search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராகுல் டிராவிட் நிரந்தர ஆலோசகர் கிடையாது: பிசிசிஐ அதிகாரி சொல்கிறார்
    X

    ராகுல் டிராவிட் நிரந்தர ஆலோசகர் கிடையாது: பிசிசிஐ அதிகாரி சொல்கிறார்

    ராகுல் டிராவிட் இந்திய தேசிய கிரிக்கெட் அணியின் நிரந்தர பேட்டிங் ஆலோசகர் இல்லை என்று பிசிசிஐ அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.
    இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரி நியமிக்கப்பட்டுள்ளார். அதேவேளையில், பந்து வீச்சு பயிற்சியாளராக ஜாகீர் கானும், இந்திய அணி வெளிநாட்டு மண்ணில் விளையாடும்போது ராகுல் டிராவிட் பேட்டிங் ஆலோசகராக இருப்பார் என்றும் அறிவிக்கப்பட்டது.

    இதனால் அனைவருக்கும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. ராகுல் டிராவிட், ஜாகீர் கான் ஆகியோர் அணிக்குள் நுழைந்ததால், தலைமை பயிற்சியாளராக இருக்கும் ரவி சாஸ்திரிக்கு என்ன வேலை? மூன்று பேருக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்படாதா? என்ற கேள்விகள் எல்லாம் எழுந்தது.

    இந்நிலையில் இந்திய அணி வெளிநாட்டு மண்ணில் விளையாடும் அனைத்து தொடர்களிலும் ராகுல் டிராவிட் ஆலோசகராக இருக்கமாட்டார். அவரின் தலையாய கடமை 19 வயதிற்குட்பட்டோர் மற்றும் இந்திய ‘ஏ’ அணியில் சிறந்த வீரர்களை உருவாக்குவதுதான் என்று பிசிசிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அந்த அதிகாரி கூறுகையில் ‘‘டிராவிட்டின் முக்கிய இலக்கு ஜூனியர் அணிதான் என்பதால் ஆலோசகர் என்ற பதவி கொடுக்கப்பட்டுள்ளது. இந்திய அணியின் பயிற்சியாளர் மற்றும் கேப்டன் ஆகியோர் எப்போதெல்லாம் வீரர்கள் தேவை என்று கூறுகிறார்களோ, அப்போதெல்லாம் ஜூனியர் அணியில் உள்ள திறமையான வீரர்களை கண்டறிந்து அணிக்கு அனுப்புவதுதான் டிராவிட்டின் முதல் கடமை. ஆகவே, பேட்டிங் ஆலோசகர் என்பது எப்போதாவது பயன்படும் பதவியே. நிரந்தரம் அல்ல.



    இலங்கை தொடரின்போது அவர் இந்திய அணியுடன் செல்லமாட்டார். தென்ஆப்பிரிக்கா செல்லும் இந்திய ‘ஏ’ அணியுடன் செல்வார். பின்னர், இந்திய அணி ஒன்றரை மாத காலம் தென்னாப்பிரிக்கா செல்லும்போது, ஒன்றிரண்டு வாரங்கள் அணியுடன் இருப்பார். தேவைப்படும்போது அணியுடன் இணைந்து கொள்வார். தேவையில்லாதபோது இந்திய ‘ஏ’ அணிக்கு திரும்பிவிடுவார்’’ என்று கூறியுள்ளார்.
    Next Story
    ×