search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புத்தக வடிவில் பிரதமர் மோடியின் மன் கி பாத் வானொலி உரை- அருண் ஜெட்லி வெளியிட்டார்
    X

    புத்தக வடிவில் பிரதமர் மோடியின் மன் கி பாத் வானொலி உரை- அருண் ஜெட்லி வெளியிட்டார்

    பிரதமர் நரேந்திர மோடி மாதந்தோறும் ’மன் கி பாத்’ நிகழ்ச்சியின் மூலம் ஆற்றிய வானொலி உரைகளின் தொகுப்பு புத்தகத்தை மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி இன்று வெளியிட்டார். #ArunJaitley #MannKiBaat
    புதுடெல்லி:

    மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் ‘மன் கி பாத்’ வானொலி நிகழ்ச்சி மூலம் மக்களிடையே உரையாற்றும் பிரதமர் நரேந்திர மோடி, நாட்டில் நடைபெற்றுவரும் பல்வேறு நிகழ்வுகள் குறித்து இந்த நிகழ்ச்சியில் தனது கருத்தை பதிவுசெய்து வருகிறார்.

    மக்களின் பிரச்சனைகளைப் பற்றி அரசு அறிந்துகொள்ள ‘மன் கி பாத்’ வானொலி நிகழ்ச்சி உதவுவதாக பல சந்தர்ப்பங்களில் மோடி குறிப்பிட்டிருந்தார்.

    இந்நிலையில், கடந்த 24-2-2019 அன்று தனது 53-வது ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில், ‘எதிர்வரும் பாராளுமன்ற தேர்தல் பணிகள், பிரசாரம் ஆகியவற்றில் அடுத்த 2 மாதங்களுக்கு நாங்கள் தீவிரம் காட்ட வேண்டியுள்ளது. நானும் தேர்தலில் போட்டியிடப் போகிறேன்.

    எனவே, ஆரோக்கியமான ஜனநாயகம் நிலவும் வகையில் (பாராளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் மோடியின் வானொலி உரைக்கு தடை விதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது) மார்ச் மற்றும் ஏப்ரல் மாதம் ‘மன் கி பாத்’ வானொலி நிகழ்ச்சி மூலம் உங்களை என்னால் சந்திக்க முடியாது.

    உங்களுடைய நல்லாசிகளின் துணையால், புதுப்பிக்கப்பட்ட நம்பிக்கை மற்றும் சக்தியுடன் வரும் மே மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமையன்று (26-ம் தேதி) மீண்டும் பிரதமரின் ‘மன் கி பாத்’ நிகழ்ச்சி மூலம் உங்களுடன் கலந்துரையாடுவேன் என நம்பிக்கை தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி மாதந்தோறும் ’மன் கி பாத்’ நிகழ்ச்சியின் மூலம் ஆற்றிய 50 வானொலி உரைகளின் தொகுப்பு அடங்கிய புத்தகத்தை மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி இன்று வெளியிட்டார்.

    ’வானொலி மூலம் ஒரு சமூகப் புரட்சி’ என பெயரிடப்பட்டுள்ள இந்த புத்தகத்தில் பிரதமரின் உரைகள் மட்டுமின்றி, அவரது உரைகளுக்கு உத்வேகம் அளித்த விஷயங்கள், உரைக்கு பின்னர் சிலரிடையே ஏற்பட்ட மாறுதல் உள்ளிட்ட குறிப்புகளும் இடம்பெற்றுள்ளன.



    இந்த புத்தகத்தை வெளியிட்டு பேசிய அருண் ஜெட்லி, இந்திய விடுதலை போராட்டத்தின்போது மக்களை நேரடியாக சென்றடைய மகாத்மா காந்தி வானொலி நிகழ்ச்சிகளையே அதிகமாக பயன்படுத்தியதாக சுட்டிக்காட்டினார். அவ்வகையில், அரசின் தகவல் தொடர்பு சாதனமாக வானொலியின் மன் கி பாத் நிகழ்ச்சியை பிரதமர் மோடி பயன்படுத்திக் கொண்டதாக குறிப்பிட்டார்.

    இந்நிகழ்ச்சியில், பிரசார் பாரதி தலைவர் டாக்டர் ஏ.சூரிய பிரகாஷ், தலைமை செயல் அலுவலர் சசி சேகர் வேம்பட்டி மற்றும் தொலைக்காட்சி, வானொலி நிலைய உயரதிகாரிகள், மத்திய அரசு உயரதிகாரிகள் பங்கேற்றனர். #ArunJaitley #MannKiBaat #MannKiBaatbook #SocialRevolution #SocialRevolutiononRadio
    Next Story
    ×