search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெல்லியில் அமித்ஷா விருந்து - எடப்பாடி பழனிசாமி, பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்டோர் பங்கேற்பு
    X

    டெல்லியில் அமித்ஷா விருந்து - எடப்பாடி பழனிசாமி, பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்டோர் பங்கேற்பு

    எடப்பாடி பழனிசாமி, பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்களுக்கு பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா டெல்லியில் இன்று விருந்தளித்தார்.
    புதுடெல்லி:

    நாடாளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக நடைபெற்ற தேர்தல் நேற்று முன்தினம் முடிவடைந்தது. இந்த தேர்தலில் ஆளும் பாஜக தலைமையில் ஓர் அணியும், காங்கிரஸ் தலைமையில் மற்றொரு அணியும் போட்டியிட்டன.

    மற்ற கட்சிகளை பொறுத்தமட்டில் சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் போன்ற சில கட்சிகள் கூட்டணி அமைத்தும், பல கட்சிகள் தனித்தனியாகவும் களம் கண்டன.

    மத்தியில் ஆட்சி அமைக்க குறைந்தபட்சம் 272 இடங்களில் வெற்றி பெற வேண்டும். வருகிற 23-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்போதுதான் ஆட்சி அமைப்பது யார்? என்பது தெரியவரும்.

    இதற்கிடையே, தேர்தல் முடிவடைந்ததும் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாயின. அதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அறுதி பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் என்று கூறப்பட்டுள்ளது.

    இந்நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளின் தலைவர்களுக்கு பாஜக தேசிய தலைவர் அமித் ஷா டெல்லியில் இன்று விருந்தளித்தார்.



    டெல்லியில் உள்ள அசோகா ஓட்டலில் நடைபெற்ற இந்த விருந்தில் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

    பிரதமர் நரேந்திர மோடி, பீகார் மாநில முதல்-மந்திரியும், ஐக்கிய ஜனதாதள தலைவருமான நிதிஷ் குமார், மத்திய மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் (லோக் ஜனசக்தி), சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே உள்ளிட்டோர் விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

    தமிழகத்தில் இருந்து அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, தேமுதிகவின் பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், சுதீஷ், ஜி.கே.வாசன்,  சரத்குமார், ஏ.சி.சண்முகம், கிருஷ்ணசாமி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். மற்ற கூட்டணி கட்சிகளின் தலைவர்களும் விருந்தில் பங்கேற்றனர்.
    Next Story
    ×