search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஏழைகளின் கஷ்டம் எனக்கு தெரியும்- மேடையில் மண்டியிட்டு வணங்கி சந்திரபாபுநாயுடு உருக்கம்
    X

    ஏழைகளின் கஷ்டம் எனக்கு தெரியும்- மேடையில் மண்டியிட்டு வணங்கி சந்திரபாபுநாயுடு உருக்கம்

    விவசாய குடும்பத்தில் வளர்ந்ததால் ஏழைகளின் கஷ்டம் தனக்கு தெரியும் என்று ஆந்திர மாநில முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு உருக்கமாக பேசினார். #ChandrababuNaidu
    சித்தூர்:

    ஆந்திர மாநில முதல்-மந்திரி சந்திரபாபுநாயுடு ஒருநாள் சுற்றுப்பயணமாக நேற்று சித்தூர் மாவட்டத்துக்கு வந்தார். நேற்று காலை 9.55 மணியளவில் கண்ணவரத்தில் இருந்து விமானத்தில் புறப்பட்டு ரேணிகுண்டா வந்தார். அங்கிருந்து காலை 10.35 மணியளவில் மதனப்பள்ளி மண்டலம் சிப்பிலி கிராமத்துக்கு வந்தார்.

    அங்கு காலை 10.45 மணியில் இருந்து பகல் 11 மணிவரை நடந்த அந்திரி நீவா கால்வாய் மூலம் கொண்டு வரப்பட்ட கிருஷ்ணா தண்ணீரை சுத்திகரித்து குடிநீர் பயன்பாட்டுக்கு வினியோகம் செய்து வைத்து, திட்டத்தைத் தொடங்கி வைத்தார். அங்கு, பல்வேறு அரசு நலத்திட்டங்களை தொடக்கி வைத்தார். அங்கு பொதுக்கூட்டம் நடந்தது.

    அதில் முதல்-மந்திரி சந்திரபாபுநாயுடு பங்கேற்றுப் பேசியதாவது:-

    சித்தூர் மாவட்டத்தில் பசுமையான தொகுதி மதனப்பள்ளி. ஏனென்றால் இங்கு வெப்பம் மிகக்குறைவாக இருக்கும். அனைத்துப் பகுதிகளிலும் வெயில் சுட்டெரிக்கும். ஆனால் இங்கு குளுமையாக இருக்கும். ஆனால் குடிநீருக்கு மக்கள் அவதிப்படும் நிலை பல ஆண்டுகளாக உள்ளது.

    என்.டி.ராமாராவ், இங்கு குடிநீர் தட்டுப்பாடு வராமல் இருக்க 1984-ம் ஆண்டு அந்திரி நீவா கால்வாய் திட்டத்தைத் தொடங்கி வைத்தார். ஆனால் அதற்கு பிறகு ஆட்சிக்கு வந்த காங்கிரசார் அந்திரி நீவா கால்வாய் திட்டத்தைக் கிடப்பில் போட்டனர். இந்தத் தொகுதி மக்களுக்கு தண்ணீர் கிடைப்பது மிகவும் கடினம்.

    10 நாட்களுக்கு ஒருமுறைதான் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. அரசு சார்பில் மக்களுக்கு வாகனங்கள் மூலம் தண்ணீர் கொண்டு வந்து வழங்கி வந்தோம். நமது வாழ்க்கை இப்படித்தான் என நினைத்து, இந்தத் தொகுதி மக்கள் வாழ்ந்து வந்த நிலையில், பலர் இந்தத் தொகுதியை விட்டு வேறு ஊருக்குச் சென்று விட்டனர்.



    அடுத்ததாக நான் ஆட்சிக்கு வந்த உடனேயே முதலில் எனது சொந்த மாவட்டமான சித்தூர் மாவட்டத்தில் உள்ள மக்கள் குடிநீருக்கு திண்டாடக்கூடாது என நினைத்து இந்தத் திட்டத்தைத் தொடங்கி வைத்தேன். ரூ.12,106 கோடி செலவில் இந்தத் திட்டம் மிக வேகமாக நடந்தது. என்.டி.ராமாராவின் கனவு இன்று நிறைவேறி உள்ளது.

    நான் இந்த மாவட்டத்தில் தான் பிறந்தேன். விவசாய குடும்பத்தில் வளர்ந்தேன். ஏழைகளின் கஷ்டம் எனக்கு தெரியும். இனி 24 மணி நேரமும் மதனப்பள்ளி தொகுதி முழுவதும் மட்டுமில்லாமல் குப்பம் தொகுதிக்கும் குடிநீர் தட்டுப்பாடு வராத நிலை உருவாகி உள்ளது. மதனப்பள்ளி, குப்பம் பகுதிக்கு மின் வாரியத்துறைக்காக ரூ.10 கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. மேலும் பல்வேறு திட்டத்துக்காக சித்தூர் மாவட்டத்துக்கு ரூ.1,750 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதையடுத்து சந்திரபாபு நாயுடு பொதுக்கூட்ட மேடையில் திடீரென பொதுமக்களை நோக்கி மண்டியிட்டு தலை வணங்கினார். அப்போது கட்சி நிர்வாகிகள் அனைவரும் உணர்ச்சி பொங்க கையெடுத்து வணங்கினர்.

    கூட்டத்தில் மாநில தொழில் துறை மந்திரி அமர்நாத்ரெட்டி மற்றும் பல்வேறு தெலுங்கு தேசம் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர். #ChandrababuNaidu
    Next Story
    ×