search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நிரவ் மோடியின் பங்களா வெடிவைத்து தகர்ப்பு
    X

    நிரவ் மோடியின் பங்களா வெடிவைத்து தகர்ப்பு

    மும்பை அருகே கடற்கரையில் சட்டவிரோதமாக கட்டப்பட்டு இருந்த வைர வியாபாரி நிரவ் மோடியின் பங்களா வெடி வைத்து தகர்த்து, தரைமட்டம் ஆக்கப்பட்டது. #NiravModi
    மும்பை :

    பிரபல வைர வியாபாரி நிரவ் மோடியும், அவருடைய நெருங்கிய உறவினரான மெகுல் சோக்‌ஷியும் பஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் ரூ.13,000 கோடிக்கு மேல் கடன் பெற்று மோசடி செய்து விட்டு வெளிநாட்டுக்கு தப்பி விட்டனர். இந்த மோசடி தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

    நிரவ் மோடிக்கு சொந்தமான ‘ரூபன்யா' என்ற ரூ.40 கோடி மதிப்புள்ள பங்களா வீடு மும்பை அருகே உள்ள ராய்காட் மாவட்டம் அலிபாக் கிஹிம் கடற்கரையோரத்தில் இருந்தது.

    மரம் செடி, கொடிகள் நிறைந்த பசுமையான இடத்தில் 30 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் பரந்து விரிந்து காணப்பட்ட நிரவ் மோடியின் இந்த பங்களா வீடுகள் கடற்கரை ஒழுங்குமுறை மண்டல விதிகளை மீறி, சட்ட விரோதமாக கட்டப்பட்டது தெரியவந்தது.

    இதையடுத்து, அந்த பங்களா வீட்டை இடித்து தள்ள ராய்காட் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டது. ஆனால் நிரவ் மோடியின் பங்களா வீட்டை அமலாக்கத்துறை முடக்கி வைத்து இருந்தது.

    எனவே அந்த வீட்டை இடிக்க அமலாக்கத்துறையிடம் ராய்காட் மாவட்ட நிர்வாகம் அனுமதி கோரியது. இதற்கு அமலாக்கத்துறை அனுமதி அளித்ததுடன் அந்த பங்களா வீட்டை மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைத்தது.

    இதையடுத்து, கடந்த ஜனவரியில் நிரவ் மோடியின் சட்டவிரோத பங்களா வீட்டை இடித்து தள்ளும் பணி தொடங்கியது. பொக்லைன் எந்திரங்கள் மூலம் நிரவ் மோடியின் பங்களாவை இடித்து தள்ளும் பணிகள் நடந்தன.

    அப்போது, நிரவ் மோடியின் பங்களா வீட்டில் இருந்த விலையுயர்ந்த பொருட்களை மீட்பதற்கு வசதியாக தற்காலிகமாக இடிக்கும் பணி நிறுத்தப்பட்டது. இதையடுத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் வீட்டில் இருந்த ரூ.20 லட்சம் மதிப்புள்ள அலங்கார விளக்குகள், ரூ.10 லட்சம் மதிப்புள்ள புத்தர் சிலை உள்ளிட்ட பல்வேறு பொருட்களை மீட்டனர்.



    இந்தநிலையில், பொக்லைன் எந்திரங்கள் மூலம் இடித்தால் அதிக நாட்கள் ஆகும் என்பதால், அந்த நடவடிக்கையை ராய்காட் மாவட்ட நிர்வாகம் கைவிட்டது. மாற்று வழியில் பங்களாவை இடிக்க திட்டமிடப்பட்டது.

    இதற்காக டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் தொழில்நுட்ப பல்கலைக்கழக என்ஜினீயர்கள் அங்கு ஆய்வு செய்தனர். அவர்கள் நிரவ் மோடியின் பங்களாவை வெடி வைத்து தகர்க்க பரிந்துரை செய்தனர்.

    இதன்படி நிரவ் மோடியின் பங்களா வீட்டை வெடிவைத்து தகர்க்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது. இதற்காக பங்களாவில் உள்ள முக்கிய தூண்களில் வெடிமருந்து வைக்க எந்திரம் மூலம் துளையிடப்பட்டது.

    இதையடுத்து தொழில்நுட்ப வல்லுனர் குழுவினர் வந்து 110 டெட்டனேட்டர்களை நிரப்பினர். நேற்று காலை 11.15 மணியளவில் வெடி மூலம் நிரவ்மோடியின் ரூபன்யா பங்களா வீடு நொடிப்பொழுதில் தரைமட்டம் ஆக்கப்பட்டது.

    நிரவ் மோடியின் பங்களா வீட்டை தகர்க்க 30 கிலோ வெடிபொருட்கள் பயன்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. #NiravModi 
    Next Story
    ×