search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பயிற்சியாளர்கள் நியமனத்தில் குளறுபடி: தெண்டுல்கர், கங்குலி அதிருப்தி
    X

    பயிற்சியாளர்கள் நியமனத்தில் குளறுபடி: தெண்டுல்கர், கங்குலி அதிருப்தி

    ஜாகீர்கான் மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோர் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டதற்கு கங்குலி தலைமையிலான சிஓசி தான் காரணம் என விமர்சனம் எழும்பியுள்ளது. இதற்கு சிஓசி மறுப்பு தெரிவித்துள்ளது.
    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக முன்னாள் ஆல்-ரவுண்டர் ரவிசாஸ்திரி கடந்த 11-ந்தேதி நியமனம் செய்யப்பட்டார். கேப்டன் விராட் கோலி கருத்துக்கு ஏற்ப பயிற்சியாளரை தேர்வு செய்யும் கிரிக்கெட் ஆலோசனை கமிட்டி உறுப்பினர்களான தெண்டுல்கர், கங்குலி, லட்சுமண் ஆகியோர் ரவி சாஸ்திரியை பரிந்துரை செய்தனர்.

    மேலும் பந்து வீச்சு பயிற்சியாளராக முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர்கானையும், குறிப்பிட்ட வெளிநாட்டு சுற்றுப்பயணத்துக்கு பேட்டிங் ஆலோசகராக ராகுல் டிராவிட்டையும் தேர்வு செய்தனர். பயிற்சியாளர் தேர்வுக்கு நேர்காணல் முடிந்த சில மணி நேரத்தில் ரவிசாஸ்திரி பயிற்சியாளராக தேர்வு செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. உடனே அதை கிரிக்கெட் வாரியம் மறுப்பு அறிக்கை வெளியிட்டது.

    மேலும் கிரிக்கெட் ஆலோசனை கமிட்டி அவகாசம் கேட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதன்பின் பயிற்சியாளராக ரவிசாஸ்திரி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார். முதலில் ரவிசாஸ்திரிக்கு கங்குலி எதிர்ப்பு தெரிவித்தார் என்றும் அவரை தெண்டுல்கர் சமாதானப்படுத்தினார் என்றும் தகவல் வெளியானது. இதற்கிடையே பந்துவீச்சு பயிற்சியாளராக பரத் அருணை நியமிக்க ரவிசாஸ்திரி வலியுறுத்தி உள்ளார்.

    ஆனால் அதை கிரிக்கெட் ஆலோசனை கமிட்டி ஏற்கவில்லை. ஜாகீர்கான் மற்றும் டிராவிட்டை நியமனம் செய்தது ரவி சாஸ்திரியின் பதவியை குறைப்பதாகும் என வினோத் ராய் தலைமையிலான நிர்வாகக்குழு கருத்து தெரிவித்திருந்தது.



    இதனை கிரிக்கெட் ஆலோசனை கமிட்டி உறுப்பினர்கள் தெண்டுல்கர், கங்குலி லட்சுமண் மறுத்து உள்ளனர். இது தொடர்பாக அவர்கள் இ-மெயில் மூலம் கிரிக்கெட் நிர்வாக கமிட்டி தலைவர் வினோத் ராய்க்கு கடிதம் எழுதி உள்ளனர். அதில், கூறியிருப்பதாவது:-

    பந்து வீச்சு பயிற்சியாளராக ஜாகீர்கானையும் பேட்டிங் பயிற்சியாளராக ராகுல் டிராவிட்டையும் நியமிப்பது குறித்து ரவி சாஸ்திரியிடம் ஆலோசித்தோம். அவரும் அதை ஏற்று கொண்டார். அது அணிக்கும், இந்திய கிரிக்கெட்டுக்கும் வருங்காலத்தில் நன்மை அளிக்கும் என்பதால் ஏற்றார். அதன் பின்னரே ஜாகீர்கான், ராகுல் டிராவிட் ஆகியோர் பெயர்களை பரிந்துரை செய்தோம்.

    நாங்கள் இப்பணியில் (பயிற்சியாளர் தேர்வு) முழு ஆத்மார்த்தோடு செயலபட்டோம். இந்திய அணிக்கு சிறந்த அணுகுமுறை கிடைக்க வேண்டும் என்பதை மனதில் கொண்டு பணியாற்றினோம். ஆனால் கிரிக்கெட் ஆலோசனை கமிட்டி பற்றி மீடியாக்களில் வெளியாகும் செய்திகள் எங்களுக்கு வேதனை அளிக்கிறது. அதிருப்தி அடைய செய்துள்ளது.

    நாங்கள் மூவரும் கிரிக்கெட்டை நேர்மையுடன் விளையாடி உள்ளோம். அதையே கிரிக்கெட் வாரியம் எங்களுக்கு அளித்துள்ள இந்த முக்கிய பொறுப்பிலும் செயல்படுத்தி உள்ளோம். நாங்கள் பரிசுகளையோ, பாராட்டுகளையோ எதிர்பார்க்கவில்லை. தவறான தகவல்களுக்காக விளக்கம் அளித்துள்ளோம்.

    இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர்.
    Next Story
    ×