search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கடின உழைப்பால் மக்கள் ஈட்டிய பணம், மோடியின் பிரசாரத்துக்கு பயன்படுத்தப்படுகிறது - ராகுல் காந்தி குற்றச்சாட்டு
    X

    கடின உழைப்பால் மக்கள் ஈட்டிய பணம், மோடியின் பிரசாரத்துக்கு பயன்படுத்தப்படுகிறது - ராகுல் காந்தி குற்றச்சாட்டு

    கடின உழைப்பால் மக்கள் ஈட்டிய பணம் பிரதமர் மோடியின் பிரசாரத்துக்கு பயன்படுத்தப்படுவதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். #RahulGandhi #PMModi #LokSabhaCampaign
    ஆக்ரா:

    பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து கட்சித்தலைவர் ராகுல் காந்தி நாடு முழுவதும் தீவிர பிரசாரம் செய்து வருகிறார். இதில் நேற்று அவர் உத்தரபிரதேசத்தின் பதேபூர் சிக்ரி தொகுதி வேட்பாளரும், மாநில கட்சித்தலைவருமான ராஜ் பப்பரை ஆதரித்து பிரசாரம் செய்தார்

    அப்போது அவர் பிரதமர் மோடியையும், அவரது பிரசார செலவினங்களையும் கடுமையாக தாக்கி பேசினார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

    சமீப காலமாக நீங்கள் தொலைக்காட்சிகளை பார்த்தால் பிரதமர் மோடியைத்தான் உங்களால் பார்க்க முடியும். ரேடியோவை சுவிட்ச் ஆன் செய்தால், பிரதமர் மோடி தனது வேட்பாளர்களுக்காக பிரசாரம் செய்கிறார். சாலைகளில் கூட மோடியின் பிரசார சாதனங்கள்தான் நிறைந்து காணப்படுகின்றன. தொலைக்காட்சியில் 30 நிமிட விளம்பரத்துக்கு லட்சக்கணக்கான ரூபாய் செலவிடப்படுகிறது.



    பிரதமரின் இத்தகைய பிரசாரத்துக்கு யார் பணம் கொடுக்கிறார்கள்? என்று யாருக்கும் தெரியாது. மோடி, தனது பாக்கெட்டில் இருந்து கொடுப்பதில்லை. வெறும் விளம்பரத்துக்காக இப்படி கோடிக்கணக்கில் செலவழிப்பதற்கு பணம் எங்கிருந்து வருகிறது என்று நீங்கள் நினைத்து பார்த்தது உண்டா?

    மக்கள் கடின உழைப்பால் ஈட்டிய பணம்தான் இதற்கெல்லாம் பயன்படுத்தப்படுகிறது. பொதுமக்களின் பணம் இவ்வாறு விளம்பரத்துக்காக பயன்படுத்தப்படுவது மட்டுமின்றி, அம்பானி, மெகுல் சோக்சி போன்ற தொழிலதிபர்களுக்கும் வழங்கப்படுகிறது. விவசாயிகளின் வளர்ச்சியை விட தொழிலதிபர்களுக்குத்தான் பா.ஜனதா அரசு முக்கியத்துவம் கொடுக்கிறது.

    ஆனால் காங்கிரஸ் ஆட்சியில் உத்தரபிரதேசத்தில் விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஷ்கார் போன்ற மாநிலங்களில் தேர்தலின் போது விவசாயிகளுக்காக கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் 10 நாட்களில் நிறைவேற்றப்பட்டன. அந்த மாநிலங்களில் விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டன.

    இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.

    இதைப்போல குஜராத்தின் மகுவா பகுதியிலும் நேற்று ராகுல்காந்தி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது ரபேல் விவகாரம் தொடர்பாக மோடி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கினார்.

    இதுதொடர்பாக அவர் கூறுகையில், ‘பிரான்சிடம் இருந்து 126 ரபேல் விமானங்கள் வாங்குவதற்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது ஒப்பந்தம் போடப்பட்டது. இந்த விமானங்களை மத்திய அரசின் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனம் இணைந்து தயாரிப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது. ஆனால் அனில் அம்பானிக்காக இந்த ஒப்பந்தத்தையே மோடி மாற்றிவிட்டார். விமானங்களுக்கு காங்கிரஸ் ஆட்சியில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலை கொடுப்பதுடன், மொத்த விமானங்களின் எண்ணிக்கையையும் 36 ஆக குறைத்து விட்டார். இதன் மூலம் அனில் அம்பானிக்கு ரூ.30 ஆயிரம் கோடி கிடைத்துள்ளது’ என்று தெரிவித்தார்.  #RahulGandhi #PMModi #LokSabhaCampaign
    Next Story
    ×