search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாஜக எம்.பி.க்கள் 25-ந்தேதி டெல்லிக்கு வர உத்தரவு
    X

    பாஜக எம்.பி.க்கள் 25-ந்தேதி டெல்லிக்கு வர உத்தரவு

    பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழ்களுடன் பாரதிய ஜனதா எம்.பி.க்கள் அனைவரும் 25-ந்தேதி டெல்லி வருமாறு அழைக்கப்பட்டுள்ளனர்.
    புதுடெல்லி:

    மத்தியில் மீண்டும் ஆட்சியை பிடித்துள்ள பா.ஜனதா நாடு முழுவதும் வெற்றியை கொண்டாடி வருகிறது.

    இதற்கிடையே பா.ஜனதா மூத்த தலைவர்கள் அடுத்த கட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

    பிரதமர் மோடி மற்றும் மத்திய மந்திரிகள் பதவி ஏற்பு விழாவை எப்போது நடத்துவது என்ற ஆலோசனை தொடங்கி உள்ளது. அனேகமாக அடுத்த வாரம் பதவி ஏற்பு விழா இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    கடந்த 2014-ம் ஆண்டு மோடி பதவி ஏற்ற போது தெற்கு ஆசிய நாட்டு தலைவர்களை அழைத்து இருந்தார். இந்த தடவை அந்த நடைமுறைகளில் மாற்றம் இருக்கும் என்று தெரிகிறது.

    தேர்தல் முடிவுகள் இன்று இரவுக்குள் முழுமையாக தெரிந்து விடும். அதன் பிறகு வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கு உரிய சான்றிதழ் வழங்கப்படும்.

    அந்த சான்றிதழ்களுடன் பாரதிய ஜனதா எம்.பி.க்கள் அனைவரும் 25-ந்தேதி டெல்லி வருமாறு அழைக்கப்பட்டுள்ளனர். எனவே வருகிற சனி அல்லது ஞாயிற்றுக்கிழமை பா.ஜனதா எம்.பி.க்கள் கூட்டம் டெல்லியில் நடைபெறும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

    பா.ஜனதா எம்.பி.க்கள் கூட்டத்தில் பிரதமராக ஒருமனதுடன் மோடி தேர்வு செய்யப்படுவார். அதற்கான ஆவணத்தில் பா.ஜனதா எம்.பி.க்கள் அனைவரும் கையெழுத்திடுவார்கள்.

    அந்த கடிதத்துடன் மோடி ஜனாதிபதியை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருவார். அதன் அடிப்படையில் ஜனாதிபதி அழைப்பு விடுப்பார். அதன் பிறகு டெல்லியில் புதிய அமைச்சரவை பதவி ஏற்பு விழா நடைபெறும்.

    கடந்த முறை மோடி அமைச்சரவையில் இடம் பெற்று இருந்த மூத்த தலைவர்களில் சிலர் இந்த மந்திரிசபையில் இடம் பெறமாட்டார்கள். அதுபோல சில மத்திய மந்திரிகள் வெற்றி வாய்ப்பை இழந்துள்ளனர். சில மத்திய மந்திரிகள் மீது மோடி அதிருப்தியில் உள்ளார்.

    எனவே கடந்த முறை மத்திய மந்திரி சபையில் இடம் பெற்றிருந்தவர்களில் பலர் இந்த தடவை இடம் பெற வாய்ப்பு இல்லை. முக்கிய இலாகாக்களுக்கு புதிய முகங்கள் பொறுப்பேற்க வாய்ப்பு உள்ளது.
    Next Story
    ×