search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சூரத் தீ விபத்து- போராட்டம் நடத்த முயன்ற ஹர்திக் பட்டேல் கைது
    X

    சூரத் தீ விபத்து- போராட்டம் நடத்த முயன்ற ஹர்திக் பட்டேல் கைது

    சூரத்தில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்த ஹர்திக் பட்டேல் கைது செய்யப்பட்டார்.
    சூரத்:

    குஜராத் மாநிலம் சூரத் நகரின் சர்தானா பகுதியில் உள்ள தக்சஷீலா காம்ப்ளக்ஸ் என்ற 4 மாடி கட்டிடத்தில், கடந்த வெள்ளிக்கிழமை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில், அங்குள்ள பயிற்சி வகுப்பில் இருந்த 22 மாணவ-மாணவிகள் உயிரிழந்தனர். தீ விபத்து குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், தீ விபத்து குறித்து சூரத் மேயர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது 12 மணி நேரத்திற்குள் நடவடிக்கை எடுக்காவிட்டால், உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக காங்கிரஸ் தலைவர் ஹர்திக் பட்டேல் எச்சரிக்கை விடுத்திருந்தார். 

    அவர் கூறியபடி, போராட்டம் நடத்துவதற்காக தீ விபத்து நடந்த இடத்திற்கு தனது ஆதரவாளர்களுடன் புறப்பட்டுச் சென்றார். ஆனால், அவரை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்து இச்சாபூர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இதுபற்றி சூரத் போலீஸ் கமிஷனர் சதீஷ் சர்மா கூறியதாவது:-

    தீ விபத்து ஏற்பட்ட இடத்தின் அருகே ஹர்திக் பட்டேல் போராட்டம் நடத்துவதற்கு காங்கிரஸ் சார்பில் சர்தானா காவல்  நிலையத்தில் அனுமதி கோரப்பட்டது. ஆனால், பாதுகாப்பு கருதி போராட்டத்திற்கு அனுமதி வழங்கப்படவில்லை. ஆனால், அதையும்  மீறி ஹர்திக் பட்டேல் புறப்பட்டுச் சென்றதால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

    தீ விபத்து நடந்த இடத்திற்கு நேற்று அவர் சென்றபோது, எதிர் தரப்பைச் சேர்ந்த ஒருவர் அவரை தாக்கியுள்ளார். இதனால் அவரது பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. அதனால் அந்த பகுதிக்கு அவரை செல்ல அனுமதிக்க முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×