search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சந்திராயன்-2 விண்கலம் செப்.6-ந்தேதி நிலவில் தரை இறங்கும்: இஸ்ரோ விஞ்ஞானிகள் அறிவிப்பு
    X

    சந்திராயன்-2 விண்கலம் செப்.6-ந்தேதி நிலவில் தரை இறங்கும்: இஸ்ரோ விஞ்ஞானிகள் அறிவிப்பு

    நிலாவை ஆராய்ச்சி செய்ய சந்திராயன்-2 விண்கலம் செப்டம்பர் 6-ந்தேதி தரை இறங்கும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். #ISRO #Chandrayaan2
    பெங்களூர்:

    இந்தியா கடந்த 2008-ம் ஆண்டு நிலாவை ஆய்வு செய்வதற்காக சந்திராயன்-1 என்ற விண்கலத்தை அனுப்பியது.

    அந்த விண்கலம் நிலவின் மேற்பரப்பை சுற்றி வந்து ஆய்வு செய்தது. அப்போது நிலவில் தண்ணீர் இருப்பதற்கான ஆதாரங்களை உறுதி செய்து படம் எடுத்து அனுப்பியது. இதனால் ரூ.800 கோடி செலவில் அனுப்பப்பட்ட சந்திராயன்-1 திட்டம் வெற்றி பெற்றது.

    இதையடுத்து நிலாவை மேலும் ஆராய்ச்சி செய்ய சந்திராயன்-2 விண்கலம் திட்டத்துக்கு இஸ்ரோ முடிவு செய்தது. பல நூறு கோடி ரூபாய் செலவில் சந்திராயன்-2 விண்கலம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த விண்கலத்தை கடந்த ஆண்டே நிலாவுக்கு அனுப்ப இஸ்ரோ விஞ்ஞானிகள் முயற்சி செய்தனர்.

    ஆனால் கடந்த ஆண்டு மார்ச் மாதம் விண்ணில் செலுத்தப்பட்ட ஜிசாட்-6ஏ செயற்கை கோளின் தொடர்பு திடீரென துண்டிக்கப்பட்டது. இதன் காரணமாக சந்திராயன்-2 விண்கலத்தை ஏவும் திட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

    கடந்த ஆண்டு இறுதியில் இந்த விண்கலத்தை ஏவுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. பிறகு அதுவும் பல்வேறு காரணங்களால் ஒத்தி வைக்கப்பட்டன.

    இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் சந்திராயன்-2 விண்கலத்தை ஏவ நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் சந்திராயன்-2 விண்கலத்தில் சில மாற்றங்களை செய்ய விஞ்ஞானிகள் கடைசி நிமிடத்தில் முடிவு செய்ததால் அந்த திட்டமும் நிறைவேறவில்லை. இதனால் 3-வது முறையாக சந்திராயன்-2 விண்கலம் ஏவும் திட்டம் தடைப்பட்டது.

    இந்த நிலையில் சந்திராயன்-2 திட்டத்தை வருகிற ஜூலை மாதம் நிறைவேற்ற இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். ஜூலை மாதம் 9-ந்தேதி முதல் 16-ந் தேதிக்குள் சந்திராயன்-2 விண்கலம் விண்ணில் ஏவப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    சந்திராயன்-2 விண்ணில் ஏவப்பட்ட பிறகு முதலில் அது தனது சுற்றுவட்ட பாதையில் சுற்றி வரும். அதன் பிறகு நிலவின் சுற்றுப்பாதைக்கு அந்த விண்கலம் மாறும். அதன் பிறகு நிலவின் மேற்பரப்பில் அந்த விண்கலத்தின் ரோவர் வாகனம் தரை இறக்கப்படும்.

    செப்டம்பர் 6-ந்தேதி அல்லது அதற்கு முன்னதாக ரோவர் வாகனத்தை நிலாவில் தரை இறக்க இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர். சந்திராயன்-2 விண்கலம் ஆர்பிட்டர், லேண்டர், ரோவர் ஆகிய 3 நவீன சாதனங்களை கொண்டதாகும்.

    இதில் ஆர்பிட்டர் சாதனம் சந்திராயன்-2 விண்கலத்தை சுற்று பாதை மாற்றுவதற்கு உதவி செய்யும். லேண்டர் கருவி நிலாவில் தரை இறங்குவதற்கு உதவியாக இருக்கும். ரோவர் வாகனம் நிலாவின் மேற்பகுதியை ஆய்வு செய்யும்.

    சந்திராயன்-1 விண்கலம் திட்டம் நிலாவில் தண்ணீர் இருப்பதை கண்டுபிடிக்க உதவியது. உலக அளவில் அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகளுக்கு சவால் விடும் வகையில் இந்தியாவின் இஸ்ரோ விஞ்ஞானிகள் நிலாவில் தண்ணீர் இருப்பதற்கான சாத்தியகூறுகளை உறுதிப்படுத்தினார்கள்.

    சந்திராயன்-1 விண்கலம் அனுப்பிய 3-டி படங்கள் மிக மிக துல்லியமாக இருந்தன. உலக அளவில் நிலா பற்றிய ஆராய்ச்சிக்கு இந்த படங்கள் மிக உதவியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

    அதுபோல சந்திராயன்-2 விண்கலம் நிலாவில் உள்ள ஹீலியம்வாயு பற்றிய தகவல்களை துல்லியமாக கண்டுபிடித்து தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #ISRO #Chandrayaan2
    Next Story
    ×