search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பதி கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு
    X

    திருப்பதி கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு

    கோடை விடுமுறையையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. இலவச தரிசன வரிசையில் பக்தர்கள் 20 மணி நேரம் காத்திருந்து சாமியை தரிசித்தனர்.
    திருமலை:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக வருகின்றனர். தற்போது கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது.

    குறிப்பாக கடந்த 2 நாட்களாக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. இதன் காரணமாக நேற்று முன்தினம் பக்தர்கள் ஒரு மணி நேரம் முன்னதாக தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். இலவச தரிசனத்திற்காக செல்லும் பக்தர்கள் வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸ் வழியாக அனுப்பி வைக்கப்படுவார்கள். சாதாரண நாட்களில் இலவச தரிசனத்திற்கு காலை 8 மணி முதல் பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். நேற்று முன்தினம் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் இருந்ததால் 1 மணி நேரம் முன்னதாக 7 மணி முதலே அனுமதிக்கப்பட்டனர்.

    இலவச தரிசனத்திற்காக அனுமதிக்கப்படும் 32 கியூ காம்ப்ளக்ஸ், பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. இதனால் அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் பக்தர்கள் கூட்டத்தை ஒழுங்கு படுத்தினர். சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் வரை வரிசையில் நின்றபக்தர்கள் 20 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்து விட்டு சென்றனர்.

    இதேபோல் ‘டைம்ஸ்லாட்’ தரிசன பக்தர்கள் 5 மணி நேரமும், ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட் பக்தர்கள் 5 மணி நேரமும் காத்திருந்து ஏழு மலையானை தரிசனம் செய்தனர். கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியதால் தங்கும் விடுதிகளும் நிரம்பின. நேற்று முன்தினம் ஒருநாள் மட்டும் 92 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். இதில் ‘டைம்ஸ்லாட்’ முறைப்படி 32 ஆயிரம் பக்தர்கள் ஏழுமலையானை தரிசித்தனர்.

    Next Story
    ×