search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பதி தேவஸ்தானம் சார்பில் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோருக்கு அர்ச்சகர் பயிற்சி
    X

    திருப்பதி தேவஸ்தானம் சார்பில் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோருக்கு அர்ச்சகர் பயிற்சி

    திருமலை-திருப்பதி தேவஸ்தானம் சார்பில் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோருக்கு அர்ச்சகர் பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார். #Tirupati
    திருமலை:

    திருப்பதியில் உள்ள சுவேத பவனில் திருமலை-திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் ஆலோசனைக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் தேவஸ்தான இணை அதிகாரி பி.லட்சுமிகாந்தம் கலந்துகொண்டு, இந்த ஆண்டு தேவஸ்தானம் சார்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் பற்றி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் பேசியதாவது:

    திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தின் கீழ் செயல்படும் இந்து தர்மபிரசார பரி‌ஷத் சார்பில் வாகன ஊர்வலம் மேற்கொண்டு, வெங்கடாசலபதி, பத்மாவதி தாயார் பற்றிய ஆன்மிக தகவல்களை மக்களிடையே பரப்ப வேண்டும். ஏழுமலையான் கோவிலில் நடக்கும் பிரம்மோற்சவ விழாவின்போது வாகன வீதிஉலாவுக்கு முன்னால் பல்வேறு நடன கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

    அதில் நாடு முழுவதிலும் இருந்து வந்து கலைஞர்கள் பலர் கலந்து கொள்கிறார்கள். அதேபோல் இந்த ஆண்டு திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் நடக்கும் பிரம்மோற்சவ விழாவின்போது நாடு முழுவதிலும் இருந்து கலைஞர்களை வரவழைத்து, நிகழ்ச்சியில் பங்கேற்க வைக்க வேண்டும்.

    இந்து தர்ம பிரசார பரி‌ஷத் திட்டம் சார்பில், அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் வகையில் இந்த ஆண்டு தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் ஆகிய பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு அர்ச்சகர் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. பல்வேறு ஊர்களில் சீனிவாச திருக்கல்யாண உற்சவத்தை நடத்த ஏற்பாடு செய்யப்பட உள்ளது.

    பத்மாவதி தாயார் கோவிலில் நடக்கும் ஆர்ஜித சேவைகள், தரிசன நேர விவரம், கோவில் தல வரலாறு உள்பட பல்வேறு ஆன்மிக தகவல்களை பக்தர்களுக்குத் தெரியப்படுத்த விளம்பரம் செய்ய வேண்டும். சுவரொட்டிகள் அச்சடித்து ஆங்காங்கே ஒட்ட வேண்டும். திருப்பதி பஸ், ரெயில் நிலையங்களில் விளம்பரம் செய்யப்பட வேண்டும்.

    திருமலையில், சீனிவாசா கோவிந்தா.. எனத் தொடங்கும் பாடலைபோல், பத்மாவதி தாயாரை பற்றி பக்தி பாடல்கள் அடங்கிய இசை தட்டுகள் வெளியிட வேண்டும். நாலாயிரம் திவ்ய பிரபந்தம், ஸ்ரீவெங்கடேஸ்வரா, வேத தியான சமஸ்தை, ஹரி வம்சா, சீனிவாச கல்யாணம் ஆகிய நிகழ்ச்சிகள் பற்றி இந்து தர்ம பிரசார பரி‌ஷத் சார்பில் இசை தட்டுகள் வெளியிடப்பட உள்ளது. திருமலையில் சாமி தரிசனம் செய்யும் பக்தர்கள் திருச்சானூருக்கும் வந்து தாயாரை வழிபட வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.  #Tirupati
    Next Story
    ×