search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நேஷனல் ஹெரால்டு பத்திரிகை அலுவலகத்தை காலி செய்யும் உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட் இன்று தடை
    X

    நேஷனல் ஹெரால்டு பத்திரிகை அலுவலகத்தை காலி செய்யும் உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட் இன்று தடை

    காங்கிரஸ் கட்சியின் நிர்வாகத்தின்கீழ் டெல்லியில் உள்ள நேஷனல் ஹெரால்டு பத்திரிகை அலுவலகத்தை காலி செய்யும் டெல்லி ஐகோர்ட்டின் உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட் இன்று தடை விதித்தது. #NationalHeraldcase #SCstays #DelhiHC #AJLbuilding
    புதுடெல்லி:

    முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு கடந்த 1937-ம் ஆண்டில் ஏஜெஎல் என்ற நிறுவனத்தை தொடங்கினார். நேஷனல் ஹெரால்டு என்ற ஆங்கில பத்திரிகை, நவஜீவன் என்ற இந்தி பத்திரிக்கை, குவாமி என்ற உருது பத்திரிக்கைகளை தொடங்கி நடத்தும் நோக்கத்துக்காக உருவாக்கப்பட்ட இந்நிறுவனத்துக்காக அரசு நிலம் கடந்த 1962-ம் ஆண்டு குத்தகைக்கு எடுக்கப்பட்டது. 

    டெல்லியில் உள்ள பகதூர் ஷா ஜாபர் மார்க் பகுதியில் உள்ள 5-ஏ எண் கொண்ட காலிமனையில் சுமார் 14,650 சதுரடி பரப்பளவு கொண்ட அரசுக்கு சொந்தமான நிலம் அசோசியேட்டட் ஜர்னல்ஸ் நிறுவனத்துக்கு ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாய்க்கு ஒதுக்கப்பட்டது.

    இந்த  ஏஜெஎல் நிறுவனத்துக்கு காங்கிரஸ் ரூ.90 கோடி வட்டியில்லா கடன் கொடுத்திருந்தது. அதை ஏஜெஎல் நிறுவனம் திருப்பிச் செலுத்தவில்லை. கடந்த 2008-ம் ஆண்டுக்குப்பின் இந்த பத்திரிகைகள் எதுவும் வெளிவரவில்லை. 

    இந்நிலையில், யங் இந்தியா என்ற நிறுவனம் கடந்த 2010-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதில் முக்கால்வாசி பங்கு சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுலிடம் உள்ளது. இந்நிறுவனம் ரூ.50 லட்சம் கொடுத்து ஏஜெஎல் நிறுவனத்தின் பங்குகள் அனைத்தையும் மாற்றிக் கொண்டது. இதன் மூலம், டெல்லி ஐபிஓ வளாகத்தில் உள்ள நேஷனல் ஹெரால்டு கட்டிடம் உட்பட பல கோடி மதிப்பிலான சொத்துக்கள் யங் இந்தியா நிறுவனத்துக்கு மாற்றப்பட்டன. 
     
    சோனியா காந்தி, ராகுல் காந்தி, மோதிலால் வோரா, ஆஸ்கர் பெர்னான்டஸ் ஆகியோர் பங்குதாரர்களாக இருக்கும் யங் இந்தியன் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், வெறும் 50 லட்சம் ரூபாய் மட்டுமே செலுத்தி அந்த நிறுவனத்தை கையகப்படுத்தி விட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. அந்த நிறுவனத்தின் தற்போதைய சொத்து மதிப்பு 2 ஆயிரம் கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.

    அரசு ஒதுக்கீடு செய்த மேற்கண்ட நிலத்தில் உள்ள 5 மாடி கட்டிடடத்தில் 4 மாடிகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டது. யங் இந்தியன் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் இந்த சொத்தின் மூலம் பல கோடி ரூபாய் வாடகை சம்பாதித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.



    குத்தகை விதிமுறைகளை மீறி  யங் இந்தியன் என்ற நிறுவனம் தற்போது வர்த்தக பயன்பாட்டுக்கு அரசு நிலத்தை பயன்படுத்துவதால், இதன் 56 ஆண்டு குத்தகையை முடித்துக் கொள்வதாகவும், இந்த இடத்தை 15-11-2018-க்குள் ஒப்படைக்க வேண்டும் என மத்திய அரசின் நிலம் மற்றும் மேம்பாட்டு அலுவலகம் கடந்த ஆண்டு அக்டோபர் 30-ம் தேதி உத்தரவிட்டது. 

    இதற்கிடையில், நேஷனல் ஹெரால்டு பத்திரிகைக்கு சொந்தமான நிலம் மற்றும் சொத்துக்களை ஒப்பந்த விதிகளை மீறி, முறைகேடாக கையகப்படுத்தியதாக, சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி உள்ளிட்டோர் மீது பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியசாமி டெல்லி பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 

    இதைதொடர்ந்து, அந்த இடத்தை மத்திய அரசை சேர்ந்த அதிகாரிகள் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஆய்வு செய்தனர். பத்திரிகை அச்சடிப்பதற்காக தரைதளத்தில் வைக்கப்பட்டிருந்த அச்சு இயந்திரம் அகற்றப்பட்டிருந்தது.

    அச்சடிக்க தேவையான தாள்களும் அங்கு கையிருப்பில் இல்லை. நிர்வாக அலுவலகங்கள் இயங்கிவந்த நான்குமாடி பகுதிகளிலும் பத்திரிகை நிர்வாகம் தொடர்பான பணிகள் ஏதும் நடைபெறவில்லை. எனவே, பத்திரிகை நடத்துவதற்காக என்று ஒதுக்கீடு செய்த அரசு நிலம் முறைகேடாக, தகாத முறையில் பயன்படுத்தப்படுவதாக அதிகாரிகள் கண்டறிந்தனர்.

    இதுதொடர்பாக, விளக்கம் அளிக்குமாறு மத்திய அரசு சார்பில் கடந்த ஜூன் மற்றும் செப்டம்பரில் அனுப்பப்பட்ட இரு நோட்டீஸ்களுக்கு தகுந்த பதில் வரவில்லை என மத்திய புறநகர் மற்றும் வீட்டுவசதி அமைச்சகம் தெரிவித்தது. 

    எனவே, அந்த இடத்தை காலிசெய்து அரசிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டு கடந்த அக்டோபர் மாதம் யங் இந்தியன் பிரைவேட் லிமிடெட்  நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியது. 

    இந்த உத்தரவை எதிர்த்து மேற்படி நிறுவனம் தொடர்ந்த வழக்கில் நேற்று தீர்ப்பளித்த டெல்லி உயர்நீதிமன்றம், யங் இந்தியன் நிறுவனம் இன்னும் இரு வாரங்களுக்குள் அந்த இடத்தை காலிசெய்து அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.

    டெல்லி ஐகோர்ட்டின் உத்தரவை எதிர்த்து காங்கிரஸ் கட்சி சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை இன்று விசாரித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு மேற்படி இடத்தை காலி செய்ய வேண்டும் என்ற டெல்லி ஐகோர்ட்டின் உத்தரவுக்கு தடை விதித்துள்ளது. #NationalHeraldcase #SCstays #DelhiHC #AJLbuilding
    Next Story
    ×