search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    6 மாதத்திற்கு பிறகு கேதார்நாத் கோவில் நடை திறப்பு- வேத மந்திரங்கள் முழங்க பக்தர்கள் தரிசனம்
    X

    6 மாதத்திற்கு பிறகு கேதார்நாத் கோவில் நடை திறப்பு- வேத மந்திரங்கள் முழங்க பக்தர்கள் தரிசனம்

    உத்தரகாண்டில் உள்ள கேதார்நாத் கோவில் நடை 6 மாதத்திற்கு பிறகு இன்று மீண்டும் திறக்கப்பட்டது. வேத மந்திரங்கள் முழங்க ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். #KedarnathTemple #CharDhamYatra
    டேராடூன்:

    இமயமலைத் தொடரில் புகழ்பெற்ற கேதார்நாத் சிவன் கோவில் அமைந்துள்ளது. உத்தரகாண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் உள்ள இந்த கோவில், கடல் மட்டத்தில் இருந்து 11,755 அடி உயரத்தில் உள்ளது. நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் யாத்திரையாக இக்கோவிலுக்கு வந்து தரிசனம் செய்கின்றனர். குளிர்காலங்களைத் தவிர மீதமுள்ள 6 மாதங்கள் மட்டும் கோவில் நடை திறக்கப்பட்டு பக்தர்களின் தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்படும்.

    அவ்வகையில் குளிர்காலம் முடிவடைந்துள்ள நிலையில், 6 மாதத்திற்குப் பிறகு இன்று கோவில் நடை திறக்கப்பட்டது. இதற்காக கோவில் வண்ணம் தீட்டப்பட்டு அலங்கரிக்கப்பட்டிருந்தது. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட நுழைவு வாயில், வேத மந்திரங்கள் முழங்க அதிகாலை 5.30 மணியளவில் திறக்கப்பட்டது. அப்போது கோவில் பூசாரிகள், நிர்வாகிகள் மற்றும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    இந்த ஆண்டு 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கேதார்நாத் கோவிலுக்கு வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கேதார்நாத் வரும் பக்தர்களின் வசதிக்காக மாநில அரசு விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது. இரவு நேரங்களில் சுமார் 3000 பக்தர்கள் தங்கும் வகையில், கூடாரங்கள் அமைக்கப்படுகின்றன.

    கோடை காலம் தொடங்கியபோதிலும், கேதார்நாத் கோவில் வளாகத்தில் இன்னும் பனிசூழ்ந்து காணப்படுகிறது. பக்தர்கள் கோவிலுக்கு எளிதில் சென்று வரும் வகையில், பனிக்கட்டிகளை அகற்றி பாதை அமைக்கப்பட்டுள்ளது.

    இமயமலையில் உள்ள கேதார்நாத் சிவன் கோவில், பத்ரிநாத் விஷ்ணு கோவில் மற்றும் கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகிய அம்மன் கோவில்களுக்கான, சார்தாம் யாத்திரை நேற்று முன்தினம் அட்சய திருதியை தினத்தில் தொடங்கியது. முதல் நாளில் கங்கோத்ரி கோவில் நடை காலை 11.30 மணிக்கு திறக்கப்பட்டது. மதியம் 1.15 மணிக்கு யமுனோத்ரி கோவில் நடை திறக்கப்பட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இன்று கேதார்நாத் கோவில் நடை திறக்கப்பட்டு வழிபாடு தொடங்கியிருக்கிறது. பத்ரிநாத் விஷ்ணு கோவில் நடை நாளை (9-ம் தேதி) திறக்கப்படுகிறது.



    ஒவ்வொரு ஆண்டும் இந்த சார்தாம் யாத்திரை காலங்களில் இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் இந்த 4 புனித தலங்களுக்கும் வந்து வழிபடுகின்றனர். யாத்ரீகர்கள் முதலில் யமுனோத்ரியில் வழிபாடு நடத்தி விட்டு அதன்பின்னர் கங்கோத்ரி, கேதார்நாத் தலங்களில் தரிசனம் செய்துவிட்டு, இறுதியாக பத்ரிநாத் வந்து விஷ்ணுவை வழிபட்டு யாத்திரையை நிறைவு செய்வார்கள். #KedarnathTemple #CharDhamYatra




    Next Story
    ×