search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    7 மாநிலங்களில் 59 பாராளுமன்ற தொகுதிகளில் இன்று ஓட்டுப்பதிவு
    X

    7 மாநிலங்களில் 59 பாராளுமன்ற தொகுதிகளில் இன்று ஓட்டுப்பதிவு

    6-வது கட்ட தேர்தல் 7 மாநிலங்களில் 59 பாராளுமன்ற தொகுதிகளில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஓட்டுப்பதிவு நடக்கிறது.
    புதுடெல்லி:

    இந்திய பாராளுமன்றத்துக்கு 7 கட்ட தேர்தல் அறிவிக்கப்பட்டு, 5 கட்ட தேர்தல்கள் நடந்து முடிந்து விட்டன. இன்று 6-வது கட்ட தேர்தல், 7 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளில் நடக்கிறது. இந்த தேர்தலில் 10 கோடியே 17 லட்சத்து 82 ஆயிரத்து 472 வாக்காளர்கள் ஓட்டுரிமை பெற்றுள்ளனர்.

    களத்தில் உள்ள 979 வேட்பாளர்களின் அரசியல் தலைவிதியை இவர்கள் நிர்ணயிப்பதற்காக 1 லட்சத்து 13 ஆயிரத்து 167 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

    இந்த வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், ‘விவிபாட்’ கருவிகள், அழியாத மை உள்ளிட்டவை போய்ச்சேர்ந்து விட்டன. வாக்குப்பதிவு அதிகாரிகளும், ஊழியர்களும் நேற்று இரவே தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளுக்கு போய் சேர்ந்துள்ளனர்.

    இந்த தேர்தல் தற்போது மத்தியில் ஆளுகிற பாரதீய ஜனதா கட்சிக்கு முக்கியமானதாகும். ஏனெனில் இன்று ஓட்டுப்பதிவு நடக்கிற 59 தொகுதிகளில் பாரதீய ஜனதா கட்சி 45 இடங்களையும், அதன் கூட்டணி கட்சிகளான அப்னா தளம், லோக்ஜனசக்தி ஆகியவை தலா ஒரு இடத்தையும் கைப்பற்றின என்பது குறிப்பிடத்தக்கது.

    காங்கிரஸ் கட்சி 2 இடங்களையும், சமாஜ்வாடி கட்சி, இந்திய தேசிய லோக்தளம் ஆகியவை தலா ஒரு இடத்தையும், திரிணாமுல் காங்கிரஸ் 8 இடங்களையும் கைப்பற்றி இருந்தன.

    இன்றைய தேர்தலில் பாரதீய ஜனதா கட்சிக்கு உத்தரபிரதேசம், மத்தியபிரதேசம் ஆகிய 2 மாநிலங்களும் சவாலாக அமைந்துள்ளன.

    உத்தரபிரதேசத்தில் கடந்த தேர்தலைப் போல இல்லாமல், இந்த தேர்தலில் பாரதீய ஜனதா கட்சிக்கு எதிராக சமாஜ்வாடி கட்சியும், பகுஜன் சமாஜ் கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. மத்திய பிரதேசத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு காங்கிரஸ் கட்சி அதிகாரத்துக்கு வந்திருக்கிறது.

    இன்று ஓட்டுப்பதிவு நடக்கிற தொகுதிகளில் முக்கிய தலைவர்கள் பலம் களம் காணுகின்றனர். பாரதீய ஜனதா கட்சி சார்பில் மத்திய மந்திரிகள் 6 பேர் இன்று தேர்தலை சந்திக்கின்றனர். அவர்கள் மேனகா காந்தி (உ.பி.- சுல்தான்பூர்), ஹர்சவர்த்தன் (டெல்லி- சாந்தினிசவுக்), ராதாமோகன் சிங் (பீகார்- பூர்வி சம்பரன்), நரேந்திரசிங் தோமர் (ம.பி.- மொரினா), கிருஷன்பால் குர்ஜார் (அரியானா- பரிதாபாத்), ராவ் இந்தர்ஜித் சிங் (அரியானா- குருகிராம்) ஆவர்.

    உத்தரபிரதேச மாநில முன்னாள் முதல்-மந்திரியும், சமாஜ்வாடி கட்சித்தலைவருமான அகிலேஷ் யாதவ் (அசம்கார்), காங்கிரஸ் மூத்த தலைவர்கள் திக்விஜய்சிங் (ம.பி. போபால்), ஜோதிர் ஆதித்ய சிந்தியா (ம.பி. குணா), டெல்லி முன்னாள் முதல்-மந்திரி ஷீலா தீட்சித் (டெல்லி - வடகிழக்கு டெல்லி) உள்ளிட்டவர்களும் இன்று தேர்தல் களத்தில் உள்ள முக்கிய தலைவர்கள் ஆவர். 59 தொகுதிகளிலும் நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு பிரசாரம் முடிந்தது.

    இன்று காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்குகிறது. மாலை 6 மணிக்கு ஓட்டுப்பதிவு முடிகிறது. தேர்தல் நடக்கிற 7 மாநிலங்களில் அந்தந்த மாநில போலீஸ் படையுடன், மத்திய படைகளும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

    கோடை வெயில் வறுத்தெடுத்தாலும் ஓட்டுப்பதிவு விறுவிறுப்பாக நடைபெறும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

    7-வது இறுதி கட்ட தேர்தல் 19-ந் தேதி 8 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளில் நடைபெறுகிறது. அத்துடன் பாராளுமன்ற தேர்தல் முடிவுக்கு வருகிறது.

    23-ந் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது. 
    Next Story
    ×