search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராகுல் காந்தி, இங்கிலாந்து குடியுரிமை பெற்றவரா? 15 நாளில் பதில் அளிக்க உள்துறை அமைச்சகம் நோட்டீஸ்
    X

    ராகுல் காந்தி, இங்கிலாந்து குடியுரிமை பெற்றவரா? 15 நாளில் பதில் அளிக்க உள்துறை அமைச்சகம் நோட்டீஸ்

    ராகுல் காந்தி, இங்கிலாந்து குடியுரிமை பெற்றவர் என சுப்பிரமணியசாமி புகார் செய்துள்ளார். அதன்மீது நடவடிக்கை எடுத்த உள்துறை அமைச்சகம், ராகுல் காந்தி 15 நாளில் பதில் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. #RahylGandhi #BritishCitizenship
    புதுடெல்லி:

    பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர், சுப்பிரமணியசாமி. இவர் சர்ச்சைகளுக்கு பெயர் பெற்றவர். இப்போது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இங்கிலாந்து குடியுரிமை பெற்றிருக்கிறார் என்ற பிரச்சினையை எழுப்பி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

    இதுதொடர்பாக அவர் மத்திய உள்துறை அமைச்சகத்திடம் புகார் செய்துள்ளார். அதன்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    ராகுல் காந்தியிடம் மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம் கேட்டு 14 பக்க நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அந்த நோட்டீசில் கூறி இருப்பதாவது:-

    சுப்பிரமணியசாமி எம்.பி., ஒரு புகார்மனுவை உள்துறை அமைச்சகத்தின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளார். அதன்படி, 2003-ம் ஆண்டு, இங்கிலாந்து நாட்டில் பேக்காப்ஸ் லிமிடெட் என்ற நிறுவனம், 51, சவுத்கேட் வீதி, வின்செஸ்டர், ஹேம்ப்ஷயர் என்னும் முகவரியுடன் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் நீங்கள் இயக்குனர்களில் ஒருவராகவும், செயலாளராகவும் இருந்துள்ளர்கள்.

    அந்த நிறுவனம், 2005-ம் ஆண்டு, அக்டோபர் மாதம் 10-ந்தேதியும், 2006-ம் ஆண்டு, அக்டோபர் 31-ந்தேதியும் வருமான வரி கணக்கு தாக்கல் செய்துள்ளது. இதில் நீங்கள் இங்கிலாந்து குடியுரிமை பெற்றவர் என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள்.

    மேலும் அந்த நிறுவனத்தை கலைப்பதற்கு அனுமதி கோரி 2009-ம் ஆண்டு, பிப்ரவரி 17-ந்தேதி தாக்கல் செய்துள்ள விண்ணப்பத்திலும் நீங்கள் இங்கிலாந்து குடியுரிமை பெற்றிருப்பதை தெரிவித்துஇருக்கிறீர்கள்.

    சுப்பிரமணியசாமியின் புகார், உரிய இணைப்புகளுடன் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

    இந்த நோட்டீஸ் கிடைக்கப்பெற்ற 15 நாட்களுக்குள், உண்மை நிலை என்ன என்பதை இந்த அமைச்சகத்துக்கு நீங்கள் தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதில் உள்துறை அமைச்சகத்தின் குடியுரிமை பிரிவு இயக்குனர் பி.சி. ஜோஷி கையெழுத்திட்டுள்ளார்.

    இதுதொடர்பாக ராகுல் காந்திக்கு பாரதீய ஜனதா கட்சி கேள்வி எழுப்பி உள்ளது.

    அந்தக் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா நிருபர்களிடம் பேசுகையில், “ராகுல் காந்தியின் குடியுரிமை தொடர்பாக கேள்விகள் எழுந்துள்ளன. நீங்கள் (ராகுல்காந்தி) ஒரு குழப்பத்தை ஏற்படுத்துகிறீர்கள் என்றால், அதற்கு நீங்கள்தான் விளக்கம் அளிக்க வேண்டும். இந்தக் கேள்விகள், அதிகாரப்பூர்வ ஆவணங்கள் அடிப்படையில் எழுந்துள்ளன” என குறிப்பிட்டார்.

    இதுதொடர்பாக ராகுல் காந்தியின் சகோதரியும், காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளருமான பிரியங்கா காந்தி, அமேதியில் நேற்று நிருபர்களிடம் பேசுகையில் கேள்வி எழுப்பப்பட்டது.

    அதற்கு பிரியங்கா காந்தி, “இத்தகைய சிரிக்கத்தக்க கருத்தை நான் ஒருபோதும் கேட்டது இல்லை. ராகுல் காந்தி ஒரு இந்தியர். அவர் இங்கேதான் பிறந்தார், வளர்ந்தார் என்பதை இந்த ஒட்டுமொத்த நாடும் அறியும்” என பதில் அளித்தார்.

    இதேபோன்று காங்கிரஸ் கட்சியின் தலைமை செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா கருத்து தெரிவிக்கையில், “ராகுல் காந்தி பிறப்பால் இந்தியர் என்பதை ஒட்டுமொத்த நாடும் அறியும். வேலையில்லா திண்டாட்டம், விவசாயிகளின் துயரம், கருப்புபணம் போன்றவற்றுக்கு பிரதமர் நரேந்திர மோடியிடம் பதில் இல்லை. அதனால்தான் அவர் கவனத்தை திசை திருப்புவதற்காக இத்தகைய போலியான கதை கட்டி தனது அரசின் மூலம் நோட்டீஸ் அனுப்ப வைக்கிறார்” என்று குறிப்பிட்டார்.

    தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் டி.பி. திரிபாதி எம்.பி., கருத்து தெரிவிக்கையில், “இந்த குடியுரிமை விவகாரம், ஏற்கனவே சுப்பிரமணியசாமியால் கிளப்பப்பட்ட பிரச்சினை. இப்போது வலுவான ஆதாரங்கள் இன்றி மீண்டும் எழுப்பி இருக்கிறார். திடீரென நாடாளுமன்ற தேர்தல்களுக்கு மத்தியில் இப்போது உள்துறை அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பி இருப்பது பாரதீய ஜனதா கட்சியின் சதிபோன்று தோன்றுகிறது” என குறிப்பிட்டார்.  #RahylGandhi #BritishCitizenship
    Next Story
    ×