ற பெண்கள் உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி 12 வருடத்திற்குப் பிறகு இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. பரபரப்பான இறுதிப் போட்டியில் 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பறிகொடுத்தது இந்தியா. என்றாலும் இறுதிப் போட்டி வரைக்கும் முன்னேறியது பெரிய சாதனையாக கருதப்படுகிறது.

    இதனால் இந்தியா திரும்பியுள்ள வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் மோடி நேரில் அழைத்து பாராட்டுக்கள் தெரிவித்தார். வீராங்கனைகளின் சொந்த மாநில அரசுகள் பரிசு அளித்து கௌரவப்படுத்தி வருகிறது.

    அந்த வகையில் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த பூனம் ரவுத், மோனா மெஷ்ரம், ஸ்மிரிதி மந்தனா ஆகியோரையும், அணி மானேஜர் மற்றும் பிசியோதெரபி ஆகியோரையும் சிறப்பிக்க அம்மாநில அரசு விரும்பியது.

    அதன்படி இன்று அவர்களை மகாராஷ்டிரா மேல்சபை கூட்டத்தை பார்வையிட அழைத்தது. அப்போது மேல்சபை சேர்மன் ராம்ராஜே நிம்பல்கர் இந்திய அணியை பாராட்டும் வகையில் ஒரு தீர்மானத்தை கொண்டு வந்தார்.

    மாநில விளையாட்டுத்துறை மந்திரி வினோத் டவாடேவும், மராட்டிய வீராங்கனைகளை பாராட்டியுள்ளார். அவர் கூறும்போது, ‘‘இந்திய அணிக்கு வாழ்த்துக்கள். வீராங்கனைகள் சாதனையால் நாங்கள் பெருமையடைகிறோம்’’ என்று தெரிவித்தார்.

    மாநில அரசு இவர்களுக்கு தலா 50 லட்சம் ரூபாயும், வீடு இல்லாதவர்களுக்கு வீடு வழங்கவும் முடிவு செய்துள்ளது.

    சட்ட மேலவை எதிர்க்கட்சி தலைவர் தனஞ்செய் முண்டே, மூத்த காங்கிரஸ் தலைவர் நாராயண் ரானே ஆகியோரும் வாழ்த்து தெரிவித்தனர்.
    Next Story
    ×