search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புல்வாமா மாவட்டத்தில் கடும் துப்பாக்கி சண்டை- 2 பயங்கரவாதிகளை சுட்டு வீழ்த்தியது ராணுவம்
    X

    புல்வாமா மாவட்டத்தில் கடும் துப்பாக்கி சண்டை- 2 பயங்கரவாதிகளை சுட்டு வீழ்த்தியது ராணுவம்

    புல்வாமா மாவட்டம் டிரால் பகுதியில் நடந்த துப்பாக்கி சண்டையில் 2 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர். #TralEncounter
    ஜம்மு:

    காஷ்மீர் மாநிலத்தில் பதுங்கி இருக்கும் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகளை வேட்டையாடும் பணியை பாதுகாப்பு படையினர் தீவிரப்படுத்தி உள்ளனர்.

    புல்வாமாவில் கடந்த 14-ந்தேதி நடந்த தாக்குதலுக்கு பிறகு பயங்கரவாதிகளை ஒடுக்கும் வி‌ஷயத்தில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.

    குறிப்பாக புல்வாமா மாவட்டத்துக்குள் நிறைய பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக கருதப்படுகிறது. எனவே அந்த மாவட்டம் முழுவதும் தீவிர சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது.

    கடந்த வாரம் வடக்கு காஷ்மீர் பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய வேட்டையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். 5 போலீசார் மரணம் அடைந்தனர்.

    இந்த நிலையில் புல்வாமா மாவட்டத்தில் டிரால் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக நேற்று மாலை பாதுகாப்புபடைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து பாதுகாப்பு படை வீரர்கள் டிராலில் உள்ள ஒரு குடியிருப்பு பகுதியில் முற்றுகையிட்டனர்.



    ராணுவத்தின் அதிரடிப்படை வீரர்களுடன், உள்ளூர் போலீசாரும் ஒருங்கிணைந்து பயங்கரவாதிகளை கண்டுபிடிக்க தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். நேற்று இரவு ஒரு வீட்டுக்குள் பதுங்கி இருப்பது தெரிய வந்தது.

    இதைத் தொடர்ந்து பாதுகாப்பு படை வீரர்களுக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது. இன்று காலை வரை அந்த சண்டை நீடித்தது.

    இதில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்கள் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் என்று தெரியவந்தது. அவர்களை அடையாளம் காணும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.

    டிரால் பகுதியில் மேலும் சில தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதைத் தொடர்ந்து புல்வாமா மாவட்டம் முழுவதும் இணைய தள சேவைகளை பாதுகாப்பு படையினர் துண்டித்துள்ளனர்.

    இதனால் பயங்கரவாதிகள் தகவல் தொடர்பு இல்லாமல் முடக்கப்பட்டுள்ளனர். அத்தகைய பயங்கரவாதிகளை வேட்டையாடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.  #TralEncounter
    Next Story
    ×