search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மண்டியா தொகுதியில் நிகில் குமாரசாமி போட்டி: தேவேகவுடா சூசக தகவல்
    X

    மண்டியா தொகுதியில் நிகில் குமாரசாமி போட்டி: தேவேகவுடா சூசக தகவல்

    பாராளுமன்ற தேர்தலில், ஜனதா தளம்(எஸ்) கட்சி சார்பில் மண்டியா தொகுதியில் நிகில் குமாரசாமி போட்டியிடுவார் என்று தேவேகவுடா சூசகமாக தெரிவித்துள்ளார். #NikhilKumaraswamy #Devegowda
    மங்களூரு :

    முன்னாள் பிரதமரும், ஜனதா தளம்(எஸ்) கட்சியின் தேசிய தலைவருமான தேவேகவுடா நேற்று மங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மண்டியா பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் - ஜனதா தளம்(எஸ்) கூட்டணி சார்பில் சுமலதா அம்பரீஷ் போட்டுயிடிடுவாரா? என்று கேட்கிறீர்கள். அவர் மண்டியா தொகுதியில் போட்டியிட ஆர்வமாக இருப்பதுபோல்தான் எனது பேரனும், முதல்-மந்திரி குமாரசாமியின் மகனுமான நிகில் குமாரசாமியும் மண்டியா தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று ஆர்வமாக இருக்கிறார்.

    அவரும் என்னிடம் பாராளுமன்ற தேர்தலில் மண்டியா தொகுதியில் போட்டியிட டிக்கெட் கேட்டுக் கொண்டிருக்கிறார். தேர்தலில் போட்டியிட வேண்டும், அரசியலில் ஈடுபட வேண்டும் என்று அவர் விரும்பவில்லை. ஆனால் மண்டியா மக்கள் நிகில் குமாரசாமி தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று விரும்புகிறார்கள். அதனால் மண்டியா தொகுதியில் இன்று(அதாவது நேற்று) முதல் நிகில் குமாரசாமியின் பெயர் பிரபலமடையும். நிகில் குமாரசாமி தேர்தலில் போட்டியிட விரும்பினால், நாங்கள் அதை செய்வோம். மண்டியா தொகுதியில் அவர் ஜனதா தளம்(எஸ்) கட்சி சார்பில் போட்டியிட வாய்ப்புள்ளது.

    அவர் என்னிடம் வந்து நான் தேர்தலில் போட்டியிட விரும்புகிறேன் என்று கூறினார். உடனே நான் இந்த தேர்தலில் போட்டியிடுகிறாயா? என்று கேட்டேன். அதற்கு அவர் நீங்கள் என்ன சொல்கிறீர்களோ?, அதை நான் செய்கிறேன். பிரஜ்வல் ரேவண்ணா மட்டும்தான் அரசியலில் ஈடுபட வேண்டும் என்று இருப்பதாக நினைத்துக் கொள்ளாதீர்கள். அதற்காக நானும் தேர்தலில் போட்டியிட அவகாசம் கொடுங்கள் என்று கேட்கவில்லை என அவர் கூறினார்.

    அதற்கு நான் அவரிடம் நமது குடும்பம், அரசியல் குடும்பம் இல்லை. விவசாய குடும்பம். தற்போது மாநில மந்திரியாக இருக்கும் எச்.டி.ரேவண்ணா, பாராளுமன்ற உறுப்பினராக விரும்புகிறார். ஆனால் நான் அதை விரும்பவில்லை. எச்.டி.ரேவண்ணாவுக்காக நான் பல தொழில்களை தொடங்கினேன். ஒரு தொழிற்பேட்டையை ஆரம்பித்தேன். ஆனால் அவர் அதையெல்லாம் விட்டுவிட்டு அரசியலுக்கு வந்துவிட்டார்.

    அதேபோல் பிரஜ்வல் ரேவண்ணாவிடம் எம்.டெக் படித்து தொழில்களை கவனிக்குமாறு கூறினேன். ஆனால் அவருக்கு அதில் விருப்பம் இல்லை. அவருடைய மனது அரசியல் நோக்கியே இருந்தது. அவரும் அரசியலுக்கு வந்துவிட்டார். தற்போது நீயும் வந்துவிட்டாயா? என்று கேட்டேன். அதற்கு நிகில் குமாரசாமி, ஒன்றும் சொல்லாமல் சென்றுவிட்டார்.

    தற்போது எனது குடும்பத்தில் அனைவரும் அரசியலுக்கு வந்துவிட்டோம். அனைவரும் எங்களுடைய வாழ்க்கையை மக்களுக்காக சமர்ப்பணம் செய்ய உள்ளோம். பாராளுமன்ற தேர்தல் குறித்த அறிவிப்பு இன்னும் ஒருவார காலத்திற்குள் வெளியாகி விடும். கூட்டணி ஆட்சியில் கருத்து வேறுபாடுகள், குற்றச்சாட்டுகள் வரும், போகும் அவ்வளவுதான். நான் எந்தவொரு கருத்து வேறுபாட்டுக்கும் பதில் சொல்லவில்லை.

    அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர்கள்தான் குமாரசாமியிடம் நீங்கள் முதல்-மந்திரியாக இருங்கள் என்று கேட்டுக் கொண்டார்கள். பா.ஜனதா ஆட்சியை பிடித்து விடக்கூடாது என்பதற்காகத்தான் காங்கிரஸ், ஜனதா தளம்(எஸ்) கூட்டணி அமைந்தது. கூட்டணி அரசுக்கு எந்தவொரு வகையிலும் அபாயம் வர நான் விடமாட்டேன்.

    பாராளுமன்ற தேர்தலில் ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு கர்நாடகத்தில் உள்ள 28 இடங்களில் 12 இடங்கள் வேண்டும் என்று காங்கிரஸ் மேலிடத்திடம் கேட்டுள்ளேன். அதில் குறிப்பாக மண்டியா, மைசூரு தொகுதிகளை ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு ஒதுக்குமாறு வலியுறுத்தி உள்ளேன். ஆனால் காங்கிரஸ் இதுவரையில் எந்த தொகுதிகளையும் தங்களுக்கென்று கேட்டு வலியுறுத்தவில்லை.

    தொகுதி பங்கீடு குறித்து கூட்டணி ஆட்சி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நாளை(அதாவது இன்று) கூடி ஆலோசித்து முடிவு எடுக்கும். பின்னர் அந்த முடிவை பரிசீலித்து இறுதி முடிவை அறிவிக்க கட்சி மேலிடங்களிடம் ஒப்படைக்கப்படும். அது பேச்சுவார்த்தையில் முடிவுக்கு வரும். அந்த இறுதி முடிவை நான் மட்டுமல்லாது, ஜனதா தளம்(எஸ்) கட்சியினர் அனைவரும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

    காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கட்சிகளின் நோக்கமே தேர்தலில் பா.ஜனதாவை தோற்கடிக்க வேண்டும் என்பதுதான்.

    இவ்வாறு தேவேகவுடா கூறினார். #NikhilKumaraswamy #Devegowda
    Next Story
    ×