search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மோசமான பேட்டிங் தோல்விக்கு காரணம்: மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மா கருத்து
    X

    மோசமான பேட்டிங் தோல்விக்கு காரணம்: மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மா கருத்து

    ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் முதலாவது தகுதி சுற்றில் புனேயிடம் கண்ட தோல்விக்கு மோசமான பேட்டிங் காரணம் என்று மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்தார்.
    மும்பை :

    ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடரில் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த முதலாவது தகுதி சுற்று ஆட்டத்தில், லீக் முடிவில் புள்ளி பட்டியலில் 2-வது இடம் பெற்ற ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் முதலிடம் பிடித்த மும்பை அணியை வீழ்த்தி நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. புனே அணி 2 முறை சாம்பியனான மும்பை அணியை இந்த சீசனில் தொடர்ச்சியாக 3-வது முறையாக சாய்த்து ஆதிக்கம் செலுத்தியதுடன், முதல்முறையாக இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைத்தது.

    முதலில் ஆடிய புனே 1.5 ஓவர்களில் 9 ரன்னுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. தொடக்க ஆட்டக்காரர் திரிபாதி ரன் எதுவும் எடுக்காமலும், கேப்டன் ஸ்டீவன் சுமித் 1 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். ரஹானே (56 ரன்கள், 43 பந்துகளில் 5 பவுண்டரி, ஒரு சிக்சருடன்), மனோஜ்திவாரி (58 ரன்கள், 48 பந்துகளில் 4 பவுண்டரி, 2 சிக்சருடன்) அரைசதம் அடித்து அணியை சரிவில் இருந்து மீட்டனர்.

    டோனி அதிரடியாக ஆடி 26 பந்துகளில் 5 சிக்சருடன் 40 ரன்கள் சேர்த்து கடைசி கட்டத்தில் அணியின் ஸ்கோரை வேகமாக உயர்த்தினார். மெக்லெனஹான் வீசிய 19-வது ஓவரில் 2 சிக்சர் விளாசிய டோனி, கடைசி ஓவரில் பும்ரா பந்து வீச்சில் 2 சிக்சர் தூக்கினார். மனோஜ்திவாரி 19-வது ஓவரில் ஒரு சிக்சர் அடித்தார். கடைசி 2 ஓவர்களில் புனே அணி 41 ரன்கள் சேர்த்தது ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. 20 ஓவர்களில் புனே அணி 4 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்தது. மும்பை அணி தரப்பில் மெக்லெனஹான், மலிங்கா, கரண்ஷர்மா தலா ஒரு விக்கெட் கைப்பற்றினார்கள்.


    பொல்லார்ட் விக்கெட்டை வீழ்த்திய புனே அணி வீரர் வாஷிங்டன் சுந்தரை, சக வீரர்கள் பாராட்டுகின்றனர்.


    பின்னர் 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய மும்பை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 142 ரன்களே எடுத்தது. இதனால் புனே அணி 20 ரன் வித்தியாசத்தில் வெற்றியை தனதாக்கியது. மும்பை அணியில் அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் பார்த்தீவ் பட்டேல் 52 ரன்கள் (40 பந்துகளில் 3 பவுண்டரி, 3 சிக்சருடன்) எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்து பெவிலியன் திரும்பினார்கள். புனே அணி தரப்பில் தமிழகத்தை சேர்ந்த 17 வயதான வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்டும், ஷர்துல் தாகூர் 3 விக்கெட்டும் வீழ்த்தி அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தனர்.

    4 ஓவர்கள் பந்து வீசி 16 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 முக்கிய விக்கெட்டுகளை (கேப்டன் ரோகித் சர்மா, அம்பத்தி ராயுடு, பொல்லார்ட்) வீழ்த்திய வாஷிங்டன் சுந்தர் ஆட்டநாயகன் விருது பெற்றார். இதன் மூலம் ஐ.பி.எல். போட்டியில் குறைந்த வயதில் ஆட்டநாயகன் விருது பெற்ற வீரர் என்ற பெருமையை வாஷிங்டன் சுந்தர் பெற்றார்.

