search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    91 பாராளுமன்ற தொகுதிகளில் இன்று ஓட்டுப்பதிவு - 4 மாநில சட்டசபை தேர்தலிலும் வாக்குப்பதிவு
    X

    91 பாராளுமன்ற தொகுதிகளில் இன்று ஓட்டுப்பதிவு - 4 மாநில சட்டசபை தேர்தலிலும் வாக்குப்பதிவு

    பாராளுமன்ற தேர்தலில் முதல் கட்டமாக இன்று (வியாழக்கிழமை) 91 தொகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் ஓட்டுப்பதிவு நடக்கிறது. 4 மாநில சட்டசபை தேர்தலிலும் வாக்குப்பதிவு நடக்கிறது. #LokSabhaElection
    புதுடெல்லி:

    நாடு முழுவதும் உள்ள 543 பாராளுமன்ற தொகுதிகளுக்கு இன்று (ஏப்ரல் 11-ந் தேதி) தொடங்கி அடுத்த மாதம் 19-ந் தேதி வரை ஏழு கட்ட தேர்தல் நடத்தப்படுகிறது. மேலும், ஆந்திரா, அருணாசல பிரதேசம், சிக்கிம், ஒடிசா ஆகிய 4 மாநில சட்டசபைகளுக்கும் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

    முதல் கட்டமாக 20 மாநிலங்களில் 91 தொகுதிகளில் முதல் கட்ட ஓட்டுப்பதிவு இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது.

    அந்த வகையில், ஆந்திராவில் 25, அருணாசலபிரதேசத்தில் 2, அசாமில் 5, பீகாரில் 4, சத்தீஷ்காரில் 1, காஷ்மீரில் 2, மராட்டியத்தில் 7, மணிப்பூரில் 1, மேகாலயாவில் 2, மிசோரமில் 1, நாகலாந்தில் 1, ஒடிசாவில் 4, சிக்கிமில் 1, தெலுங்கானாவில் 17, திரிபுராவில் 1, உத்தரபிரதேசத்தில் 8, உத்தரகாண்டில் 5, மேற்கு வங்காளத்தில் 2, லட்சத்தீவுகளில் 1, அந்தமான் நிகோபார் தீவுகளில் 1 தொகுதிகளில் முதல் கட்ட தேர்தல் நடக்கிறது.



    பாராளுமன்ற தேர்தலைப் பொறுத்தமட்டில் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த மத்திய மந்திரிகள் வி.கே.சிங் (காசியாபாத்), சத்யபால் சிங் (பாக்பத்), மகேஷ் சர்மா (கவுதம்புத்த நகர்) ஆகியோர் உத்தரபிரதேச மாநிலத்தில் இருந்து முதல் கட்ட தேர்தலை சந்திக்கின்றனர். ராஷ்டிரீய லோக்தளம் கட்சி தலைவர் அஜித் சிங்கும், முசாப்பர்நகரில் முதல் கட்ட தேர்தலை சந்திக்கிறார்.

    ஆந்திர மாநிலத்தில் இருந்து முன்னாள் மத்திய மந்திரிகள் கிஷோர் சந்திர தேவ் (அரக்கு), அசோக் கஜபதி ராஜூ ஆகிய இருவரும் தெலுங்குதேசம் கட்சி சார்பில் முதல் கட்ட தேர்தலை எதிர்கொள்கிறார்கள்.

    மற்றொரு முன்னாள் மத்திய மந்திரி புரந்தேசுவரி, விசாகப்பட்டினம் தொகுதியில் பா.ஜனதா கட்சி சார்பில் இன்று நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்கிறார்.

    தெலுங்கானாவில் முதல்-மந்திரி சந்திரசேகரராவின் மகள் கவிதா, நிஜாமாபாத் தொகுதியில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி சார்பிலும், முன்னாள் மத்திய மந்திரி ரேணுகா சவுத்ரி, காங்கிரஸ் வேட்பாளராக கம்மம் தொகுதியிலும், ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி தலைவர் ஒவைசி ஐதராபாத்திலும் முதல் கட்ட தேர்தலை சந்திக்கிறார்கள்.

    மராட்டிய மாநிலத்தில் முதல் கட்ட தேர்தலை சந்திக்கிற தலைவர்களில் மத்திய மந்திரி நிதின் கட்காரி (நாக்பூர்), முன்னாள் மத்திய மந்திரியும், காங்கிரஸ் தலைவருமான சுஷில்குமார் ஷிண்டே (சோலாப்பூர்) முக்கியமானவர்கள் ஆவார்கள்.

