search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மத்தியில் அடுத்து ஆட்சி அமைப்பதில் மாநில கட்சிகள் முக்கிய பங்கு வகிக்கும் - பினராயி விஜயன்
    X

    மத்தியில் அடுத்து ஆட்சி அமைப்பதில் மாநில கட்சிகள் முக்கிய பங்கு வகிக்கும் - பினராயி விஜயன்

    மத்தியில் அடுத்து ஆட்சி அமைப்பதில் மாநில கட்சிகள் முக்கிய பங்கு வகிக்கும் என கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் கூறினார். #PinarayiVijayan
    திருவனந்தபுரம்:

    தற்போது ஆளும் பா.ஜனதா கட்சி, ஏற்கனவே ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சி இல்லாமல், மாநில கட்சிகளைக்கொண்டு 3-வது அணியின் ஆட்சியை அமைக்க வேண்டும் என்பது தெலுங்கானா மாநில முதல்-மந்திரியும், தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் தலைவருமான சந்திரசேகரராவின் ஆசை.

    பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்பே இதுதொடர்பாக அவர் பல்வேறு மாநிலங்களுக்கு சென்று, மாநில கட்சித் தலைவர்களை சந்தித்து பேசினார்.

    இப்போது பாராளுமன்றத்துக்கு 7 கட்ட தேர்தல் அறிவித்து, 5 கட்ட தேர்தல் முடிந்து இன்னும் 2 கட்ட தேர்தல் நடக்க உள்ள நிலையில், இந்த முயற்சியை மீண்டும் கையில் எடுத்துள்ளார்.

    அவர் நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) திருவனந்தபுரம் சென்று அந்த மாநில முதல்-மந்திரியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான பினராயி விஜயனை சந்தித்து பேசினார். பூட்டிய அறைக்குள் 2 மணி நேரம் அவர்கள் ஆலோசனை நடத்தினர்.

    இந்தநிலையில், திருவனந்தபுரத்தில் பினராயி விஜயன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    சந்திரசேகரராவுடன் நடத்தியது முக்கியமான சந்திப்பு. நாங்கள் தேசிய அரசியல் நிலவரம் குறித்து விவாதித்தோம். பா.ஜனதா கட்சி கூட்டணியும், காங்கிரஸ் அணியும் ஆட்சி அமைப்பதற்கு தேவையான பெரும்பான்மை பலத்தை பெறாது என்பது அவரது கருத்து. எனவே மத்தியில் அடுத்து ஆட்சி அமைப்பதில் மாநில கட்சிகள் முக்கிய பங்கு வகிக்கும்.



    மாநில கட்சிகளின் நிலைப்பாடு, மாநிலங்களின் உரிமைகளைக் காப்பதுதான்.

    நமது நாட்டில் மத்திய அரசால் மாநில அரசுகள் ஓரங்கட்டப்படுகின்றன. கூட்டாட்சி முறை பலவீனப்படுத்தப்பட்டிருப்பதற்கு பல உதாரணங்களை சொல்ல முடியும். கூட்டாட்சி முறைதான் தொடர வேண்டும். மாநிலங்களை பாதிக்கிற முடிவுகளை மத்திய அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும்.

    பிரதமர் வேட்பாளர் பற்றி நாங்கள் விவாதிக்கவில்லை.

    பாராளுமன்ற தேர்தல் முடிவுகள், மத்தியில் அமைந்துள்ள பா.ஜனதா கட்சி அரசை வீழ்த்தும். இதில் சந்தேகமே இல்லை. அடுத்து அமைய உள்ள அரசு மதச்சார்பின்மையையும், கூட்டாட்சி முறையையும் காக்கும். அந்த இலக்கை நோக்கித்தான் காரியங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.

    இவ்வாறு அவர் கூறினார். #PinarayiVijayan
    Next Story
    ×