search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பா.ஜனதா தேர்தல் அறிக்கை இன்று வெளியீடு - அருண் ஜெட்லி தகவல்
    X

    பா.ஜனதா தேர்தல் அறிக்கை இன்று வெளியீடு - அருண் ஜெட்லி தகவல்

    பா.ஜனதா தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்படும் என மத்திய மந்திரி அருண் ஜெட்லி கூறினார். #ArunJaitley #BJP
    புதுடெல்லி:

    பா.ஜனதா தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்படும் என மத்திய மந்திரி அருண் ஜெட்லி கூறினார். இதில் மக்களை கவரும் அறிவிப்புகள் இருக்குமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.

    காங்கிரஸ் கட்சி தன்னுடைய தேர்தல் அறிக்கையில் ஏழைகளுக்கு ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம் வழங்கப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டது. பா.ஜனதா தேர்தல் அறிக்கை எப்போது வரும்? என்று எதிர்க்கட்சிகள் கிண்டல் செய்து வருகின்றன. அதே சமயம் மக்களை கவரும் அறிவிப்புகள் தேர்தல் அறிக்கையில் வருமா? என எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.

    இந்நிலையில் டெல்லியில் ‘மத்தியில் மீண்டும் மோடி அரசு’ என்ற தலைப்பில் பா.ஜனதாவின் தேர்தல் பிரசார பாடலை மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி நேற்று வெளியிட்டார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    எங்களின் பிரசார பாடல் 3 வகையாக பிரிக்கப்பட்டு உள்ளது. அதில் முதல் கருத்தாக, தேர்தல் வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றியதை கூறியிருக்கிறோம். 2-வது கருத்தாக ஊழலற்ற, நேர்மையான ஆட்சி நடத்தியதை தெளிவுபடுத்தி உள்ளோம். 3-வது கருத்தாக நாட்டின் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பை கருத்தில் கொண்டும், ஊழல், கருப்பு பணத்துக்கு எதிராக அதிரடி நடவடிக்கைகளை எடுத்து இருப்பதை சுட்டிக்காட்டி இருக்கிறோம்.

    சில கட்சிகள் தங்களின் தேர்தல் அறிக்கையை நம்பியே தேர்தல் களத்தில் இறங்கி உள்ளன. ஆனால் நாங்கள் கடந்த 5 ஆண்டுகள் செய்த சாதனைகள் மற்றும் நிறைவேற்றிய வாக்குறுதிகளை கூறி ஓட்டு கேட்டு வருகிறோம்.

    வறுமையை ஒழிப்போம் என கடந்த 1951-ம் ஆண்டு முதல் காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையில் கூறி வருகிறது. ஆனால் 70 ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னமும் அதை தேர்தல் அறிக்கையாக வெளியிட்டு வருகிறதே தவிர, வறுமையை இதுவரை அந்த கட்சி ஒழித்தது இல்லை. ஆனால் நாங்கள் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் முன்னேற்றத்துக்காக பாடுபட்டு வருகிறோம்.

    நடுத்தர மக்களின் நலனுக்காக வருமான வரி சலுகை அளித்து உள்ளோம். ஜி.எஸ்.டி.யை குறைத்து இருக்கிறோம். இந்திய நடுத்தர மக்களின் முன்னேற்றம் வரும் காலத்தில் சர்வதேச பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும். அதை சீனா ஏற்கனவே செய்து காட்டி உள்ளது. ஆனால் அதே சமயம் நடுத்தர மக்கள் முன்னேற்றம் குறித்து காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் எதுவும் கூறவில்லை என்பதை குறிப்பிட விரும்புகிறேன்.

    மத்தியில் தொங்கு பாராளுமன்றம் அமைய வேண்டும் என எதிர்க்கட்சிகள் விரும்புகின்றன. ஒரு கேப்டனை கொண்ட கட்சியின் ஆட்சி வேண்டுமா? 40 கேப்டன்களை கொண்ட கட்சியின் ஆட்சி வேண்டுமா? என்பதில் மக்கள் தெளிவாக உள்ளனர்.

    கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலை போலவே இந்த தேர்தலிலும் பா.ஜனதா பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும். அதன் முன்னோட்டமாக எங்கள் தேர்தல் அறிக்கை இன்று (திங்கட்கிழமை) வெளியிடப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது மத்திய மந்திரி பியூஸ் கோயல் மற்றும் பா.ஜனதா நிர்வாகிகள் உடன் இருந்தனர். #ArunJaitley #BJP
    Next Story
    ×