search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராகுல்காந்தி பிரதமராக ஆதரவு தரவேண்டும்- சந்திரசேகரராவுக்கு காங்.கடிதம்
    X

    ராகுல்காந்தி பிரதமராக ஆதரவு தரவேண்டும்- சந்திரசேகரராவுக்கு காங்.கடிதம்

    மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைய சந்திரசேகரராவ் ஆதரவு அளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ரகுவீரரெட்டி கடிதம் எழுதியுள்ளது. #congress #chandrasekhararao #rahulgandhi

    அமராவதி:

    ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவர் ரகுவீரரெட்டி தெலுங்கானா முதல்வரும், தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சி தலைவரான சந்திரசேகரராவுக்கு கடிதம் ஒன்று எழுதி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு நீங்கள் ஆதரவு அளித்ததற்கு முதலில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

    சிறப்பு மாநில அந்தஸ்தை பா.ஜனதா நிராகரித்துள்ளது. பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று தான் பிரதமரானதும் ஆந்திராவுக்கு மாநில சிறப்பு அந்தஸ்துக்கு முதல் கையெழுத்து போடுவேன் என்று ராகுல்காந்தி வாக்குறுதி அளித்துள்ளார். எனவே, மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைய நீங்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அக்கடிதத்தில் கூறியுள்ளார்.

    இது தொடர்பாக ரகுவீரரெட்டி கூறும்போது, ஆந்திராவில் முக்கிய கட்சிகளான தெலுங்குதேசம், ஓய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் மற்றும் ஜனசேனாவிடம் மாநில சிறப்பு அந்தஸ்தை பெற காங்கிரசை ஆதரிக்க வேண்டும் என்று கேட்டு இருக்கிறேன்.

    அவர்கள் ஏற்கனவே மாநில சிறப்பு அந்தஸ்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். எனவே, மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைய ஆதரவு அளிக்க வேண்டுகோள் விடுத்துள்ளேன். தயவுசெய்து பா.ஜனதாவுக்கு ஆதரவு அளிக்காதீர்கள். மேலும் ஆந்திராவுக்கு அநீதி இழைத்துவிடாதீர்கள் என்றார்.

    கடந்த ஆண்டு நடந்த தெலுங்கானா சட்டமன்ற தேர்தலில் சந்திர சேகரராவின் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி மீண்டும் ஆட்சியை பிடித்தது.


    இதற்கிடையே ஆளும் கட்சிக்கு 11 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஆதரவாக செயல்பட்டு வருகிறார்கள். அவர்கள் தங்களை ராஷ்டீரிய சமிதி கட்சியில் இணைக்க வேண்டும் என்று சபாநாயகரிடம் மனு கொடுத்து உள்ளனர்.

    இந்த நிலையில் பஞ்சாயத்து தேர்தல்களில் உள்ளூர் எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள் வேட்பாளர்களை தேர்வு செய்ய வேண்டும் என்று முதல்வர் சந்திரசேகரராவ் உத்தரவிட்டார்.

    இந்த நிலையில் ஆளும் கட்சிக்கு ஆதரவாக உள்ள 11 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களிடம் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணி ஒப்படைக்கப்பட்டது. இது தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி தலைவர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் தங்களது ஆதரவாளர்களுக்கு தேர்தல் டிக்கெட் அளிப்பதாகவும், கட்சியில் நீண்ட காலம் இருப்பவர்களுக்கு டிக்கெட் மறுக்கப்படுகிறது என்றும் குற்றம் சாட்டியுள்ளனர்.

    இதனால் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சிக்குள் குழப்பம் நிலவுகிறது. இந்த பிரச்சினையை தீர்த்து வைக்க கட்சி தலைமை முயற்சி செய்து வருகிறது. #congress #chandrasekhararao #rahulgandhi

    Next Story
    ×