    சட்டசபை தேர்தலில் ஆந்திரா, அருணாசல பிரதேசம், சிக்கிம் ஆகிய 3 மாநிலங்களில் அனைத்து தொகுதிகளிலும் இன்று ஒரே நாளில் ஓட்டுப்பதிவு நடக்கிறது.

    ஒடிசாவை பொறுத்தவரையில் முதல் கட்ட தேர்தலை சந்திக்கிற 4 பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட சட்டசபை தொகுதிகளில் மட்டும் இன்று முதல் கட்ட தேர்தல் நடக்கிறது.

    கடந்த முறை பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட தெலுங்கு தேசம் இந்த முறை தனியாக தேர்தலை சந்திக்கிறது.

    முதல்-மந்திரியும், தெலுங்குதேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு (குப்பம்), அவரது மகன் நரலோகேஷ் (மங்களகிரி), ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டி (புலிவந்துலா), ஜனசேனா தலைவர் நடிகர் பவன் கல்யாண் (பீமாவரம், குஜூவாகா) ஆகியோரின் அரசியல் எதிர்காலம் இன்று நிர்ணயிக்கப்படுகிறது.

    சந்திரபாபு நாயுடு, ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டி, பவன் கல்யாண் ஆகிய மூவரில் யார் ஆந்திராவை ஆளப்போகிறார்கள் என்பதை ஆந்திர மக்கள் இன்று ஓட்டு போட்டு முடிவு செய்கிறார்கள்.

    91 பாராளுமன்ற தொகுதிகளிலும், ஆந்திரா, அருணாசல பிரதேசம், சிக்கிம், ஒடிசா சட்டசபை தேர்தலிலும் நேற்று முன்தினம் மாலை அனல் பறக்கும் பிரசாரம் முடிந்தது. இன்று (வியாழக்கிழமை) ஓட்டுப்பதிவு நடப்பதையொட்டி விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    உத்தரபிரதேசம், காஷ்மீர், மேற்கு வங்காளம், அந்தமான், லட்சத்தீவுகளில் காலை 7 மணிக்கு தொடங்கும் ஓட்டுப்பதிவு மாலை 6 மணிக்கு முடிகிறது.

    ஆந்திராவில் அரக்கு பாராளுமன்ற தொகுதி, அதற்குட்பட்ட சட்டசபை தொகுதிகளை தவிர்த்து பிற இடங்களில் காலை 7 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு முடிகிறது. அரக்கு பாராளுமன்ற தொகுதி, அதற்குட்பட்ட சட்டசபை தொகுதிகளில் சில இடங்களில் காலை 7 மணி முதல் 5 மணி வரையில் ஓட்டுப்பதிவு நடக்கிறது. அங்கு ஒரு சில இடங்களில் மட்டும் மாலை 4 மணிக்கு ஓட்டுப்பதிவு முடிந்து விடும்.

    உத்தரகாண்ட் மாநிலத்தில் காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரையிலும் ஓட்டுப்பதிவு நடக்கிறது.

    ஒடிசா, பீகார், சத்தீஷ்கார், ஆந்திரா, தெலுங்கானா, மராட்டியம் ஆகிய மாநிலங்களில் ஓட்டுப்பதிவு 7 மணிக்கு தொடங்கினாலும், முடிவது மாலை 3 மணி முதல் 5 மணி வரை இடத்துக்கு தக்கவாறு அமைகிறது. நக்சலைட்டுகள் ஆதிக்கம் அதிகம் உள்ள மாநிலங்கள் என்பதால் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    வட கிழக்கு மாநிலங்களான அசாம், அருணாசல பிரதேசம், மிசோரம், சிக்கிம், திரிபுரா, மணிப்பூர், நாகலாந்து, மேகாலயா ஆகிறவற்றில் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரையில் வாக்குப்பதிவு இடைவெளியின்றி தொடர்ந்து நடக்கிறது.

    பாராளுமன்ற முதல் கட்ட தேர்தலையும், சட்டசபை தேர்தலையும் சந்திக்கிற தொகுதிகளில் மின்னணு ஓட்டு எந்திரங்கள், ஒப்புகை சீட்டு வழங்கும் எந்திரங்கள் (விவிபாட்), வாக்குச்சாவடிகளுக்கு போய்ச்சேர்ந்து விட்டன.

    தமிழகம், புதுவை உள்ளிட்ட 13 மாநிலங்களில் 97 பாராளுமன்ற தொகுதிகளில் 2-வது கட்ட தேர்தல் 18-ந் தேதி நடக்கிறது.

    இந்த தேர்தலுடன் தமிழகத்தில் 18 சட்டசபை தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×