search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராகுல் மவுனத்தால் காங்கிரசில் குழப்பம் - தற்காலிக தலைவரை நியமிக்க முடிவு
    X

    ராகுல் மவுனத்தால் காங்கிரசில் குழப்பம் - தற்காலிக தலைவரை நியமிக்க முடிவு

    ராகுல் காந்தி தொடர்ந்து மவுனமாக இருப்பதால் காங்கிரஸ் நிர்வாக பணிகளை செய்ய இடைக்கால தலைவர் ஒருவரை தேர்வு செய்யலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலில் ராகுல் தலைமையில் களம் இறங்கிய காங்கிரஸ் கட்சி 2-வது முறையாக மிக மிக மோசமான தோல்வியை தழுவியுள்ளது.

    421 இடங்களில் வேட்பாளர்களை நிறுத்திய காங்கிரசுக்கு 52 இடங்களே கிடைத்தன. காங்கிரசின் கோட்டையாக கருதப்படும் அமேதியில் சுமார் 55 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ராகுலும் தோல்வியைத் தழுவினார். இந்த படு தோல்வியால் காங்கிரஸ் கட்சிக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து கூட கிடைக்கவில்லை.

    நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களுக்கும் சுமார் 3 மாதமாக சுற்றுப்பயணம் செய்து தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொண்டும் ஆட்சியை பிடிக்க முடியாததால் ராகுல் அதிருப்தி அடைந்தார். பிரியங்காவை அரசியலுக்கு அழைத்து வந்த பிறகும் கூட, 2014-ம் ஆண்டு தேர்தலுடன் ஒப்பிடுகையில் கூடுதலாக வெறும் எட்டே எட்டு இடங்களில் மட்டுமே வெற்றி கிடைத்ததால் ராகுலுக்கு விரக்தி உண்டானது.

    இரண்டு தேர்தல்களில் மக்கள் அடுத்தடுத்து புறக்கணித்து இருப்பதால், கட்சி நிர்வாகப் பணிகளில் இருந்து சிறிது காலத்துக்கு விலகி இருக்க முடிவு செய்தார். இதைத் தொடர்ந்து கடந்த மே 25-ந்தேதி, காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக அறிவித்தார். காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் இது தொடர்பாக கடிதம் கொடுத்த அவர் தனது குடும்பத்தைச் சாராத ஒருவரை தலைவராக தேர்ந்து எடுத்துக் கொள்ளும்படி கேட்டுக் கொண்டார்.



    ராஜினாமா செய்தபோது, காங்கிரசின் மிக மிக மோசமான தோல்விக்கு கமல்நாத், அசோக்கெலாட், ப.சிதம்பரம் போன்ற மூத்த தலைவர்கள் சுயநலத்துடன் நடந்து கொண்டதே காரணம் என்ற குற்றச்சாட்டையும் ராகுல் அதிரடியாக வெளியிட்டார். இதனால் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

    என்றாலும் ராகுலை சந்தித்த காங்கிரஸ் மூத்த தலைவர்கள், அவரை சமரசம் செய்து, தலைவர் பதவியில் நீடிக்க செய்ய முயன்றனர். ஆனால் ராகுல், காங்கிரஸ் மூத்த தலைவர்களை சந்தித்து பேச மறுத்து விட்டார். கடந்த 18 நாட்களாக அவர் கட்சி நிர்வாகம் தொடர்பாக எந்தவித நடவடிக்கைகளிலும் ஈடுபடவில்லை. ஒதுங்கியே இருக்கிறார்.

    வயநாடு தொகுதியில் மட்டும் வெற்றி பெற்ற ராகுல் கடந்த வார இறுதியில் அங்கு சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். அதன்பிறகு அவர் வழக்கமான கட்சிப் பணிகளில் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வயநாடு தொகுதிக்கு சென்று வந்த பிறகும் ராகுல் மனநிலையில் மாற்றம் ஏற்படவில்லை. ராஜினாமா முடிவில் அவர் உறுதியாக இருப்பதாக தெரிய வந்துள்ளது.

    இதன் காரணமாக காங்கிரஸ் நிர்வாகப் பணிகளில் குழப்பமான நிலை உருவாகி இருக்கிறது. குறிப்பாக பல்வேறு மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியிலும் ஆட்சியிலும், சர்ச்சைகள் ஏற்பட்டுள்ளது. இந்த குழப்பங்களை விரைவில் தீர்த்து சுமூக நிலையை உருவாக்க வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

    இதற்கிடையே பாராளுமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் வருகிற 17-ந்தேதி தொடங்க உள்ளது. இந்த கூட்டத்தொடரில் புதிய எம்.பி.க்கள் பதவி ஏற்பு, சபாநாயகர் தேர்வு, துணை சபாநாயகர் தேர்வு மற்றும் 23 முக்கிய மசோதாக்கள் தாக்கல், பட்ஜெட் தாக்கல் போன்ற முக்கிய அம்சங்கள் இடம்பெற உள்ளன. இந்த சூழ்நிலையில் பாராளுமன்ற மக்களவையில் காங்கிரஸ் எம்.பி.க்களுக்கு தலைமை ஏற்று வழி நடத்தும் பொறுப்பை ஏற்கும்படி ராகுலுக்கு மூத்த தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    கடந்த ஆட்சியின்போது பாராளுமன்ற மக்களவை காங்கிரஸ் தலைவராக இருந்த மல்லிகார்ஜுன கார்கே தோல்வியடைந்து விட்டதால், அந்த பொறுப்பை இந்த தடவை ராகுலே ஏற்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி.க்கள் அனைவரும் கூறி வருகிறார்கள். இதுகுறித்து சமீபத்தில் ஏ.கே.அந்தோணி ராகுலை சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது. ஆனால் அப்போது ராகுல் சமரசமானாரா என்று தெரியவில்லை.

    ராகுலின் தொடர் மவுனம் காங்கிரஸ் மூத்த தலைவர்களிடம் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அடுத்தகட்டமாக என்ன செய்யலாம் என்று காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஆலோசனை நடத்த தொடங்கியுள்ளனர். ராகுல் பிடிவாதமாக இருப்பதால் காங்கிரஸ் நிர்வாக பணிகளை தொடர்ந்து செய்ய இடைக்கால தலைவர் ஒருவரை தேர்வு செய்யலாம் என்று மூத்த தலைவர்களில் சிலர் பேசி வருவதாக கூறப்படுகிறது.

    இறுதியாக ராகுலிடம் ஒரு தடவை பேச முடிவு செய்துள்ளனர். அதன்பிறகும் ராகுல் பிடிவாதமாக இருந்தால் மூத்த தலைவர் ஒருவர் தற்காலிக தலைவர் பொறுப்பை ஏற்பார். அவர் தலைமையிலான குழு கட்சியின் முக்கிய முடிவுகளை எடுக்கும். இந்த வார இறுதிக்குள் இதில் ஒரு தெளிவான நிலை தெரிந்துவிடும்.

    Next Story
    ×