search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ‘கிங் மேக்கர்’ ஆக ஆசைப்பட்ட மாநில கட்சி தலைவர்கள் ஆசை நிராசையானது
    X

    ‘கிங் மேக்கர்’ ஆக ஆசைப்பட்ட மாநில கட்சி தலைவர்கள் ஆசை நிராசையானது

    பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் மாநில கட்சி தலைவர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை அளித்துள்ளது. அத்துடன் கிங் மேக்கராக ஆகும் அவர்களின் ஆசை நிராசையாக மாறி போனது.
    புதுடெல்லி :

    பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு தனி பெரும்பான்மை பலம் கிடைக்க வாய்ப்பு இல்லை என்று இந்த மாத தொடக்கத்தில் தகவல்கள் வெளியானது.

    இதையடுத்து மாநில கட்சிகளின் ஆதரவு இல்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது என்று பரபரப்பாக பேசப்பட்டது.

    இதையடுத்து மாநில கட்சி தலைவர்களில் சிலர் கிங்மேக்கர்களாக மாற ஆசைப்பட்டு காய்களை நகர்த்தினார்கள். குறிப்பாக சந்திரபாபு நாயுடு கடந்த 2 வாரமாக மாநிலம் மாநிலமாக சென்று எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்து பேசினார்.

    ராகுல், மாயாவதி, அகிலேஷ் யாதவ், மம்தா பானர்ஜி, சரத்பவார், சீத்தாராம் யெச்சூரி, டி.ராஜா, அரவிந்த் கெஜ்ரிவால் என்று அவர் நிறைய பேரை சந்தித்து ஓரணியில் திரட்ட தீவிர முயற்சி செய்தார். காங்கிரஸ் தலைமையில் கூட்டணி ஆட்சி அமைத்து விட வேண்டும் என்பது அவரது இலக்காக இருந்தது.

    அதுபோல தெலுங்கானா முதல்-மந்திரி சந்திர சேகரராவும் மற்றொரு பக்கத்தில் காய்களை நகர்த்தினார். மம்தாபானர்ஜி, பினராயி விஜயன், நவீன் பட்நாயக், மு.க.ஸ்டாலின் ஆகியோரை சந்தித்து பேசினார்.



    3-வது அணியை உருவாக்கி மாநில கட்சி தலைவர் ஒருவரை பிரதமர் ஆக்க வேண்டும் என்பது அவரது இலக்காக இருந்தது. அவரது ஆசையெல்லாம் மம்தாபானர்ஜியை பிரதமர் ஆக்கி விட வேண்டும் என்று கிங்மேக்கர் போல ஆசைப்பட்டார்.

    இதற்கிடையே தேசிய வாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரும் கடந்த 2 தினங்களாக ஜெகன்மோகன் ரெட்டி, நவீன் பட்நாயக் ஆகியோரை தொடர்பு கொண்டு பேசி வந்தார். காங்கிரஸ் ஆட்சி அமைக்க அவர் கிங்மேக்கராக இருக்க வேண்டும் என்று நினைத்தார்.

    ஆனால் அவரது இலக்கும் தோல்வியில் முடிந்தது. இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் மாநில கட்சி தலைவர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி வைத்தியமாக மாறி உள்ளது.

    மாநில கட்சி தலைவர்களில் 90 சதவீதம் பேர் தோல்வியை சந்தித்து உள்ளனர். எதிர்பார்த்த அளவுக்கு அவர்களுக்கு வெற்றி கிடைக்கவில்லை.

    இதனால் கிங்மேக்கர்களின் ஆசை நிராசையாக மாறி போனது.
    Next Story
    ×