search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதிய பயிற்சியாளராக ரவிசாஸ்திரிக்கு அதிக வாய்ப்பு: கவாஸ்கர்
    X

    புதிய பயிற்சியாளராக ரவிசாஸ்திரிக்கு அதிக வாய்ப்பு: கவாஸ்கர்

    இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக ரவிசாஸ்திரி தேர்வு செய்யப்பட அதிகமான வாய்ப்பு இருப்பதாக சுனில் கவாஸ்கர் தெரிவித்து உள்ளார்.
    மும்பை:

    இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த அனில் கும்ப்ளே திடீரென பதவி விலகினார்.

    கேப்டன் விராட் கோலியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர் பயிற்சியாளர் பதவியை ராஜினாமா செய்தார்.

    புதிய பயிற்சியாளரை தேர்வு செய்ய கிரிக்கெட் வாரியம் 9-ந்தேதி வரை விண்ணப்பங்களை பெறுகின்றன. ஷேவாக், டாம் மோடி, ரிச்சர்டு பைபஸ், லால்சந்த் ராஜ்புத், தோடா கணேஷ் ஆகியோர் பயிற்சியாளர் பதவிக்கு ஏற்கனவே விண்ணப்பித்து இருந்தனர்.

    அதைத்தொடர்ந்து வெங்கடேஷ் பிரசாத், ரவிசாஸ்திரி, பில்சிமோனஸ் ஆகியோர் விண்ணப்பித்து உள்ளனர்.

    தெண்டுல்கர், கவாஸ்கர், வி.வி.எஸ்.லட்சுமண் ஆகியோர் அடங்கிய 3 பேர் கொண்ட குழு புதிய பயிற்சியாளரை நேர்காணல் நடத்தி வருகிற 10-ந்தேதி தேர்வு செய்கிறது.



    இந்த நிலையில் இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக ரவிசாஸ்திரி தேர்வு செய்யப்பட அதிகமான வாய்ப்பு இருப்பதாக சுனில் கவாஸ்கர் தெரிவித்து உள்ளார். முன்னாள் கேப்டனும், டெலிவிசன் வர்ணனையாளருமான அவர் இது தொடர்பாக கூறியதாவது :-

    ரவிசாஸ்திரி ஏற்கனவே இந்திய அணியின் இயக்குனராக 2014-ம் ஆண்டு முதல் 2016 வரை இருந்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான தோல்விக்கு பிறகு அவரை கிரிக்கெட் வாரியம் விலக்கி கொண்டது. தற்போது அவரும் விண்ணப்பித்து உள்ளார். அவர் பயிற்சியாளர் பதவிக்கு தேர்ந்து எடுக்கப்பட அதிகமான வாய்ப்பு இருக்கிறது.

    ஷேவாக், டாம்மோடியும் சிறப்பாக பயிற்சி அளிக்க கூடியவர்கள். ஆனால் ரவிசாஸ்திரி அதைவிட அனுபவம் பெற்றவர். இதனால் கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாக குழு அவரை தான் தேர்வு செய்யும் மேலும் ரவிசாஸ்திரி வீரர்களுடன் நல்ல முறையில் பழகக்கூடியவர். அவர் இருந்தால் அணிக்கு நல்லது. இதனால் ரவிசாஸ்திரி பயிற்சியாளர் பதவியில் முன்னிலையில் உள்ளார்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    Next Story
    ×