search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாராளுமன்ற தேர்தல் - நாடு முழுவதும் ரூ.540 கோடி ரொக்கம், மது, பரிசுப்பொருட்கள் சிக்கின
    X

    பாராளுமன்ற தேர்தல் - நாடு முழுவதும் ரூ.540 கோடி ரொக்கம், மது, பரிசுப்பொருட்கள் சிக்கின

    பாராளுமன்ற தேர்தலையொட்டி நாடு முழுவதும் நடத்தப்பட்ட சோதனைகளில் ரூ.540 கோடி ரொக்கம், மது, பரிசுப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன. இதில் தமிழகம் ரூ.107 கோடியுடன் முதல் இடத்தை பிடித்துள்ளது.
    புதுடெல்லி:

    பாராளுமன்றத்துக்கும், ஆந்திரா, ஒடிசா, சிக்கிம், அருணாசலபிரதேசம் ஆகிய 4 மாநில சட்டசபைகளுக்கும் தேர்தலை கடந்த 10-ந் தேதி தேர்தல் கமிஷன் அறிவித்தது.

    இந்த தேர்தல்கள் ஏப்ரல் 11-ந் தேதி தொடங்கி மே மாதம் 19-ந் தேதி வரை 7 கட்டங்களாக நடத்தப்படுகின்றன. மே மாதம் 23-ந் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது.

    தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்ட நாள் முதல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

    இந்த தேர்தல்களில் கணக்கில் காட்டாத கருப்பு பண புழக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக நூற்றுக்கணக்கான பொது பார்வையாளர்கள், செலவின பார்வையாளர்கள், பறக்கும் படையினர் உள்ளிட்டோரை தேர்தல் கமிஷன் அதிரடியாக அமர்த்தி நடவடிக்கை எடுத்து உள்ளது.

    அவர்கள் சட்ட விரோதமான கருப்பு பண புழக்கத்தை தடுப்பதற்காக அதிரடி சோதனைகளை நடத்தி வருகிறார்கள்.

    இந்த சோதனைகளின்போது உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படுகிற பணம், விலை உயர்ந்த பொருட்கள், மது பாட்டில்கள் போன்றவற்றை கைப்பற்றி வருகின்றனர்.

    அந்த வகையில் தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து (கடந்த 10-ந் தேதி முதல்) இதுவரை நடத்தப்பட்ட சோதனைகளில் நாடு முழுவதும் ரூ.540 கோடி மதிப்பிலான ரொக்கம் மற்றும் மது பாட்டில்கள், வாக்காளர்களுக்கு வினியோகம் செய்ய எடுத்துச்செல்லப்பட்ட பரிசுப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

    இதில் தமிழகத்துக்கு முதல் இடம் கிடைத்துள்ளது. நாட்டிலேயே தமிழகத்தில்தான் அதிகபட்சமாக ரூ.107 கோடியே 24 லட்சம் மதிப்பிலான ரொக்கம் மற்றும் மது பாட்டில்கள், பரிசுப்பொருட்கள் சிக்கி உள்ளன.

    உத்தரபிரதேசம் (ரூ.104.53 கோடி) இரண்டாம் இடம், ஆந்திரா (ரூ.103.40 கோடி) மூன்றாம் இடம் இடம் பிடித்துள்ளன.

    பிற மாநிலங்களில் பிடிபட்டுள்ள ரொக்கம் மற்றும் மது, பரிசுப்பொருட்கள் விவரம்:-

    பஞ்சாப்- ரூ.92.80 கோடி, கர்நாடகம்- ரூ.26.53 கோடி, மராட்டியம்- ரூ.19.11 கோடி, தெலுங்கானா- ரூ.8.20 கோடி.

    நாடு முழுவதுமான மொத்த தொகை ரூ.540 கோடியில் ரொக்கம் மட்டும் ரூ.143 கோடியே 37 லட்சம் ஆகும். மது பாட்டில்கள் ரூ.89.64 கோடி. போதைப்பொருட்கள் ரூ.131.75 கோடி. தங்கம் மற்றும் விலை உயர்ந்த பொருட்கள் ரூ.162.93 கோடி. இதர பரிசுப்பொருட்கள் ரூ.12.20 கோடி.

    இந்த தகவல்களை தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ளது.
    Next Story
    ×