search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பதியில் சுப்ரபாத சேவை டிக்கெட் தருவதாக 400 பக்தர்களிடம் மோசடி - வாலிபர் கைது
    X

    திருப்பதியில் சுப்ரபாத சேவை டிக்கெட் தருவதாக 400 பக்தர்களிடம் மோசடி - வாலிபர் கைது

    திருப்பதியில் சுப்ரபாத சேவை டிக்கெட் வாங்கி தருவதாக கூறி 400 பக்தர்களை மோசடி செய்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமலை:

    குண்டூர் மாவட்டம் வெங்கலபள்ளியை சேர்ந்த கார்த்திக் திருப்பதியில் தங்கி சுப்ரபாத சேவை டிக்கெட் வாங்கி தருவதாக பக்தர்களை ஏமாற்றி மோசடியில் ஈடுபட்டு வந்தார்.

    ஐதராபாத்தை சேர்ந்த சீனிவாசராவ் என்ற பக்தர் கடந்த 1-ந் தேதி கார்த்திக்கை தொடர்பு கொண்டு சுப்ரபாத டிக்கெட் வேண்டும் என கேட்டிருந்தார். சீனிவாசராவிடம் தன்னுடைய வங்கிக் கணக்கில் பணம் செலுத்தினால் டிக்கெட் வாங்கி தருகிறேன் என்று கார்த்திக் கூறினார்.

    இதையடுத்து கார்த்திக்கின் வங்கிக்கணக்கில் சீனிவாசராவ் 5 ஆயிரத்து 300 ரூபாயை செலுத்தினார்.

    ஆனால் திருமலைக்கு சீனிவாசராவ் வந்தபோது சுப்ரபாத சேவை டிக்கெட் வாங்கி கொடுக்காமல் கார்த்திக் ஏமாற்றிவிட்டார்.

    இதனால் அதிர்ச்சியடைந்த சீனிவாசராவ் திருமலையில் உள்ள தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரி ராமகிருஷ்ணாவிடம் கார்த்திக்கின் மோசடி குறித்து புகார் அளித்தார். திருமலை 2-வது நகர போலீஸ் நிலையத்தில் வழக்குபதிவு செய்யப்பட்டது.

    ஏ.எஸ்.பி. மகேஸ்வரராஜி, டி.எஸ்.பி. சிவராம ரெட்டி, இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணா மற்றும் போலீசார் கார்த்திக்கின் ஆதார் எண் மற்றும் செல்போன் எண் ஆகியவற்றின் அடிப்படையில் விசாரணை நடத்தினர்.

    கார்த்திக் குண்டூர், தெனாலி, ஏலூர் ஆகிய இடங்களில் நடமாடியது தெரியவந்தது. சப்-இன்ஸ்பெக்டர் தர்மாரெட்டி தலைமையில் போலீசார் கார்த்திக்கை தெனாலியில் கைது செய்து திருமலைக்கு அழைத்து வந்தனர்.

    அவரிடம் நடத்திய விசாரணையில் திருமலையில் உள்ள மடங்கள் மற்றும் இடைத்தரகர்களுடன் தொடர்பு வைத்துக் கொண்டு 400க்கும் மேற்பட்ட பக்தர்களை ஏமாற்றி வந்தது தெரியவந்தது.

    கார்த்திக்கின் பின்னணியில் வேறு யார், உள்ளனர் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. அவர்கள் மீதும் வழக்கு தொடரப்பட்டு கைது செய்யப்படுவார்கள் என போலீசார் தெரிவித்தனர்.

    Next Story
    ×