search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராபர்ட் வதேராவின் லண்டன் சொத்துக்களை முடக்க அமலாக்கத்துறை திட்டம்
    X

    ராபர்ட் வதேராவின் லண்டன் சொத்துக்களை முடக்க அமலாக்கத்துறை திட்டம்

    இங்கிலாந்தில், ராபர்ட் வதேரா தொடர்புடைய 8 வீடுகளின் விவரங்களை அந்நாட்டு அரசிடம் அமலாக்கத்துறை கேட்டுள்ளது. அந்த சொத்துக்களை முடக்க திட்டமிட்டுள்ளது.
    புதுடெல்லி:

    காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்காவின் கணவர் ராபர்ட் வதேரா, லண்டனில் பிரையன்ஸ்டன் சதுக்கம் என்ற இடத்தில் உள்ள சொத்தை வாங்கி இருப்பதாகவும், அதுதொடர்பாக அவர் சட்டவிரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதாகவும் அமலாக்கத்துறை குற்றம் சாட்டி உள்ளது. இதுகுறித்து அவரிடம் இதுவரை 11 தடவை அமலாக்கத்துறை விசாரணை நடத்தி உள்ளது.

    அவரது முன்ஜாமீனை ரத்து செய்யக்கோரி, கோர்ட்டில் அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்துள்ளது. அவர் வெளிநாடு செல்வதற்கும் ஆட்சேபனை தெரிவித்துள்ளது. இருப்பினும், அமெரிக்கா, நெதர்லாந்து ஆகிய நாடுகளுக்கு ராபர்ட் வதேரா செல்ல கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது.

    இதற்கிடையே, லண்டன் உள்பட இங்கிலாந்தின் பல்வேறு நகரங்களில் ராபர்ட் வதேராவுக்கு வேறு சில சொத்துக்கள் இருப்பதாகவும் அமலாக்கத்துறைக்கு ஆதாரம் கிடைத்துள்ளது. குறிப்பாக, ரூ.45 கோடி மதிப்புள்ள வீடு, ரூ.36 கோடி மதிப்புள்ள வீடு மற்றும் 6 அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் ஆகியவற்றின் உரிமையாளர் ராபர்ட் வதேராவாக இருக்கலாம் என்று சந்தேகிக்கிறது. இவற்றை வாங்க சைப்ரஸ், துபாய் ஆகிய நாடுகளில் இருந்து ரகசிய பண பரிமாற்றம் நடந்ததையும் கண்டுபிடித்துள்ளது.



    ஆகவே, மேற்குறிப்பிட்ட சொத்துக்களின் உரிமையாளர்கள் யார்? அந்த சொத்துக்களை வாங்க எங்கிருந்து பணம் பரிமாற்றம் செய்யப்பட்டது? என்பன உள்ளிட்ட விவரங்களை தங்களுக்கு அளிக்குமாறு இங்கிலாந்து அமலாக்கத்துறைக்கு இந்திய அமலாக்கத்துறை வேண்டு கோள் விடுத்துள்ளது.

    இந்த விவரங்களின் அடிப்படையில், சொத்துக்களை முடக்கி வைக்க அமலாக்கத்துறை செயல் திட்டம் ஒன்றை வகுத்துள்ளது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்படும்.

    மேலும், வலுவான ஆதாரங்களை கொண்டு, ராபர்ட் வதேரா மீது வலுவான வழக்கை தொடுக்கவும் முடிவு செய்துள்ளது.

    இதன் ஒரு பகுதியாக, வெளிநாட்டுவாழ் இந்திய தொழிலதிபர் சி.சி.தம்பி என்பவரிடம் விசாரணை நடத்த அவருக்கு அமலாக்கத்துறை ‘சம்மன்’ அனுப்பி உள்ளது.

    அவர் ராபர்ட் வதேராவின் மாமியாரும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவருமான சோனியா காந்தியின் ஒரு உதவியாளர் மூலமாக ராபர்ட் வதேராவை நேரில் சந்தித்து அறிமுகம் ஆனவர். தலைமறைவான ஆயுத வியாபாரி சஞ்சய் பண்டாரியுடனும் இவருக்கு தொடர்பு உள்ளது.

    வழக்கில் சிக்கி உள்ள பிரையன்ஸ்டன் சதுக்கத்தில் இருக்கும் வீட்டில் ராபர்ட் வதேரா தங்கி இருந்ததை பார்த்ததாக இவர் ஏற்கனவே வாக்குமூலம் அளித்துள்ளார்.

    இந்த சொத்துக்கள் வாங்கப்பட்டதில் தம்பி சம்பந்தப்பட்டு இருப்பதாக அமலாக்கத்துறை கருதுகிறது.
    Next Story
    ×