    புனே அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றதன் மூலம் டோனி 7-வது முறையாக ஐ.பி.எல். இறுதிப்போட்டியில் விளையாடும் வாய்ப்பை பெற்றுள்ளார். தோல்வி கண்ட மும்பை அணிக்கு இறுதிப்போட்டிக்கு தகுதி பெற இன்னும் ஒரு வாய்ப்பு உள்ளது. அந்த அணி நாளை நடைபெறும் 2-வது தகுதி சுற்றில் விளையாடும்.

    வெற்றிக்கு பிறகு புனே அணி கேப்டன் ஸ்டீவன் சுமித் அளித்த பேட்டியில், ‘இந்த ஐ.பி.எல். போட்டி தொடரில் நாங்கள் 3 முறை மும்பை இந்தியன்ஸ் அணியை வென்று இருக்கிறோம். இது மிகப்பெரிய போட்டியாகும். நாங்கள் சிறப்பாக செயல்பட்டு 160 ரன்களை எடுத்தோம். டோனி அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். எங்களுக்கு தேவையான உத்வேகத்தை இந்த ஆட்டத்தில் பெற்றோம்.



    இந்த போட்டி தொடரில் நாங்கள் சரியான தருணத்தில் நல்ல பார்முக்கு வந்து இருக்கிறோம். எங்களது திட்டங்களை நல்ல முறையில் செயல்படுத்தினோம். பந்து வீச்சில் வேகத்தை கட்டுப்படுத்தி வீச முயற்சித்தோம். அதற்கு இந்த போட்டி தொடர் முழுவதும் நல்ல பலன் கிடைத்தது. இந்த போட்டியிலும் அது அனுகூலமாக அமைந்தது. பனியின் தாக்கம் லேசாக இருந்தது. மும்பை அணியை எங்கள் பந்து வீச்சாளர்கள் கட்டுப்படுத்திய விதம் சிறப்பானது. வாஷிங்டன் சுந்தரின் பந்து வீச்சு சரியான அளவில் இருந்தது. பெரிய போட்டியில் அவரது இந்த செயல்பாடு சிறப்புக்குரியது. அவரது செயல்பாட்டை நினைத்து பெருமைப்படுகிறோம்’ என்று தெரிவித்தார்.

    தோல்வி குறித்து மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மா கருத்து தெரிவிக்கையில், ‘163 ரன்கள் இலக்கு என்பது குறைவான ஸ்கோர் தான். இந்த ஆடுகளத்தில் அதனை எட்ட முடியும். இந்த சீசனில் எங்களது மோசமான பேட்டிங் இது தான். எங்களது இணை ஆட்டம் (பார்ட்னர்ஷிப்) போதுமானதாக அமையவில்லை. புனே அணியினர் சிறப்பாக பந்து வீசி மிடில் ஓவரில் ரன்குவிப்பை கட்டுப்படுத்தியதுடன், விக்கெட்டையும் வீழ்த்தினார்கள். ஷாட்டை தேர்வு செய்து விளையாட வேண்டியது மிகவும் முக்கியமானதாகும். சந்தர்ப்ப சூழ்நிலையை உணர்ந்து மதிப்பளிக்க வேண்டும். இத்துடன் எங்கள் கதை முடிந்து விடவில்லை. இறுதிப்போட்டிக்கு தகுதி பெற இன்னும் ஒரு வாய்ப்பு இருக்கிறது’ என்றார்.

    ஆட்டநாயகன் விருது பெற்ற புனே அணியின் சுழற்பந்து வீச்சாளர் வாஷிங்டன் சுந்தர் அளித்த பேட்டியில், ‘பெரிய போட்டியில் வலுவான அணிக்கு எதிரான ரசிகர்கள் நிரம்பி வழிந்த ஆட்டத்தில் சிறப்பாக செயல்பட்டது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த ஆட்டநாயகன் விருதை எனது பெற்றோருக்கு அர்ப்பணிக்கிறேன். அவர்களுடைய பிரார்த்தனையால் தான் என்னால் இந்த காரியத்தை செய்ய முடிந்தது. டோனி எனக்கு நல்ல ஆலோசனைகள் வழங்கி உதவி செய்தார்’ என்று தெரிவித்தார்.
    Next Story
    ×