search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரதமர் மோடி மாற்றான்தாய் மனப்பான்மையுடன் செயல்படுகிறார் - ராகுல் காந்தி குற்றச்சாட்டு
    X

    பிரதமர் மோடி மாற்றான்தாய் மனப்பான்மையுடன் செயல்படுகிறார் - ராகுல் காந்தி குற்றச்சாட்டு

    பாரதீய ஜனதா ஆட்சி நடக்காத மாநிலங்கள் மீது பிரதமர் மோடி மாற்றான்தாய் மனப்பான்மையுடன் செயல்படுகிறார் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.
    வயநாடு:

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் இருந்து நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த தொகுதி மக்களுக்கு நேரில் நன்றி கூறுவதற்காக அவர் அங்கு 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

    இந்தப் பயணத்தின் இறுதிநாளான நேற்று அவர் வயநாடு தொகுதிக்குட்பட்ட கோழிக்கோடு மாவட்டம், எங்கபுழா பகுதியில் நகர்வலம் வந்து மக்களுக்கு நன்றி தெரிவித்தார். திரளாக கூடி இருந்த மக்கள் மத்தியில் அவர் பேசினார்.

    கடந்த சனிக்கிழமையன்று குருவாயூரில் பிரதமர் மோடி பேசுகையில், “ஜனநாயகத்தில் தேர்தல்களுக்கு முக்கிய இடம் உண்டு. வெற்றி பெறுகிறவருக்கு 130 கோடி மக்களின் நலன்களையும் கவனிக்க வேண்டிய பொறுப்பு உண்டு. எங்களை வெற்றி பெற வைத்தவர்களும் சரி, வெற்றி பெற வைக்காத மக்களும் சரி, இரு தரப்பினரும் நமது மக்கள்தான். அந்த வகையில் கேரளாவும் எனக்கு வாரணாசி போன்று மிகவும் நெருக்கமானது” என்று கூறினார்.

    அதற்கு ராகுல் காந்தி பதில் அளிக்கிற விதத்தில் பேசினார்.

    அவர் கூறியதாவது:-

    பிரதமர் மோடி பாரதீய ஜனதா கட்சி ஆளும் மாநிலங்கள், பாரதீய ஜனதா கட்சி ஆட்சி செய்யாத மாநிலங்கள் என்று பிரித்துப்பார்த்து வேறுபட்டு நடந்துகொள்கிறார். உத்தரபிரதேசத்தை அவர் நடத்துகிறது மாதிரி கேரளாவை ஒரு போதும் நடத்தமாட்டார் என்பதை நான் அறிந்திருக்கிறேன். ஏனென்றால் இந்த மாநிலத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஆட்சி செய்கிறது.

    பாரதீய ஜனதா கட்சி ஆட்சி செய்யாத மாநிலங்கள் மீது அவர் மாற்றான்தாய் மனப்பான்மையுடன் செயல்படுகிறார்.

    வயநாடு மற்றும் கேரளாவின் வளர்ச்சிக்கு பிரதமர் மோடியிடம் இருந்தோ, பாரதீய ஜனதா கட்சி தலைமையிலான மத்திய அரசிடம் இருந்தோ நான் எந்த ஒத்துழைப்பையும் எதிர்பார்க்கவில்லை.

    கல்பேட்டா தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு எம்.எல்.ஏ.யை நான் சந்தித்து பேசினேன். காங்கிரசுக்கும், இடதுசாரிகளுக்கும் இடையே கொள்கைகளில் வேறுபாடு இருக்கலாம். ஆனால் அவற்றை ஒதுக்கித்தள்ளிவிட்டு, இரு கட்சிகளும் வயநாட்டின் முன்னேற்றத்துக்காக பாடுபட வேண்டும்.

    ஆனால் அத்தகைய ஒத்துழைப்பு பிரதமர் மோடியிடம் இருந்தோ, பாரதீய ஜனதா கட்சியிடம் இருந்தோ வராது. ஏனென்றால் அவர்கள் வெறுப்புணர்வாலும், கோபத்தாலும் கண்மூடித்தனமாக உள்ளனர். நாம் அதை எதிர்த்து நின்று போராடுவோம்.

    நாம் ஒருபோதும் நாக்பூரில் (ஆர்.எஸ்.எஸ். தலைமையம் அமைந்திருக்கும் இடம்) இருந்து ஆளப்பட மாட்டோம் என்ற உறுதியை உங்களுக்கு தருகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதைத் தொடர்ந்து தனது வயநாடு பயணத்தை ராகுல் காந்தி முடித்துக்கொண்டு, கரிப்பூர் விமான நிலையம் சென்று, அங்கிருந்து விமானம் மூலம் டெல்லிக்கு திரும்பினார்.
    Next Story
    ×