search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேர்தல் பிரசாரத்தில் சாதியை பயன்படுத்துவதா? - பிரதமர் மோடிக்கு பிரியங்கா கண்டனம்
    X

    தேர்தல் பிரசாரத்தில் சாதியை பயன்படுத்துவதா? - பிரதமர் மோடிக்கு பிரியங்கா கண்டனம்

    தேர்தல் பிரசாரத்தில் தனது சாதியை பயன்படுத்தும் அளவுக்கு பிரதமர் மோடி கீழிறங்கி விட்டதாக பிரியங்கா குற்றம் சாட்டினார். #PriyankaGandhi #PMModi
    அமேதி:

    காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா, உத்தரபிரதேச மாநிலம் அமேதி தொகுதிக்குட்பட்ட முன்ஷிகஞ்ச் பகுதியில் நேற்று பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள் உள்ளிட்டோரின் குறைகளை கேட்க விரும்பாத நிலையில் பா.ஜனதாவினர் உள்ளனர். அவர்களின் தேசியவாதம் என்னவென்றே புரியவில்லை. விவசாயிகள் வெறும் காலுடன் உங்கள் வீட்டுக்கு வரும்போது, அவர்களின் குறைகளை கேட்க உங்களால் முடியவில்லை.



    வேலைவாய்ப்பு குறித்து இளைஞர்களுக்கு போலி வாக்குறுதி அளிக்கப்படுகிறது.

    உத்தரபிரதேசத்தில் பிரசாரத்தின்போது, பிரதமர் மோடி தனது சாதியை பயன்படுத்தி உள்ளார். அவர் என்ன சாதி என்று இப்போதுவரை எனக்கு தெரியாது. அதை தெரிந்து கொள்ளவும் நாங்கள் விரும்பவில்லை. எதிர்க்கட்சிகள், தேர்தல் பிரசாரத்தில் சாதியை பயன்படுத்தாமல், வளர்ச்சி பற்றியே பேசுகிறார்கள். தனிப்பட்ட விமர்சனம் செய்வது இல்லை. ஆனால், சாதி என்பது முக்கியமானது என்று நினைக்கும் அளவுக்கு பிரதமரை மாற்றியது எது? அந்த அளவுக்கு அவர் கீழிறங்கி விட்டார்.

    அமேதி தொகுதியில் போட்டியிடும் மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி, கடந்த 5 ஆண்டுகளில் வெறும் 16 தடவைதான் அமேதிக்கு வந்துள்ளார். ஒவ்வொரு தடவை வரும்போதும், 4 மணி நேரம் மட்டுமே இருப்பார்.

    பத்திரிகையாளர்களை தன்னுடன் அழைத்து வந்து, மக்களுக்கு சேலை, காலணி உள்ளிட்ட பொருட்களை வழங்கி விட்டு செல்வார்.

    அமேதி மக்கள் சுயமரியாதை கொண்டவர்கள். தங்களை பிச்சைக்காரர்கள் என்று நினைப்பவர்களை அவர்கள் ஆதரிக்க மாட்டார்கள் என்று எங்களுக்கு தெரியும்.

    நான் எப்போது இங்கே வந்தாலும், மக்களின் பிரச்சினைகளை தீர்க்கவே முயற்சிப்பேன். அமேதியை எங்கள் வீடாகவும், அமேதி மக்களை எங்கள் குடும்ப உறுப்பினர்களாகவுமே நாங்கள் நடத்துகிறோம்.

    இவ்வாறு பிரியங்கா பேசினார்.
    Next Story
    ×