search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெற்றியுடன் தொடங்கியது மகிழ்ச்சி: சேப்பாக் வீரர் கோபிநாத் பேட்டி
    X

    வெற்றியுடன் தொடங்கியது மகிழ்ச்சி: சேப்பாக் வீரர் கோபிநாத் பேட்டி

    இரண்டாவது தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரில், முதல் போட்டியை வெற்றியுடன் தொடங்கி இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக சேப்பாக் சூப்பர் கில்லிஸ் வீரர் கோபிநாத் தெரிவித்தார்.
    நெல்லை:

    இரண்டாவது தமிழ்நாடு பிரீமியர் ‘லீக்’ 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த 22-ந்தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கியது.

    இந்நிலையில் 3-வது லீக் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-திருவள்ளூர் வீரன்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த திருவள்ளூர் வீரன்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 126 ரன்கள் எடுத்தது.

    பின்னர் களமிறங்கிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 18.3 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 129 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி வெற்றியுடன் தனது பயணத்தை தொடங்கியுள்ளது.

    55 பந்துகளில் 4 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 54 ரன்கள் குவித்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் தொடக்க வீரர் கோபிநாத் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.



    ஆட்ட நாயகன் விருது பெற்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் வீரர் கோபிநாத் வெற்றி குறித்து நிருபர்களிடம் கூறியதாவது:-

    கடந்த ஆண்டு முதல் போட்டியில் தோல்வி அடைந்தோம். இந்த ஆண்டு நாங்கள் முதல் போட்டியில் வெற்றி வாகை சூடி இருக்கிறோம். இது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த வெற்றி எங்கள் அணிக்கு நல்ல தொடக்கம்.

    தொடக்க ஆட்டக்காரராக நான் களமிறங்கி விளையாடினேன். எதிரணியினர் குறைந்த அளவு ரன்கள் எடுத்ததால் கடைசி வரை விளையாட வேண்டும் என்ற நோக்கத்தில் விளையாடினோம். இறுதி நேரத்தில் 2 விக்கெட்டுகளை இழந்தது வருத்தம் அளிக்கிறது.

    எங்கள் வெற்றி தொடர்வதற்கு கடுமையாக உழைப்போம். எங்கள் அணியை உற்சாகப்படுத்திய அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தோல்வி குறித்து திருவள்ளூர் வீரன்ஸ் அணியின் கேப்டன் பாபா அபராஜித் நிருபர்களிடம் கூறியதாவது:-

    போட்டித் தொடரை வெற்றியுடன் தொடங்க நினைத்தோம். ஆனால் அது முடியாமல் போய் விட்டது. 140-150 ரன்கள் வரை எடுத்து இருக்க வேண்டும். 20 ரன்கள் குறைவாக எடுத்து விட்டோம். ஆடுகளம் கொஞ்சம் மெதுவாக இருந்தது. குறுகிய இடைவேளையில் 3 விக்கெட்டுகளை இழந்தோம். இதுவும் தோல்விக்கு காரணம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி தனது 2-வது ஆட்டத்தில் கோவை கிங்சுடன் வருகிற 29-ந்தேதி மோதுகிறது. இந்த ஆட்டம் இரவு 7.15 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கிறது.

    திருவள்ளூர் வீரன்ஸ் அடுத்த ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்சை 28-ந்தேதி சந்திக்கிறது.
    Next Story
    ×